அம்பானியை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் முதல் பணக்காரர் ஆன அதானி: எப்படி சாத்தியமானது?!

ஆசிய அளவிலும் முதல் பணக்காரர் அந்தஸ்த்தை தட்டிச் சென்ற அதானி!
4 CLAPS
0

அதானி குழும நிறுவனர் கெளதம் அதானி இதுவரை இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர், ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆக இருந்தார். இவரின் நிறுவனங்களின் பங்குகள் கடந்த சில ஆண்டுகளாகவே முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுக்கும் வகையில் மிகவேகமாக உயர்ந்துகொண்டிருந்த நிலையில் இந்தப் பெருமை அவருக்கு கிடைத்தது. தற்போது அம்பானியை முந்தி அதானி இந்திய அளவிலும், ஆசிய அளவிலும் முதல் பணக்காரராக உயர்ந்துள்ளார்.

அதானியின் நிகர மதிப்பு அதிகரிக்கவே இந்த புதிய உச்சத்தை எட்டியுளார். அதானியின் நிகர மதிப்பு ஏப்ரல் 2020 முதல் மிகவேகமாக அதிகரித்து வந்தது. மார்ச் 18, 2020 அன்று, அவரது நிகர மதிப்பு 4.91 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. கடந்த 20 மாதங்களில், கௌதம் அதானியின் நிகர மதிப்பு 1808 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்,

83.89 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்த காலகட்டத்தில் அவருக்குக் கிடைத்துள்ளது. அதே காலகட்டத்தில், முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு 250 சதவீதம் உயர்ந்துள்ளது, அதாவது இது 54.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகம் ஆகும்.

முன்னதாக, ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் அதானியின் தற்போதைய நிகர மதிப்பு 88.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறுகிறது. இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) தலைவர் முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பை விட வெறும் 2.2 பில்லியன் டாலர் குறைவு.

இதனிடையே தான், O2C ஒப்பந்தத்தின் சமீபத்திய நீக்கத்திற்குப் பிறகு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் சரிவை சந்திக்க, அதேசமயம் அதானி குழுமப் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகின.

அதானி எண்டர்பிரைசஸ் 2.94 சதவீதம் உயர்ந்து ரூ.1757.70 ஆக இருந்தது. அதானி போர்ட்ஸ் 4.87 சதவீதம் உயர்ந்து ரூ.764.75 ஆக உள்ளது. அதானி டிரான்ஸ்மிஷன் 0.50 சதவீதம் அதிகரித்து ரூ.1,950.75 ஆக இருந்தது, அதானி பவர் பங்குகளும் 0.33 சதவீதம் அதிகரித்து ரூ.106.25 ஆக இருந்தது. இப்படி அதானி குழுமத்தின் பங்குகள் புதிய உச்சத்தை எட்ட தற்போது முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி இந்திய அளவிலும், ஆசிய அளவிலும் முதல் பணக்காரர் இடத்தை பிடித்திருக்கிறார் அதானி.

நடப்பு ஆண்டில் இதுவரை சுமார் 55 பில்லியன் அமெரிக்க டாலர்களை தனது சொத்து மதிப்பில் சேர்த்துள்ளார் அதானி. அதுவே, முகேஷ் அம்பானி நடப்பு ஆண்டில் இதுவரை சுமார் 14.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே சேர்த்துள்ளார். 

எப்படி சாத்தியமானது?

முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி, ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக கௌதம் அதானி உருவெடுத்ததற்கு, அதானி எண்டர்பிரைசஸ் குழும சந்தை மூலதனம் காரணம் என்று ஒரு மனிகண்ட்ரோல் அறிக்கை கூறுகிறது. அதானியின் செல்வம் கடந்த சில ஆண்டுகளில் பன்மடங்கு வளர்ந்துள்ளது, குறிப்பாக அவரது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி கிரீன் இந்திய பங்குச் சந்தைகளில் பிளாக்பஸ்டராக இருக்கிறது.  இதேநேரம், ரிலையன்ஸ்-அராம்கோ ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட பிறகு அம்பானியின் நிகர மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த கூட்டணி வணிகத்தில் 20 சதவீதத்தை முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட அரம்கோ நிறுவனம், உத்தேச முதலீட்டை மறுமதிப்பீடு செய்ய முடிவு செய்துள்ளதால், RIL சமீபத்தில் தனது O2C வணிகத்தை இணைப்பதை ரத்து செய்வதாக அறிவித்தது. O2C ஒப்பந்தத்தின் சமீபத்திய நீக்கத்திற்குப் பிறகு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள்  சரிவை சந்திக்க, அதேசமயம் அதானி குழுமப் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகின.

தொகுப்பு: மலையரசு

Latest

Updates from around the world