Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

இந்தியாவின் மற்ற மாநிலங்களைத் திரும்பி பார்க்க வைத்த தமிழக தேர்தல் ரிசல்ட்!

பொதுத்தேர்தல் 2019 முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மற்ற மாநிலங்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது தமிழகத் தேர்தல் முடிவுகள்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களைத் திரும்பி பார்க்க வைத்த தமிழக தேர்தல் ரிசல்ட்!

Friday May 24, 2019 , 3 min Read

இந்தியாவின் 17வது நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 542 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் தேசிய அளவில் பாஜக காங்கிரஸ் கட்சியிடையே கடுமையான போட்டி இருந்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றதற்கு பிறகு நடக்கும் முதல் பொதுத் தேர்தல் என்பதால் தேர்தல் முடிவு குறித்த எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்தது.

போட்டியிட்ட 542 தொகுதிகளில் பாஜக 354 இடங்களில் வெற்றி பெற்று அருதிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைத் தொடர்கிறது. மற்ற மாநிலங்களில் தேசிய கட்சிகளிடையே போட்டி என்றால் தென்மாநிலங்களை பொறுத்தவரையில் மாநில கட்சிகளே வெற்றியை தீர்மானிக்கும் சக்திகள். அந்த வகையில் தமிழகத்தில் எந்தக் கட்சி வெற்றி வாகை சூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.



தமிழகத்தின் ஜாம்பவான் அரசியல் தலைவர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவிற்குப் பின்னர் நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் என்பதால் மக்களின் மனதில் எந்த கட்சிக்கு நல்ல அந்தஸ்து இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் காரணிகளாக இருந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40 இடங்களில் கடந்த முறை அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது, தற்போது வேலூர் நாடாளுமன்ற தொகுதி தவிர்த்து எஞ்சிய 39 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

மே 23 அன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலை நிலவரத்தில் திமுக முதன்மை பெற்றது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 2 இடங்களிலும், மதிமுக, இந்திய ஜனநாயகக்கட்சி மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை தலா 1 தொகுதியிலும் பிரதான கட்சியான திமுக 19 இடங்களிலும் போட்டியிட்டது.


திமுக அமோக வெற்றி


தேர்தல் முடிவுகள் குறித்த பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி போட்டியிட்ட 38 தொகுதிகளில் தேனி மக்களவைத் தொகுதி தவிர மற்ற தமிழகத்தின் 37 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  


அதிமுகவிற்கு வெற்றி தந்த தேனிதொகுதி


தேனி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறங்கிய ஈவிகேஎஸ் இளங்கோவனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் (துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்) ரவீந்திரநாத் வெற்றி பெற்றுள்ளார். 39 தொகுதிகளில் அதிமுகவிற்கு வெற்றியை பெற்றுத் தந்துள்ளது இந்த ஒரு தொகுதி மட்டுமே.



புதுச்சேரி நிலவரம்


புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கம் வெற்றி வாகை சூடியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதை தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


3ம் இடத்தில் மக்கள் நீதி மய்யம்


திமுக அதிமுக கூட்டணி கட்சிகளிடையே இருந்த நேரடி போட்டி ஒரு புறம் என்றால் புதிதாக கட்சி தொடங்கி தேர்தல் களம் கண்ட நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனிக்கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்த டிடிவி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சிகளின் அரசியல் செல்வாக்கு எப்படி என்பதை அறியும் தேர்தலாகவும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் இருந்தது. அரசியல் அனுபவம் இல்லாவிட்டாலும் முதலில் தேர்தல் களம் கண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை பின்னுக்குத் தள்ளி திமுக, அதிமுகவிற்கு மாற்று சக்தியாக மக்கள் நீதி மய்யம் இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாகசில தொகுதிகளில் மநீம வேட்பாளர்கள் அதிக வாக்குகளைப் பெற்று 3வது இடத்தை பெற்றுள்ளனர். பொள்ளாச்சி, மத்திய சென்னை தென்சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளனர்.


சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள்


நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமின்றி தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலுக்கான முடிவுகளும் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 13 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது அதிமுக கூட்டணி 9 இடங்களில் வெற்றி கண்டுள்ளது.



கட்டுரையாளர் : கஜலட்சுமி