டஜன் மாம்பழம் 1.2 லட்ச ரூபாய்க்கு விற்ற 11 வயது சிறுமி: படிப்புக்கு மொபைல் போன் வாங்க குவிந்த உதவிகள்!

வைரல் வீடியோவால் கிடைத்த உதவி!
67 CLAPS
0

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூரில் ஒரு மாணவி ஒரு டஜன் மாம்பழத்தை ரூ.1.25 லட்சத்துக்கு விற்றுள்ளார். இந்த விற்பனைக்கு பின்னால் நெகிழவைக்கும் பின்னணி ஒன்று உள்ளது.

தற்போதுள்ள கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள மொபைல் போன் அவசியமாகியுள்ளது. ஆனால் இதே கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தியாவில் இருக்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பலரால் தங்கள் குழந்தைகளுக்கு மொபைல் போன் வாங்க முடியாத அவஸ்தையில் உள்ளனர்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் இந்த துளசி குமாரி என்ற மாணவி. நிதிக் கட்டுப்பாடு காரணமாக ஆன்லைன் வகுப்பில் படிக்க மொபைல் போன் வாங்க முடியாத நிலையில் இருந்துள்ளார் சிறுமி துளசி. இதையடுத்து தான் மொபைல் போன் வாங்க காசு சேகரிக்கும் முயற்சியாக மாம்பழம் வாங்கி விற்று வந்துள்ளார்.

இதற்கிடையே, சிறுமியிடம் மாம்பழம் வாங்கிய ஒரு வாடிக்கையாளர், இந்த விஷயங்களை அறிந்து சிறுமி மாம்பழம் விற்பதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டார்.

தெரியாத ஒருவரால் படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோ வைரலாக, தற்போது சிறுமிக்கு உதவிகள் குவிந்து வருகிறது. மும்பையைச் சேர்ந்த வால்யூபல் எடுடெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் சிறுமியின் நிலையை உணர்ந்து அவருக்கு உதவும் விதமாக,

அவரிடம் இருந்த ஒரு டஜன் மாம்பழங்களை ரூ .1.2 லட்சத்திற்கு வாங்கியது. இந்த பணத்தை அவரின் வங்கிக் கணக்கு அனுப்ப, இந்தத் தொகையை கொண்டு தற்போது சிறுமி துளசி குமாரி புது போன் ஒன்றை வாங்கி தனது ஆன்லைன் வகுப்பை தொடர்ந்துள்ளார்.

”ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாத வேதனையை என்னால் தாங்க முடியவில்லை. எனவே ஒரு ஸ்மார்ட்போன் வாங்கி படிப்பைத் தொடர மாம்பழங்களை விற்க முடிவு செய்தேன். இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை லாக்டவுனின்போது ஒருவர் என்னிடம் வந்து இந்த வீடியோவை எடுத்தார். அதன் பிறகு தான் இந்த உதவிகள் அனைத்தும் கிடைத்தது.

”இப்போது எனக்கென்று சொந்த மொபைல் போன் வந்துவிட்டது. இதன் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் தவறாமல் கலந்துகொள்ள முடிகிறது. இந்த சம்பவங்கள் எனக்கு நிறைய மகிழ்ச்சியை கொடுத்துள்ளன," என்று நெகிழ்ந்து பேசியிருக்கிறார் சிறுமி துளசி.

துளசியின் தாய் பத்மினி தேவி, நிதி உதவி கிடைத்ததில் எங்களுக்கு நிறையவே மகிழ்ச்சி. எனது மகள் நன்றாக படிக்கக் கூடியவள். அவள் தனது வாழ்க்கையில் ஏதாவது சாதிப்பாள் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்கு ஊக்கமாக அமைந்துள்ளது இதுபோன்ற உதவிகள், என்று கூறியிருக்கிறார். 

தகவல் உதவி- newindianexpress | தமிழில்: மலையரசு