சேற்றிலும், குப்பைகளிலும் ’தங்கவேட்டை’- நாளொன்றுக்கு கிடைக்கும் 1 லட்ச ரூபாய் தங்கம்!

தெருவோரச் சேற்றுகளை அள்ளி வடிக்கட்டி, தங்கத்துகள்களை பிரித்தெடுத்து நாள்தோறும் ரூ200 முதல் 20,000வரை வருமானம் ஈட்டி பிழைப்பை நடத்துகின்றனர் தங்க வேட்டையர்கள்.
243 CLAPS
0

நள்ளிரவு 3 மணி. அனேகமானோர் நிசப்தமான இரவில் நீளும் நினைவுகளோடு பயணப்பட்டு கொண்டிருக்கும் வேளை. ஆனால், இந்தியாவின் பெரும்பாலான மெட்ரோ நகரங்களில் நள்ளிரவு 2 மணிக்கு மேல் விடியலை நோக்கி ஒரு தனி உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் சிறு குழுவாய் சாலையோரங்களில் அமர்ந்து செய்திதாள்களை பிரித்து கொண்டிருக்க, சிலர் பால் பாக்கெட்களை டெலிவரி செய்வதற்காக ஏற்பாடுகளை மும்மரமாய் செய்ய, சில குடும்பங்கள் பூஜைக்கு வேண்டிய பூக்களை பார்சல் கட்ட என்று விடியலின் தேவைகளுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருக்கும் பல தரப்பட்ட மனிதர்களால் இயக்கப்படுகிறது அந்த உலகம்.

இவ்வழக்கமான காலை சடங்குகளுக்குள் புதிதாய் இணைந்துள்ளது இளைஞர் குழு. அவர்களுடைய பணிநேரத்திற்காக காத்திருக்கும் அவர்கள், திடீரென்று துடைப்பங்களைக் கொண்டு கூட்டி குப்பைகளை அள்ளி, சேற்றுகளை அப்புறப்படுத்துகின்றனர். ஆனால், அவர்கள் ஸ்வச் பாரத் இயக்கத்தினால் கவரப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் “தங்க வேட்டைக்காரர்கள்”.

ஆம், டில்லியின் கரோல்பாக், சாந்தினி சௌக் மற்றும் தங்கப் பிரியர்களின் சொர்க்கமாக விளங்கும் ஜவேரி பஜார் பகுதிகளில் உள்ள தங்கநகை கடைகளும், பட்டறைகளும் மூடியப்பிறகு, தொடங்குகிறது தங்கவேட்டையர்களுக்கான பணி. கடையின் வெளிப்புறத்தில் உள்ள குப்பைகள் மற்றும் சேற்றுகளை கிலோ கணக்கில் அள்ளி சலித்து அவற்றில் தங்கத் துகள்களும், வெள்ளி பீஸ்களும் கிடக்கின்றதா என்ற தேடுதலில் இறங்கிவிடுகின்றனர். அதிலிருந்து தங்க குவியலும் கிடைக்கப் போவதில்லை, இப்பணி செய்து செல்வந்தராக போவதுமில்லை. ஆனால், அன்றைய நாளுக்கான வருமானமாய் ரூ 200 முதல் ரூ2,000 வரை சம்பாதித்துக் கொள்கின்றனர்.

டெல்லியில் 24 காரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை தோராயமாய் ரூ.32,000 எனில், அதே மதிப்பிலான பவுனுக்கு இவர்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை கிடைக்கின்றது.

பெரும்பாலும் நகரங்களில் சில பகுதிகள் குறிப்பிட்ட பொருள்களுக்கான சந்தை மையமாக விளங்கும். அப்படி, மும்பையின் தங்க மையம், ‘ஜவேரி பஜார்’. இந்தியாவின் தங்க வர்த்தகத்தில் 60சதவீதத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள சந்தையில், 7,000-க்கும் மேற்பட்ட தங்க நகைக் கடைகளும், பட்டறைகளும் அடங்கும். அதில் பெருவாரியான கடைகளின் மொத்த பரப்பளவு 150 சதுர மீட்டர் மட்டுமே. ஆனால், அவைகள் நாளொன்று கோடிகளில் வர்த்தகம் செய்து வருகின்றன.

ஜவேரி பஜார் போன்று டில்லியின் பிற பகுதிகளாக ரெகார்புரா, கரோல்பாக்கில் உள்ள டெஸ் பந்து குப்தா மார்க் மற்றும் சாந்தினி சௌக்கில் உள்ள டரிபா கலன் ஆகிய பகுதிகளிலும் பதிவு செய்யப்பட்ட, செய்யப்பாடாத என்று 2,000 தங்க நகைக் கடைகளும், பட்டறைகளும் உள்ளன.

இந்த நகை பட்டறைகளில் பணிப்புரியும் நகை ஆசாரிகள், அவர்களது வேலை முடிந்து நாள் முடிவில் வீட்டிற்கு செல்கையில், அவர்களது தலை முடி, ஆடைகளுடன் ஒட்டிக் கொண்டு சில தங்கத்துகள்களும் வெளியேறி விடுகின்றன. சில நகை ஆசாரிகள் வேலை முடிந்த பிறகு, கை, கால்களை சுத்தம் செய்கையில் சில தங்கத்துகள்கள் வடிகால் வழியாகவும் வெளியேறுகின்றன.

“நகைப் பட்டறையின் வெளிப்புறத்தில் தங்கத்துகள்கள் மண்ணுடன் கலந்து கிடக்கும். நாங்கள் அதை கண்டறிந்து எங்களுக்கான பிழைப்பை தேடிக் கொள்கிறோம். இல்லையென்றால், அது வீணாய் மண்ணிலே புதைந்து போகும். எப்படி சலூன் கடைக்கு போய் வெளிவரும் போது வெட்டிய முடிகள் சில ஒட்டிக்கொண்டு வருகின்றது. அது போல் தான் தங்கத் துகள்களும் ஒட்டிக் கொண்டு வந்துவிடும்,” என்கிறார் டில்லி தங்கவேட்டையர்களுள் ஒருவரான முகமது சலில்.

சலிலுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் மண்ணிலிருந்து தங்கத்தை சலித்தெடுக்க உயர்ந்த கருவிகளோ, கலைக்கூடங்களோ தேவைப்படுவதில்லை. தேவ் நகர் சேரிக்கு அருகிலுள்ள பெரும் திறந்தவெளி பரப்பே அவர்களின் பணிநிலையம். மண்ணை சுத்தப்படுத்துவதற்கு அவர்கள் தொடர்ந்து பாயும் நீரின் வசதிதையையும் ஏற்பாடு செய்துள்ளனர். தங்கத்தை பிரித்தெடுத்து போக எஞ்சியவைகளை அகற்றுவதற்கு அவர்கள் பெரிய குழிகளையும் தோண்டி வைத்துள்ளனர்.

அதிகாலை கோணிச் சாக்குகளிலும், வட்டைகளிலும் அள்ளிவரப்பட்ட சேற்றுகளையும், குப்பைகளையும் கொண்டு தங்கத்துகள்களுக்கான தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.

“வெறும் கண்களால் மண்ணில் கலந்துள்ள தங்கத்தினை கண்டறிவது எளிதல்ல. பாத்திரத்தில் பாதி மண்ணில் தெளிந்த தண்ணீரைக் கலந்து, உன்னிப்பாக விரல்களை கொண்டுதடவ வேண்டும். சிறிது எடை அதிகம் கொண்ட தங்கம் என்றால் பாத்திரத்தின் அடிப்பகுதியிலே தங்கிவிடும். மற்ற துகள்களை பிரித்தெடுக்க, பாத்திரத்தில் நீரை ஊற்றி மீண்டும் மீண்டும் அலச வேண்டும். அவ்வாறு, ஒவ்வொரு அலசலுக்கு பின்பும் பிரித்தெடுத்த மண்ணை வெளியில் போட்டுவிடுவேன். இதனால், இறுதியில் தங்கத்துகள்கள் குறைந்த மணலுடன் தேங்கி நிற்கும். இப்போது அவற்றை வெறும் கண்ணால் பார்க்க முடிந்தாலும், அவற்றை கையால் எடுக்க முடியாது,” என்கிறார் இத்தொழிலில் ஈடுபட்டுவரும் முகமது லாலா.

இப்படியாக நீரில் பிரித்தெடுக்கும் செயல்முறை இரண்டு மணிநேரங்கள் நடைபெறுகிறது. அதற்கு அடுத்த படிநிலையாய் எஞ்சியிருக்கும் தங்கம் கலந்து மண்ணில் உள்ள இரும்புத்துகள்களை காந்தத்தினை கொண்டு அகற்றுகின்றனர்.

“எஞ்சியிருக்கும் கலவையுடன் பாதரசத்தை சேர்த்து, பின்பு அக்கரைசலை சூடேற்ற வேண்டும். இச்செயல்முறையின் மூலம் பாதரசத்திலிருந்து தங்கம் தனியாய் பிரித்தெடுத்துவிடலாம்,” என்கிறார் லாலாவுடன் இணைந்து பணியாற்றும் அஸ்லம் கான்.

பிரித்தெடுக்கப்பட்ட தங்கத்தினை சிறிய உலையில் வைத்து சூடேற்றி பந்து போன்று தங்கத்தினை ஆக்குவதே, இதன் கடைசி படிநிலையாகும். “தூய நிலையில் நமக்கு தங்கம் கிடைப்பதில்லை. அதனால், மார்க்கெட்டில் உள்ள தங்கத்தின் மதிப்பு கிடைக்காது. ஆனால், 300 முதல் 400 மில்லி கிராம் தங்கத்திற்கு ரூ.700 முதல் 1,200 ரூபாய் வரை கிடைக்கும். அன்றைய பொழுது எனக்கான நாளாக இருந்தால், சிறுச்சிறு தங்கப் பீஸ்களும் கிடைக்கும். ஒரு முறை விசேஷத் தினத்தில் இரண்டு கிராம் தங்கம் கிடைத்தது” என்றார் அவர்.

தேவ் நகர் பகுதியில் இத்தொழிலைக் கொண்டு பிழைப்பு நடத்தும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வழிகாட்டியாக உள்ள தீபக் சிங் கூறுகையில்,

“நாள்தோறும் ரூ.1லட்சம் முதல் 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 40-60 கிராம் தங்கம் சேகரித்து வருகிறார்கள். ஒரு நாளுக்கு ஒருவருக்கு ரூ.1000 வரை வருமானம் கிடைக்கிறது,” என்றார்.

பின்புறத்தில் நடக்கும் இத்தொழில் குறித்து, தங்க வணிகர்களும், பொற்கொல்லர்களும் பொருட்படுத்தி கொள்வதில்லை. டில்லியின் கரோல்பாக் பகுதியில் நகைக் கடை நடத்தி வரும் சந்தன் ராஜ் ஆனந்த் கூறுகையில், “எங்களது நகை ஆசாரிகள் கடையிலிருந்து வெளியில் செல்லும் முன் அவர்களை சுத்தம் செய்து கொண்டே வெளியேறுகிறார்கள். ஆனாலும், தங்கத்துகள்கள் வெளியேறத் தான் செய்கிறது. எங்க கடைக்குள்ளும் தங்கத் தூசிகள் சேகரிப்போம். அவைகள் ஆண்டுக்கு ஒரு முறை விற்பனை செய்கையில் ஒரு சாக்கு தங்கத்தூசியை ரூ1000 முதல் 2,000 ரூபாயுக்கு வாங்கிச் செல்கின்றனர். டில்லி மற்றும் இதர மாநிலங்களில் உள்ள மக்கள் எங்களிடம் மொத்தமாக வாங்கிசெல்கின்றனர்”என்றார்.

இத்தொழிலால் வருமானம் ஈட்டினாலும், ஆசிட், மெர்குரி மற்றும் அழுக்கு நீருடன் பணியாற்றுவது தங்க வேட்டைக்காரர்களது கைகள் கரடுமுரடாகுவதுடன், தலைமுடியும் கொட்டி விடுகிறது.

‘நாங்கள் தினந்தோறும் தங்கத்தை சேகரிக்கிறோம். ஆனால் எங்கள் மனைவிமார்களோ, அம்மாக்களோ தங்க நகைகளை எப்போதும் அணிந்திருந்ததில்லை. எங்கள் வேலையின் அழுக்கடைந்த தன்மையால், எங்களில் பலர் எங்களிடம் குடும்பத்தாரிடமே என்ன வேலை செய்கிறோம் என்பதையே மறைத்து, கூலித் தொழிலாளர்களாக வேலை செய்கிறோம் என்று கூறியுள்ளாம்,” என்றார் பப்பு லால் எனும் தொழிலாளி.

ஒவ்வொரு நாளின் முடிவிலும், லால் உடல் துர்நாற்றத்தை அகற்ற இரண்டு முறை குளிக்கின்றாராம். ‘நான் குளிக்காமல் வீட்டிற்குச் சென்றால் என் குழந்தைகள் என்னுடன் சேர்ந்து சாப்பிட மாட்டார்கள்,” என்றார் வருந்தியகுரலுடன் லால்.

தங்கவேட்டையர்களுக்கு இருக்கும் இன்னல்களுக்குள் ஒன்று, எந்த நகை கடையில் திருட்டு என்றாலும் போலீஸ் முதலில் சந்தேகிப்பது இவர்களைத் தான்.

“நாங்கள் வாடிக்கையான சந்தேக நபர்கள். ஆனால், இதுவரை யாரும் எந்தவொரு திருட்டு வழக்கிலும் கைதாகியதில்லை. நாங்கள் தங்க முட்டையிடும் வாத்தை வைத்திருக்கிறோம். ஒரு போதும் வாத்தையும் கொல்ல மாட்டோம். எங்களது தங்க முட்டைகளையும் இழக்க மாட்டோம்,” என்றார் இறுதியாய் தீபக் சிங்.

தகவல் மற்றும் படங்கள் உதவி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்