நியூஸ் வியூஸ்

ISRO நிறுவனர் விக்ரம் சாராபாயை கவுரவித்த கூகுள் அசத்தல் டூடுல்...

இந்திய விண்வெளி ஆய்வின் தந்தை என போற்றப்படும் விஞ்ஞானி விக்ரம் சாராபாயை கவிரவுக்கும் சிறப்பு டூடுல் சித்திரத்தை கூகுள் தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

cyber simman
12th Aug 2019
12+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

இந்திய விண்வெளி ஆய்வின் தந்தை என போற்றப்படும் விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் தனது தேடியந்திரத்தில் அவருக்கான பிரத்யேக டூடுல் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.


முன்னணி தேடியந்திரமான கூகுள் அறிஞர்கள் மற்றும் சாதனையாளர்களை கவுரவிக்கும் வகையில் அவர்கள் பிறந்த தினங்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகளில் பிரத்யேக டூடுல் சித்திரத்தை தனது லோகோவில் வெளியிட்டு வருகிறது.


அண்மையில் கூட, இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்களில் ஒருவர், முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர், சீர்த்திருத்தவாதி என பல பெருமைகளைக் கொண்ட டாக்டர்.முத்துலட்சுமியின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவு போற்றும் டுடூலை கூகுள் வெளியிட்டது.

vikram

தற்போது, இஸ்ரோ நிறுவனரும், இந்திய விண்வெளி ஆய்வின் தந்தை என போற்றப்படுபவருமான விக்ரம் சாராபாய் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரை கவுரவிக்கும் சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.


பின்னணியில் கூகுள் எழுத்துகள் நீல நிறத்தில் பளிச்சிட விக்ரம் சாராபாயின் கம்பீரமான தோற்றம் நடுவே அமைந்துள்ளது. கூகுளின் எல் எழுத்து சீறிப்பாயும் ராக்கெட் போல அமைந்துள்ளது. சாராபாய் மார்புக்குக் கீழே நிலவு மின்னுவது போலவும் டூடுல் அமைந்துள்ளது. சாராபாயை சிறப்பிக்கும் இந்த டூடுலை இந்திய ஓவியர் பவன் ராஜ்குமார் உருவாக்கியுள்ளார்.


விக்ரம் சாராபாய் டூடுலில் கிளிக் செய்தால் அவரைப்பற்றிய தேடல் முடிவுகள் கொண்ட பக்கத்திற்கு கூகுள் அழைத்துச் செல்கிறது. கூகுள் தனது வலைப்பதிவிலும், விக்ரம் சாராபாய் வாழ்க்கைக் குறிப்பு மற்றும் சாதனைகள் பற்றி குறிப்பிட்டுள்ளது.


1919ம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத்தில் பிறந்த சாராபாய், குஜராத் கல்லூரியில் பயின்ற பிறகு இங்கிலாந்து சென்று அங்குள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் பயின்றார். டாக்டர் பட்டம் பெற்று நாடு திரும்பியவர், இந்திய சுதந்திரம் அடைந்த ஆண்டில் அகமதாபாத்தில் இயற்பியல் ஆய்வு மையத்தை அமைத்தார்.


சோவியத் யூனியன் முதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய போது, இந்தியாவும் இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று அவர் அரசிடம் வலியுறுத்தினார். இதன் பயனாக 1962ல் உண்டாக்கப்பட்ட, விண்வெளி ஆய்வுக்கான தேசியக் குழு, பின்னர் இஸ்ரோவாக உருவானது. அதிக வசதி இல்லாத நிலையில், திருவனந்தபுரம் தும்பா அருகே ராக்கெட் ஏவுதளத்தை அமைத்தார். 1963ல் முதல் ராக்கெட் ஏவப்பட்டது.


இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆர்யபட்டா உருவாக்கத்திலும் இவர் முக்கியப் பங்காற்றினார். இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே சாராபாய் மறைந்துவிட்டாலும், இந்திய விஞ்ஞானிகளுக்கும், விண்வெளி ஆய்வு முயற்சிகளுக்கும், சாதனைகளுக்கும் ஊக்கமாக அமைந்திருக்கிறார்.


அண்மையில் இஸ்ரோ நிலவுக்கு ’சந்திராயன் 2’ விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. சாராபாய் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இதன் லேண்டருக்கு விக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கூகுளும் தனது லோகோவை சாராபாய்க்காக டுடூல் சித்திரமாக மாற்றி அமைத்துள்ளது.

சாதனை மனிதர்

கூகுள் டூடுலை வரைய வேண்டும் என்பது தனது கனவு என்றும், இந்திய விண்வெளி ஆய்வின் தந்தை நினைவாக டூடுல் வரைவதற்கான வாய்ப்பு கதவைத் தட்டியதும் பெருமையும் உற்சாகமும் அடைந்ததாக, இந்த டூடுலை வரைந்த பவன் ராஜ்குமார் கூகுள் வலைப்பதிவில் கூறியுள்ளார்.


எந்த ஒரு கலைஞருக்கும் இது போன்ற வாய்ப்பு பெரிய விஷயம் என்றும், மிகுந்த உற்சாகத்தோடு ஆய்வு செய்து இந்த சித்திரத்தை உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.12+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags