கூகுள் தாய் நிறுவனத்தின் வருவாய் 4-ம் காலாண்டில் 96.5 பில்லியன் டாலராக அதிகரிப்பு!
2025ல் கூகுள், ஏஐ மற்றும் கிளவுட் விரிவாக்கத்தில் கவனம் செலுத்தி, 75 பில்லியன் டாலர் மூலதன செலவுகளை மேற்கொள்ள உள்ளது.
கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பபெட், நான்கான் காலாண்டில் ஆண்டு அடிப்படையில் 12 சதவீத வளர்ச்சி ஏற்பட்டு 96.5 பில்லியன் டாலர் வருவாய் பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு திட்டங்கள் மற்றும் கிளவுட் சேவைகள் வலுவான நிதி நிலை முடிவுக்கு உதவியுள்ளன.
நிகர லாபம் 28 சதவீதம் அதிகரித்து 26.5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. பங்கு ஒன்றுக்கான வருமானம் 31 சதவீதம் அதிகரித்து 2.15 டாலராக உள்ளது. செயல்பாட்டு லாபம் 31 சதவீதம் அதிகரித்து 31 பில்லியன் டாலராக உள்ளது. செயல்பாட்டு லாப விகிதம் ஐந்து சதவீத புள்ளிகள் உயர்ந்து 32 சதவீதமாக உள்ளது.
“ஏஐ துறையில் எங்கள் தலைமை மற்றும் பல்வேறு வர்த்தகங்களில் இயக்கம் காரணமாக வலுவான நான்காம் காலாண்டு அமைந்துள்ளது, என நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
கம்ப்யூட்டிங் செயல்முறையை திறன் மிக்கதாக்குவதில் முன்னேறி ஏஐ சேவைகளை வேகமாக அறிமுகம் செய்து வருகிறோம், என்றும் தெரிவித்தார்.

தேடல் மற்றும் யூடியூப் விளம்பர வருமானம் உள்ளடக்கிய கூகுள் சர்வீசஸ் 84.1 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. இது ஆண்டு அடிப்படையில் 10 சதவீத வளர்ச்சி. விளம்பர வருவாய் 72.5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. யூடியூப் விளம்பர வருவாய் 9.2 பில்லியன் டாலரில் இருந்து 10.5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
கூகுள் கிளவுட் வருவாய் 30 சதவீதம் அதிகரித்து 12 பில்லியன் டாலராக உள்ளது. ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் ஜென் ஏஐ சேவைகள் இதற்கு உதவின. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த பிரிவின் செயல்பாட்டு வருமானம் 864 மில்லியன் டாலரில் இருந்து 2.1 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
சோதனை முறையிலான வர்த்தகங்களில் வருவாய் 657 மில்லியன் டாலரில் இருந்து 400 மில்லியன் டாலராக குறைந்துள்ளது. செயல்பாட்டு நஷ்டம் 1.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இந்த காலாண்டில் நிறுவனம் 15.6 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை திரும்ப வாங்கியது மற்றும் காலாண்டு ஊக்கத்தொகை திட்டத்தை அறிமுகம் செய்து, பங்குதாரர்களுக்கு 2.4 பில்லியன் டாலர் அளித்தது. மூலதன செலவுகள் 14.3 பில்லியன் டாலராக அமைந்தது. ஏஐ மற்றும் தரவுகள் மைய உள்கட்டமைப்பு சார்ந்து அமைந்திருந்தது. நிறுவனத்தில், உள்ள ஊழியர்கள் 183,323 ஆக உயர்ந்துள்ளனர்.
2025ல் நிறுவனம் ஏஐ மற்றும் கிளவுட் விரிவாக்கத்தில் கவனம் செலுத்தி, 75 பில்லியன் டாலர் மூலதன செலவுகளை மேற்கொள்ள உள்ளது. ஏஐ சார்ந்த கூகுள் ஓவர்வியூ சேவை போன்றவை பயனர் ஆர்வத்தை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"எங்கள் நிதி நிலை முடிவுகள், ஏஐ புதுமையாக்கம் தொடர்பான மாறுபட்ட புல்ஸ்டேக் அணுகுமுறை மற்றும் மைய வர்த்தகத்தில் கவனம் ஆகியவற்றை உணர்த்துகிறது. எதிர்வரும் வாய்ப்புகள் குறித்து நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்று சுந்தர் பிச்சை கூறினார்.
ஆங்கிலத்தில்: சயான் சென், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan