அரசு ஊழியர் டு ஐ.ஏ.எஸ் அதிகாரி - தமிழகத்தில் UPSC தேர்வில் 2வது இடம் பிடித்த இளைஞரின் கதை!
யுபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் 2-ஆம் இடம் பிடித்த நாமக்கல் அரசு ஊழியர் சாதனை பிடித்துள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் 2-ஆம் இடம் பிடித்த நாமக்கல் அரசு ஊழியர் சாதனை பிடித்துள்ளார்.
மத்திய அரசின் தேர்வாணையம் இந்திய குடிமைப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்திய வனத்துறை, இந்திய வருவாய்த் துறை ஆகிய பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களைத் தேர்வு செய்து வருகிறது.
இந்தத் தேர்வு முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய 3 சுற்றுக்களைக் கொண்டது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வை எழுத வேண்டும். இதில் தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
அதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெற்றது. நேர்காணல் ஜனவரி முதல் மே வரை நடைபெற்றது. நேர்காணலில் பங்கேற்ற 933 பேரில் தேர்ச்சி பெறுவோர் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, பி பணிகளில் அவர்களது தகுதிக்கு ஏற்ப நியமிக்கப்படுவர்.
சமீபத்தில் அகில இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியானது. இறுதியாக தகுதி பெற்ற 933 பேரில் தேசிய அளவிலான முதல் 4 இடங்களை பெண்கள் கைப்பற்றி இருந்தனர். தேர்ச்சி பெற்ற முதல் 25 பேரில் 14 பேர் பெண்கள், 11 பேர் ஆண்கள் ஆவார்கள். இதில், தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்கள் பலரும் சாதனை பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 2வது இடம்:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் ராம கிருஷ்ணசாமி என்பவர் தமிழக அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன்- தனலட்சுமி தம்பதியர் மகன் ராமகிருஷ்ண சாமி(28). சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2016ம் ஆண்டு பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தார்.
அதன் பிறகு, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ராம கிருஷ்ணசாமி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய பொறியியல் துறை பணியாளர்களுக்கான தேர்வில் வெற்றி பெற்று, 2019-ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் உதவி பொறியாளராக பணியமர்த்தப்பட்டார்.
அரசு ஊழியர் டு ஐஏஎஸ் ஆபீசர்:
அரசு வேலையில் அமர்ந்திருந்தாலும், ராம கிருஷ்ணசாமிக்கு ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவு இருந்து வந்துள்ளது. இதற்காக 2019ம் ஆண்டு முதல் 2022 வரை நான்கு ஆண்டுகளுக்கு சிவில் சர்வீஸ் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்துள்ளார்.
முதல் மூன்று முறை தேர்வில் தொடர் தோல்விகளை சந்தித்தாலும், விடாமுயற்சியின் காரணமாக 2022ல் நான்காவது முறையாக எழுதிய தேர்வில், அகில இந்திய அளவில் 117வது இடத்தையும், தமிழக அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
நாமக்கல் பேருந்து நிலையம் அருகே தனியாக அறை எடுத்து தங்கி பணியாற்றி வந்த இவர், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இரவு, பகல் பாராமல் படித்து தற்போது இந்த சாதனையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘அப்பா பெயரை தப்பாமல் காப்பாற்றிய மகன்’ - யூபிஎஸ்சி தேர்வில் சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் மகன் தேர்ச்சி!