சாலை வசதியில்லா கிராமத்தில் பிறந்து 6000 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனம் அமைத்த ஜிஆர் அகர்வால்!

கிராமத்தில் சாலை வசதி ஏற்படுத்த சிறியளவில் சாலை கட்டுமானப் பிரிவில் செயல்படத் தொடங்கிய ஜி ஆர் அகர்வால் 6,028 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் GR Infraprojects நிறுவனத்தை கட்டமைத்துள்ளார்.
1 CLAP
0

குமானி ராம் அகர்வால் என்கிற ஜிஆர் அகர்வால் 60-களில் ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார். அந்த சமயத்தில் இந்தப் பகுதி பாலைவனம் போல் இருந்துள்ளது. எங்கும் வறட்சி. முறையான சாலை வசதிகள் இருக்காது. வியாபாரம் செய்பவர்கள் அருகிலுள்ள கிராமங்களுக்கோ நகரங்களுக்கோ அத்தனை எளிதாக போய்விட முடியாது.

மக்கள் இத்தனை அவதிப்பட்டாலும் அரசாங்கமும் சாலை வசதி ஏற்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் தானே சாலை அமைக்கும் வணிகத்தை எடுத்து நடத்தலாம் என ஜிஆர் அகர்வால் 1965-ம் ஆண்டு முடிவு செய்தார்.

முதலில் சிறு பார்ட்னர்ஷிப் நிறுவனமாக ஜெய்செல்மர் பகுதியில் உள்கட்டமைப்பு புராஜெக்ட் ஒன்றை மேற்கொண்டார். இப்படித் தொடங்கிய இவரது முயற்சி GR Infraprojects என்கிற சாலை கட்டுமானம் தொடர்பான பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான (EPC) வணிகமாக உருவெடுத்துள்ளது.

2020 நிதியாண்டில் GR Infraprojects நிறுவனத்தின் டர்ன்ஓவர் 6,028 கோடி ரூபாய்.

“எங்கள் கிராமத்தில் சாலை வசதி இல்லை. மிகவும் கஷ்டப்பட்டோம். என் அப்பா எத்தனையோ சவால்களைக் கடந்து கட்டுமான நிறுவனத்தைத் தொடங்கினார். கிராமத்தில் வாழ்ந்த எனக்கும் என் சகோதரர்களுக்கும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒவ்வொருவராக அப்பாவின் தொழிலில் சேர்ந்துகொண்டோம். நாட்டின் சாலை கட்டுமானங்களுக்கான வாய்ப்புகள் பெருகப் பெருக எங்கள் வணிகமும் வளர்ச்சியடைந்தது,” என்கிறார் ஜிஆர் அகர்வாலின் மகன் வினோத் குமார் அகர்வால். இவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் புரொமோட்டராகவும் இருக்கிறார்.

1995-ம் ஆண்டு ஜிஆர் அகர்வால் பில்டர்ஸ் அண்ட் டெவலப்பர்ஸ் என்கிற பெயரில் வணிகம் நிறுவப்பட்டது. 1996-ம் ஆண்டு ஜிஆர் அகர்வாலின் பார்ட்னர்ஷிப் நிறுவனத்தை வாங்கிக்கொண்டது. 2007-ம் ஆண்டு GR Infraprojects எனப் பெயர் மாற்றப்பட்டது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மற்றும் பல்வேறு மாநில அரசாங்கங்களுக்கு GR Infraprojects சேவையளிக்கிறது. 15,000 ஊழியர்கள் கொண்ட வலுவான குழுவாக இந்நிறுவனம் வெற்றிகரமான இயங்கி வருகிறது. சகோதரர்கள் ஐந்து பேரும் சேர்ந்து இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்தியுள்ளனர்.

”நாங்கள் பிராஜெக்டு வேலைகளை முடிக்க அந்தந்த பகுதிகளுக்கு குடும்பத்துடன் மாற்றலாகிப் போவோம்,” என்கிறார் வினோத்.

இப்படி வெவ்வேறு பகுதிகளுக்குப் பயணித்த இந்த சகோதரர்கள் ஒரு கட்டத்தில் குருகிராமில் செட்டில் ஆனார்கள்.

சகோதரர்களில் ஒருவரான அஜேந்திரா குமார் அகர்வால் கூறும்போது,

”நாங்கள் ஜோத்பூர் பகுதிக்கு மாற்றலானோம். GR Infra செயல்பாடுகளில் சேர்ந்து கொள்வதற்கு முன்பு சிவில் இன்ஜினியரிங் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வணிகத்தில் இணைந்து திருமணம் முடிந்த பிறகு கிட்டத்தட்ட 20 வீடுகளுக்கு மாற்றலாகி இருப்போம்,” என்கிறார்.

வெவ்வேறு இடங்களுக்கு மாற்றலான அனுபவமும் குருகிராம் போன்ற பரபரப்பான நகரில் வசித்த அனுபவமும் சாலை கட்டுமானப் பணிகளுக்கு பெரிதும் உதவியுள்ளது.

முழுமையான சேவை

GR Infra நிறுவனம் சாலைகளுக்கான நிலக்கீல் பிராசஸ் செய்வது, தெர்மோபிளாஸ்டிக் பெயிண்ட், மின் கம்பங்கள், சாலை குறியீடுகள், மெட்டல் சாலை தடுப்புகள் போன்றவை தொடர்பாகவும் செயல்பட்டு வருகிறது.

”சாலை கட்டுமானம் தொடர்பான முக்கியப் பணிகளில் நாங்கள் நிபுணத்துவம் பெற்றிருப்பதால் முழுமையான, ஒருங்கிணைந்த சேவையை அளிக்கிறோம்,” என்கிறார் வினோத்.

டிசைன், பொறியியல் சம்பந்தப்பட்ட குழுக்கள் போன்றவை இந்நிறுவனத்திற்குள்ளேயே செயல்படுவதால் மூன்றாம் தரப்பு சப்ளையர்களை அதிகம் சார்ந்திருப்பதில்லை.

சாலை கட்டுமானப் பிரிவில் எத்தனையோ நிறுவனங்கள் செயல்படும் நிலையில் குறித்த நேரத்திற்கு முன்பாகவே பிராஜெக்டுகளை நிறைவு செய்து போட்டியாளர்களை சிறப்பாக எதிர்கொள்கிறது GR Infra. இந்நிறுவனம் நிதி ரீதியாகவும் வலுவாகவே செயல்படுகிறது.

பங்குச் சந்தை

சாலை பிராஜெக்டுகளுக்கு நிகர மதிப்பு முக்கியமானது என்பதால் 2010-ம் ஆண்டு முதல் GR Infra அதன் நிகர மதிப்பை உயர்த்துவதில் அதிக கவனம் செலுத்தியது.

2011-ம் ஆண்டு IDFC Investment Advisors நிர்வகித்து வந்த Hybrid Infrastructure Portfolio உடன் சிறுபான்மை பங்குகளை Motilal Oswal Private Equity Advisors (MOPEA) நிறுவனத்திற்கு 80 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது.

இந்நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட பல முறை முயற்சி செய்தும் மாற்று ஏற்பாடுகளால் இந்த முயற்சி தொடர்ந்து தடைபட்டு வந்தது.

இறுதியாக 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் GR Infra பொதுப் பங்கு வெளியீடு செய்வதற்காக SEBI உடன் Draft Red Herring Prospectus (DRHP) பதிவு செய்தது.

கொரோனா தாக்கமும் அடுத்தகட்ட திட்டங்களும்

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமிருந்த காலகட்டத்தில் பொதுப் பங்கு வெளியீடு திட்டமிடப்பட்டது. இருந்தபோதும் 2021-ம் ஆண்டு கட்டுமானத் துறை 13 சதவீத வளர்ச்சியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் GR Infra 60-70 சதவீத ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. 2020 நிதியாண்டைக் காட்டிலும் 2021 நிதியாண்டில் வருவாய் அதிகம் இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறது.

“கொரோனா முதல் அலையில் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் விரைவாக பணிக்குத் திரும்பவில்லை. இந்த முறை எங்கள் பிராஜெக்ட் நடைபெறும் இடங்களில் மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். இதைப் பயன்படுத்திக் கொண்டு இங்கேயே தங்கியிருக்கவே ஊழியர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்,” என்கிறார் வினோத்.

சாலை கட்டுமானப் பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்துவதுடன் புதிய ரயில்வே பிராஜெக்ட் பணிகளைக் கையிலெடுக்கவும் புதிய பிரிவுகளில் செயல்படவும் திட்டமிடப்பட்டிருப்பதாக வினோத் தெரிவிக்கிறார்.

ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world