‘விண்வெளியில் சுற்றுலா’ - ஸ்பேஸ் பயண வர்த்தக வாய்ப்பில் ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்!

தனியார் மற்றும் அரசு துறை நிறுவங்களின் ஈடுபாட்டால் எதிர்காலத்தில் விண்வெளி சுற்றுலா பயணம் சாத்தியமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 CLAP
0

கோடீஸ்வர தொழிலதிபர்களான ரிச்சர்டு பிரான்சன் மற்றும் ஜெப் பெசோஸ், தங்கள் நிறுவனம் உருவாக்கிய ராக்கெட்டில் விண்வெளிக்கு சென்று வந்து, விண்வெளி சுற்றுலாவுக்கான கதவுகளை திறந்துள்ளனர். எதிர்காலத்தில் இது வர்த்தக வாய்ப்பாக உருவாகும் என அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கருதுகின்றன.

விடுமுறை என்றால் யாருக்கு தான் பிடிக்காது? உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விரும்பிய இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம். பார்த்து ரசிக்க எண்ணற்ற இடங்கள் இருக்கின்றன. ஆனால், விண்வெளிக்கு சுற்றுலா சென்று வர முடியும் என நினைத்திருக்கிறீர்களா?

1961ல் யூரி காக்ரின் முதல் முறையாக விண்வெளிக்கு சென்றதில் இருந்து பலரும் விண்வெளிக்குச் செல்ல கனவு கண்டிருக்கின்றனர். எனினும் விண்வெளி வீரராக தேவைப்படும் கடினமான பயிற்சியால் நம்மில் பலரும் இதை சாத்தியமில்லை என நினைக்கலாம்.

ஆனால், தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக விண்வெளி வீரர்கள் அல்லாதவர்களும் விண்வெளிக்கு சென்று வரும் சாத்தியம் உண்டாகியுள்ளது.

இந்த ஆண்டு துவக்கத்தில் கோடீஸ்வர தொழிலதிபர் ரிச்சர்டு பிரான்சன் விண்வெளிக்கு சென்று வந்தது, விண்வெளி சுற்றுலாவின் முதல் நிகழ்வாக அமைகிறது.

அதே மாதத்தில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது சகோதரர் மார்க் பெசோஸ் மற்றும் விமானி வில்லி ஃபங்க், மற்றும் ஓலிவர் டேமனுடன் விண்வெளிக்கு சென்று வந்தார். ஜெப் பெசோசின் நிறுவனமான புளு ஆரிஜின் நிறுவனத்தின் ராக்கெட்டில் இந்த குழுவினர் சென்று வந்தனர்.

விண்வெளி சுற்றுலா என்பது இப்போது ஆரம்ப நிலையில் இருந்தாலும், எதிர்காலத்தில் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பாக அமையும் எனக் கருதப்படுகிரது. எனினும், செலவு, பயிற்சி, சட்ட சிக்கல்கள் போன்ற சவால்கள் இருக்கின்றன.

புதிய அணுகுமுறை

உலக விண்வெளி தினத்தை கொண்டாடும் வகையில் விண்வெளி கல்வி, ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்கான கழகம் (SSERD) நடத்திய ஆன்லைன் நிகழ்வில், ஸ்பேஸ்போர்ட் சி.இ.ஓ மற்றும் எதிர்கால விண்வெளி சுற்றுலாப் பயணி கரின் நில்ஸ்டோட்டர், மேம்பட்ட தொழில்நுட்பம், மறுசுழற்சி ராக்கெட் ஆகிய நுட்பங்களை சாதகமாக்கி கொண்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்று கூறினார்.

“விமானம் போல, விண்வெளி விமானங்கள் அல்லது விண்வெளி கப்பல்கள் தனியார் மற்றும் வர்த்தகப் பயணிகளை அழைத்துச்செல்லும். ஆக, ஒருவர் சுற்றுலாப் பயணியாக, ஆய்வாளராக, கல்வியாளராக சென்று வரலாம். இதன் தாக்கம் எதிர்பாராத விதமாக இருக்கும். குறிப்பிட்ட பணிக்காக பயிற்சி அளிக்கப்படாத பயணங்களில் பங்கேற்கும் போது படைப்பூக்கம் வெளிப்படும்.”
“விண்வெளிக்கு சென்று வந்த பலரும் மேலிருந்து பார்க்கும் விளைவை விவரிக்கின்றனர். பூமியில் இருந்து விண்வெளிக்கு செல்லும் போது, எல்லைகள் அல்லது மனிதர்களின் நிறத்தில் வேறுபாடு காண முடியாதது பற்றி பேசுகின்றனர். இந்த அனுபவம் மூலம் கிடைக்கும் விளைவு மற்றும் பார்வை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்கிறார் அவர்.

விண்வெளி ஆய்வு ஸ்டார்ட் அப்பான ’அக்னிகுல்’ நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்ரீநாத் ரவிசந்திரன், விண்வெளி சுற்றுலா மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பாக அமையும் என்கிறார்.

“பொழுதுபோக்கு அம்சம் கொண்டிருப்பதோடு, பலரும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஈடுபட ஊக்குவிப்பது மற்றும் தொலைவில் இருந்து பார்ப்பதால் பூமியை பாதுகாக்க மற்றும் கனவு கண்டு பெரிய இலக்குகளை கொள்ள ஊக்குவிக்கும்,” என்கிறார் ஸ்ரீநாத் ரவிச்சந்திரன்.

சவால்கள்

பெசோசுடன் சென்ற ஆலிவர் டேமன் முதல் கட்டணம் செலுத்திய சுற்றுலாப் பயணியாக திகழ்கிறார். தனியார் விமானி உரிமத்திற்காக பயின்று வரும் இவர், ஏலத்தில் 28 மில்லியன் கொடுத்து இந்த வாய்ப்பை பெற்றார்.

விண்வெளிப் பயணத்திற்கான செலவு மிக அதிகமாக இருக்கும் என்பது உண்மை தான். இது மிகவும் செல்வந்தர்களுக்கு மட்டுமே சாத்தியமாகலாம். அனால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்தப் பிரிவில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவும் விண்வெளி சுற்றுலாத்துறையில் பங்கேற்கும் என்று கூறும் ஸ்ரீநாத் ரவிச்சந்திரன், தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக செல்வு குறைந்து பலரும் விண்வெளிக்கு செல்லும் நிலை வரும் என்கிறார்.

இந்தியாவின் இஸ்ரோ முதல் முறையாக 2023ல் ’ககன்யான்’ விண்கலம் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. எனினும், விண்வெளிச் சுற்றுலா தொடர்பாக பல்வேறு சவால்கள் இருக்கின்றன.

SSERD  நிகழ்வில் பேசிய CSST இயக்குனர் டாக்டர்.ராஜேஸ்வரி பிள்ளை ராஜகோபாலன்,

“விண்வெளி சுற்றுலா தொடர்பான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நிகழ்ந்து வந்தாலும், இது தொடர்பான கொள்கை, கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் தொடர்பான விவாதம் இன்னும் நடைபெறவில்லை,” என்கிறார்.

இதனிடையே, டோஹுகு பல்கலைக்கழக ஏரோஸ்பேஸ் இஞ்சினியரிங் துறை துணை பேராசிரியர் டாக்டர்.ஸ்ரேயா சண்ட்ரா தொழில்நுட்ப தயார் நிலையில் இன்னமும் சாத்தியமாகவில்லை என்கிறார். விண்வெளி பயணம் தொடர்பான நிறைய சிக்கல்களுக்கு தீர்வு காணப்படவில்லை என்கிறார்.

“விண்வெளி சுற்றுலா மிகவும் முக்கியமானது. எனினும் பல நாடுகளில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் இந்தப் பிரிவில் நுழையும் நிலையில் விதிமுறைகள் மிகவும் முக்கியம். பொறுப்பு, மீட்பு முயற்சி போன்றவை அவசியம். பல நாடுகள் மற்றும் நிறுவனங்கள் இத்துறையில் ஈடுபடுவது இத்துறைக்கான நெறிமுறைகள் தேவை என்பதை உணர்த்துகின்றன. ஆனால், அடுத்து தலைமுறைக்கு இது மிகவும் ஊக்கமாக அமையும் என்கிறார்.”

ஆக விண்வெளி சுற்றுலாவுக்கு நீங்கள் தயாரா?

ஆங்கிலத்தில்: ஸ்ரேயா கங்குலி | தமிழில்: சைபர் சிம்மன்