சிறியதாகத் தொடங்கி, இன்று 1,000 கோடி மதிப்பு மருத்துவமனையாக விரிவடைந்துள்ள யசோதா மருத்துவமனை!

1989-ம் ஆண்டு ஹைதராபாத்தில் 50 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்ட யசோதா மருத்துவமனை 10,000 ஊழியர்களுடன் 1,000 கோடி ரூபாய் மதிப்புடைஇய மருத்துவமனையாக உயர்ந்துள்ளது.
3 CLAPS
0

சுரேந்தர் ராவ் தெலுங்கானாவைச் சேர்ந்தவர். சாதாண குடும்பப் பின்னணி கொண்டவர். இவர் கிட்டத்தட்ட எட்டாண்டுகள் இரானில் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைக்குச் செய்தார்.

மருத்துவனையை நடத்துவதில் உள்ள நுணுக்கங்களை அனுபவ ரீதியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு தெலுங்கானா திரும்பினார்.

சுரேந்தரின் சகோதரர்களான ராவேந்தர் ராவ், தேவேந்தர் ராவ் இருவரும் தொழில்முனைவில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் ‘யசோதா குழுமம்’ என்கிற நிறுவனத்தை நடத்தி வந்தனர். சுரேந்தர்  1989ம் ஆண்டு தனது சகோதரர்களின் யசோதா குழுமத்தின் கீழ் யசோதா மருத்துவமனை என்கிற பெயரில் சிறிய மருத்துவமனையை நிறுவினார்.

90-களில் நடுத்தர வர்க்கத்தினருக்கு தரமான சுகாதார வசதி அதிகம் கிடைக்கப்படவில்லை. அந்த சமயத்தில் உள்நாட்டு நோயாளிகள் மட்டுமல்லாமல் சர்வதேச நோயாளிகளுக்கும் தரமான மருத்துவ வசதியை வழங்கத் தொடங்கியது ‘யசோதா மருத்துவமனை’. சுரேந்தரின் மகன் அபினவ் கோருகந்தி. இவர் யசோதா மருத்துவமனை இயக்குநர்.

“என் பாட்டியின் பெயர் யசோதா. இவர் சமூகப் பொறுப்புணர்வை குடும்பத்தினர் மனதில் விதைத்தார். இவரது பெயரிலேயே மருத்துவமனை செயல்படுகிறது. சோமாஜிகுடா பகுதியில் 50 படுக்கை வசதியுடன் தொடங்கப்பட்ட மருத்துவமனை இன்று ஹைதராபாத்தில் சிறப்பாக விரிவடைந்துள்ளது,” என்கிறார் அபினவ்.

வருடத்தில் 1,000 கோடி ரூபாய் டர்ன்ஓவர் கொண்டுள்ள இந்த மருத்துவமனைகளில் 10,000 பேர் வேலை செய்கிறார்கள்.

எஸ்எம்பிஸ்டோரி உடனான பிரத்யேக நேர்காணலில் யசோதா மருத்துவமனையின் பயணம் குறித்து பகிர்ந்துகொண்டார் அபினவ். அந்த நேர்காணலின் தொகுப்பு இதோ:

எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் அப்பா எப்படி அவரது சகோதரர்களுடன் இணைந்து யசோதா மருத்துவமனைகள் நிறுவினார்?

அபினவ்: யசோதா குரூப் பயணம் 1978-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதே சமயத்தில்தான் ராவேந்தர் ராவின் யசோதா வேக்யூம் இண்டஸ்ட்ரீஸ் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1984ம் ஆண்டு ஃபோட்டோகாபி ஷாப் திறக்கப்பட்டது. 1985ல் யசோதா ஸ்பெஷல் மெட்டல்ஸ் தொடங்கப்பட்டது.

யசோதா ஹாஸ்பிடல்ஸ் குரூப் 1989ம் ஆண்டு நிறுவப்பட்டது. பின்னர் மலக்பேட் பகுதியில் 200 படுக்கை வசதி கொண்டு மருத்துவமனை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செகந்திராபாத்தில் மூன்றாவது மருத்துவமனை திறக்கப்பட்டது. இந்த சமயத்தில் மூன்று மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகளையும் சேவைகளையும் விரிவுபடுத்தினோம். மொத்தத்தில் நகரில் 2,000 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டன.

எஸ்எம்பிஸ்டோரி: மருத்துவமனை நடத்துவதில் நீங்கள் சந்தித்த ஆரம்பகட்ட சவால்கள் என்னென்ன? அவற்றை எவ்வாறு சமாளித்தீர்கள்?

அபினவ்: திறன்மிக்க நபர்களை பணியமர்த்துவது சிக்கலாக இருந்தது. உதாரணத்திற்கு நியூரோசர்ஜன் கிடைக்கவில்லை. இதனால் அவசரச் சிகிச்சை தேவைப்படும் நரம்பியல் நோயாளிகளைப் பராமரிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது.

2005-2006 ஆண்டுகளில் நாட்டின் முன்னணி மருத்துவர்களை எங்கள் மருத்துவமனையுடன் இணைத்துக்கொள்ள முயற்சி செய்து வந்தோம். அந்த காலகட்டத்தில் நாங்கள் மிகப் பிரபலமான பிராண்ட் இல்லை என்றாலும் அதிர்ஷ்ட்டவசமாக எங்கள் நோக்கத்தில் நம்பிக்கை வைத்து எங்கள் மருத்துவர்கள் எங்களுடன் கைகோர்த்தனர்.

இத்தனை ஆண்டுகளில் உலகின் முன்னணி மருத்துவர்களைப் பணியமர்த்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த மருத்துவர்கள் துல்லியமாக நோய் கண்டறிவதில் தங்களுக்கு இருக்கும் நிபுணத்துவத்தைக் கொண்டு ஒவ்வொரு நோயாளியையும் தனிப்பட்ட முறையில் பராமரிப்பதில் கவனம் செலுத்துகின்றனர்.

ஆரம்பத்தில் நவீன மருத்துவ உபகரணங்களைப் பெறுவது சவாலாக இருந்தது. எங்கள் குழுவிற்கு நவீன உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த சாதனங்களும் கிடைப்பதை உறுதிசெய்ய அதிகம் முதலீடு செய்தோம்.

எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் மருத்துவமனையில் பல்வேறு சுகாதார சேவைகள் எவ்வாறு விரிவுப்படுத்தப்பட்டன?

அபினவ்: முன்பெல்லாம் தனியார் மருத்துவமனைகளில் இருதயவியல், எலும்பியல், இரைப்பை குடல் சிகிச்சை என தனிப்பட்ட பிரிவுகளின்கீழ் மருத்துவச் சேவையில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வந்தது. இருப்பினும் ஒரு நோயாளி ஒரு மருத்துவமனைக்குள் அடியெடுத்து வைக்கும்போது அவரைக் குணப்படுத்தத் தேவையான அனைத்து வளங்களும் அதே மருத்துவமனையில் இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.

நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வரும் ஒரு நோயாளியால் ஒவ்வொரு மருத்துவமனையாக செல்லமுடியாது. இதனால் நோயாளிக்குத் தேவையான ஒட்டுமொத்த சேவைகளையும் ஒரு குடையின்கீழ் வழங்க விரும்பினோம்.

எஸ்எம்பிஸ்டோரி: இன்று மற்ற முன்னணி மருத்துவமனைகளும் முழுமையான சேவை அளித்து வருகின்றன. யசோதா மருத்துவமனைகள் எந்த வகையில் தனித்துவமாக செயல்படுகிறது?

அபினவ்: யசோதா மருத்துவமனை சுயநிதியில் செயல்படுகிறது. இது 100 சதவீதம் தனியார் மருத்துவமனை. வெளியிலிருந்து நிதி எதிர்பார்க்காததால் சுயமாக திட்டங்கள் வகுக்கமுடிகிறது.

அடுத்ததாக தெலுங்கு மாநிலங்களான தெலுங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறோம். மற்ற மருத்துவமனை குழுமங்களில் இதுபோல் இருப்பதில்லை.

யசோதா மருத்துவமனைகள் ஒரு மணி நேரம் பயணம் செய்யக்கூடிய இடைவெளியில் மட்டுமே அமைந்துள்ளது. ஊழியர்கள் 10,000 பேரும் ஒரே நகரில் உள்ளனர். இதுவே இந்தப் பகுதியில் வளர்ச்சியடைய உதவியது.

20,000-க்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகளுக்கு நவீன தொழில்நுட்பம் கொண்டு சிகிச்சையளித்துள்ளோம்.

எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் குறித்தும் அவர்கள் எப்படி உங்களை அணுகுகிறார்கள் என்பது குறித்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

அபினவ்: நாங்கள் அடிப்படை மருத்துவத் தேவைகள் முதல் சிக்கலான மருத்துவத் தேவைகள் வரை சேவையளிக்கிறோம். இதுவே எங்களது பலம்.

ஹைதராபாத் மட்டுமின்றி மற்ற பகுதிகளிலும் மருத்துவ சேவையளிக்க விரும்புகிறோம். தொலைதூரப் பகுதிகளில் அவுட்ரீச் மையங்கள் அமைத்துள்ளோம். நோயாளிகள் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா வந்து எங்களிடம் சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர்.

எஸ்எம்பிஸ்டோரி: கோவிட்-19 பெருந்தொற்று பரவத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கடினமான சூழலை சந்தித்தன. யசோதா மருத்துவமனைகள் இதை எப்படி எதிர்கொண்டது?

அபினவ்: ஊரடங்கு சமயத்தில் 100 நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது. எங்கள் திறனை மேலும் விரிவடையச் செய்தது. எங்கள் ஊழியர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து கடினமாக உழைத்தார்கள். உடல் ரீதியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் கடும் போராட்டங்களை சந்தித்தனர்.

இருப்பினும் ஏதோ ஒரு வகையில் இந்த நெருக்கடியான சூழல் அனைவரையும் நெருக்கமாக்கியுள்ளது. அனைவரும் ஒரே குடும்பமாக இந்த நெருக்கடியை சமாளித்து கடந்து வந்தோம்.

இத்தனை மாதங்களில் உலகளவில் கோவிட்-19 குறித்த புரிதல் அதிகரித்துள்ளது. சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறவேண்டும் என்பது மக்களுக்கு புரிந்தது. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா போன்ற நாடுகளில் உள்ள நிபுணர்களுடன் இணைந்து கோவிட்-19 எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருப்பதற்காக மாஸ்டர் ப்ரோட்டோகால் டாகுமெண்ட் உருவாக்கினோம். இந்த ஆவணம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

நுரையீரல் நோய் சிகிச்சையில் இந்தியாவின் மிகச்சிறந்த மருத்துவமனைகளில் எங்கள் மருத்துவமனை ஒன்று. இதனால் கோவிட்-19 பரவத் தொடங்கியதும் எங்கள் மருத்துவமனைக்கு நோயாளிகள், குறிப்பாக தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகள் அதிகளவில் வருகை தந்தனர். மருத்துவமனைகளில் நேரடியாகவும் டெலிமெடிசன் மூலமாகவும் எங்கள் நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கினோம்.

யசோதா மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சர்வதேச தரத்துக்கு நிகராக சிகிச்சையளிக்கப்படுகிறது. 10,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் பயன்பாட்டில் இருந்த 220 வெண்டிலேட்டர்களில் 150 எங்கள் குழுமத்தைச் சேர்ந்தது.

நோயாளிகளை சிகிச்சைக்காக வகைப்படுத்தியே முறையே எங்கள் வெற்றிக்குக் காரணம்.

வணிக ரீதியாக பார்க்கும்போது ஆரம்பத்தில் செலவுகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து 50 சதவீதம் வரை வருவாய் குறைந்தது. கோவிட்-19 பரிசோதனை வசதிகளை மேம்படுத்தியதும் நுரையீரல் தீவிர சிகிச்சை பிரிவில் முதலீடு செய்ததும் சூழலை எதிர்கொள்ள உதவியது.

எஸ்எம்பிஸ்டோரி: நெருக்கடியான சூழலை சமாளித்துள்ள நிலையில் யசோதா மருத்துவமனைகளின் அடுத்தகட்ட திட்டம் என்ன?

அபினவ்: ஹைதராபாத்தின் தொழில்நுட்ப மையமான ஹைடெக் சிட்டியில் ஒரு பிராஜெக்ட் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 20 லட்சம் சதுர அடியில் கிட்டத்தட்ட 2,000 படுக்கை வசதிகளுடன் இது இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி நாட்டின் மற்ற பகுதிகளில் விரிவடையவும் திட்டமிட்டுள்ளோம்.

எஸ்எம்பிஸ்டோரி: Anthea Pharma குறித்து விரிவாக சொல்லுங்கள்.

அபினவ்: நாங்கள் மருந்து பிரிவில் செயல்பட விரும்புவதால் Anthea Pharma அமெரிக்க சந்தைக்காக உயர்தர ஜெனரிக் ஃபார்முலேஷன் இன்ஜெக்டபிள்ஸ் பகுதியில் கவனம் செலுத்துகிறது. ஆர்&டி மற்றும் ஜெனரிக் இன்ஜெக்டபிள்ஸ் துல்லிய தயாரிப்பில் இந்நிறுவனம் கவனம் செலுத்துகிறது.

2023ம் ஆண்டு எங்கள் தயாரிப்பை அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world