‘என் தந்தையை போல ராணுவ வீரர் ஆக வேண்டும்' - ‘வீர் சக்ரா' விருது பெற்ற தமிழக வீரர் பழனியின் மகன்!

தியாகத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக `வீர் சக்ரா' விருது!
5 CLAPS
0

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி இந்தியா – சீன ராணுவப் படைகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்களில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன வீரா்கள் 35 போ் உயிரிழந்தனர். 

சீன வீரர்கள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி வீர மரணம் அடைந்தார். ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூரைச் சேர்ந்தவர் பழனி. பின்னர், பழனியின் உடல் சொந்த கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்டு மத்திய, மாநில அரசுகள் சார்பில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே, பழனியின் தியாகத்தை போற்றும் வகையில் ஹவில்தார் பழனிக்கு ’வீர் சக்ரா’ விருதினை அவரது மனைவியிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவப்படுத்தி இருக்கிறார். பழனியின் மனைவி வானதி தேவி வீர் சக்ரா விருதினை பெற்றுக்கொண்டார். விருது பெற்ற பின் பேசிய வானதி தேவி,

“இந்த விருது எனது கணவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகவும் அவர் செய்த தியாகத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகவும் கருதுகிறேன். தமிழகத்தின் கடைக்கோடியை சேர்ந்த நபர் நாட்டுக்காக என்ன செய்தார் என்பதற்கான அங்கீகாரம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. எனது கணவரின் வீர தீரச் செயலால் நானும் எனது குழந்தைகளும் தலைநிமிர்ந்து இருக்கிறோம்.”

மிகவும் பின்தங்கிய பகுதியில் இருந்து ராணுவத்தில் சேர்ந்தவர் எனது கணவர். முன்னதாக ராணுவ தேர்வில் இரண்டு முறை தோல்வியடைந்து மூன்றாவது முறை வெற்றி அடைந்து, பலரை ராணுவத்தில் சேர்க்க உத்வேகம் கொடுத்தவர். எனது மகனை கூட ராணுவத்தில் சேர்க்க உத்வேகம் கொடுத்திருக்கிறார்.

பழனியின் மனைவி மற்றும் மகள் உடன் அதிகாரிகள்

மேலும் பேசிய அவர், எனது மகனிடம்.

“நான் சாதாரண சிப்பாயாக ராணுவத்தில் சேர்ந்தேன். ஆனால் நீ அதிகாரியாக ராணுவத்தில் பொறுப்பேற்க வேண்டும். உனக்கு நான் சல்யூட் அடிக்க வேண்டும். அதற்கு நான் உனக்கு வழிகாட்டியாக இருப்பேன், என எப்போதும் கூறுவார். இப்போது எனது மகனின் இலட்சியமும் ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுதான்,” என்று நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.

அவரின் மகன் பிரசன்னா பேசுகையில்,

“என் தந்தையை போன்று ராணுவ அதிகாரியாக பணியாற்ற வேண்டும் என்பதே எனது இலட்சியம். எனது தந்தையை விட உயர்ந்த பொறுப்பில் ராணுவத்தில் பணிபுரிய வேண்டும். அதற்காக உழைப்பேன்," என்று தெரிவித்துள்ளார்.

Latest

Updates from around the world