#HBDVadivelu: ஒரு குட்டி ஸ்டோரியுடன் கம்பேக் கொடுத்த ‘வைகைப்புயல்’ வடிவேலு!

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படம் தொடர்பான பிரச்சனைகள் பேசித் தீர்க்கப்பட்டுவிட்டதால், மீண்டும் படங்களில் நடிக்க உள்ளார் நடிகர் வடிவேலு. லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
4 CLAPS
0

வடிவேலு... தமிழ் சினிமாவின் வரலாற்றை நிச்சயம் இவரது பெயர் இல்லாமல் எழுத முடியாது. நேசமணி, நாய் சேகர், கைப்புள்ள, சினேக் பாபு, என தனக்குக் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு காமெடி கதாபாத்திரத்திலும், வேறுபாடு காட்டி, இன்றளவும் நம்மை சிரிக்க, ரசிக்க வைத்து வருபவர்.

இம்சை அரசன் பட விவகாரம் வடிவேலுக்கு நிஜ வாழ்க்கையிலும் சில இம்சைகளைக் கொடுக்க, இடையில் சில வருடங்கள் புதிய திரைப்படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் அவர் புதிய படங்களில் தான் தோன்றவில்லையே தவிர, அவரது புகழும், பெருமையும் மீம்ஸ்களின் வாயிலாக உலகளவில் டிரெண்டிங் ஆனது. அதற்கு ‘நேசமணி’ ஒரு உதாரணம்.

இப்போது மீண்டும் வடிவேலு நடிக்க இருக்கிறார் என்ற செய்தி அவரது ரசிகர்களை ரொம்பவே மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அதிலும் முதலில் இரண்டு படங்களில் நாயகனாக நடித்து விட்டு, பிறகு முழுக்க காமெடியனாக நடிக்க இருப்பதாக அவர் கூறி இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழைய சாப்பாட்டையே ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, புதிய விருந்து தயாராகிறது என்றால் மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும். அப்படிப்பட்ட்ட மனநிலையில் தான் இருக்கிறார்கள் வடிவேலு ரசிகர்களும், மீம்ஸ் கிரியேட்டர்களும்.

சரி, இப்படி ஒரே ஒரு பட அறிவிப்பால் மக்களை இந்த அளவிற்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள வடிவேலு யார்.? தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தை அவர் எப்படி அமைத்தார்? நன்றாக சென்று கொண்டிருந்த திரைவாழ்வில் வடிவேலு எடுத்த தவறான முடிவுகள் என்னென்ன? சறுக்கல்களுக்கு என்ன காரணம்? ஏன் இடையில் திடீரென பல ஆண்டுகள் அவர் நடிக்க முடியாமல் போனது? என பல கேள்விகளுக்கான பதில்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்...

1960ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி பிறந்தவர் வடிவேலு. ஏழ்மையான குடும்பம் என்பதால் பள்ளிக் கல்வி கிடைக்கவில்லை. தந்தை திடீரென இறந்துவிட, குடும்ப வறுமையைப் போக்க மதுரையில் உள்ள புகைப்படங்களுக்கு கண்ணாடி பிரேம்கள் செய்யும் ஒரு சிறிய கடையில் வேலைக்கு சேர்ந்தார் வடிவேலு. சிறுவயதிலேயே நடிப்பின் மீது ஈடுபாடு கொண்டவராக இருந்த வடிவேலு, நண்பர்களுடன் சேர்ந்து சிறுசிறு நாடகங்களில் நடித்து வந்துள்ளார்.

அப்போதுதான் நடிகர் ராஜ்கிரணின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. அதன் அடிப்படையில் சென்னைக்கு வந்து சேர்ந்த வடிவேலு, ராஜ்கிரணின் அலுவலகம் மற்றும் வீடு என அவருக்குத் தேவையான எல்லா வேலைகளையும் பார்த்து வந்தார். 1991ம் ஆண்டு ராஜ்கிரண், தான் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் வடிவேலுவை முதன்முதலாக திரையில் அறிமுகப்படுத்தினார்.

திரையில் தோன்றிய முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும், பாடகனாகவும் தன்னுடைய பெயரைத் தமிழ் சினிமாவில் பதிவு செய்தார் வடிவேலு. முதல் படத்திலேயே தமிழக மக்கள் மத்தியில் கவனம் பெற்றார். எனவே, 1992ம் ஆண்டு ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் ‘சின்னகவுண்டர்’ படத்தில் கதாநாயகன் விஜயகாந்திற்கு குடை பிடிக்கிற பண்ணையாள் கதாபாத்திரம் அவருக்குக் கிடைத்தது. இந்தப் படத்திலும் வடிவேலின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டதால், அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கத் தொடங்கியது.

தனி காமெடியனாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல், கிடைத்த பட வாய்ப்புகளை எல்லாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். தமிழ்த் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற நகைச்சுவை இரட்டையர்களான கவுண்டமணி-செந்தில் நடித்த நகைச்சுவை காட்சிகளில் சிறுசிறு கதாபாத்திரங்களில்கூட வடிவேலு வந்து சென்றார்.

காமெடியாக மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தனது நடிப்புத் திறமையை நிரூபித்ததால், குறுகிய காலகட்டத்தில் பெரிய நடிகர்களின் படங்களை நடித்து, அந்த காலகட்டத்தில் அசைக்க முடியாத நகைச்சுவை அரசர்களாக விளங்கிக்கொண்டிருந்த கவுண்டமணி மற்றும் செந்தில் இணையுடன், மூன்றாவது நகைச்சுவை நடிகராக வலம் வரத் தொடங்கினார்.

‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘இளவரசன்’, ‘சிங்காரவேலன்’, ‘தேவர் மகன்’, ‘காத்திருக்க நேரமில்லை’, ‘கிழக்கு சீமையிலே’, ‘நிலக்குயில்’, ‘மகாராசன்’ என ஒரே வருடத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

அடுத்தடுத்த படங்களில் பார்த்திபன் - வடிவேலு இணைந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகள், தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் கைத்தட்டலைப் பெற்றுத் தந்தது. 2001ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த ப்ரண்ட்ஸ் திரைப்படம் வடிவேலுவுக்கு மேலும் புகழைத் தேடித்தந்தது. அந்தப் படத்தில் வரும் நேசமணி கதாபாத்திரம் தான், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உலகலவில் மீண்டும் டிரெண்டிங் ஆனது இங்கே குறிப்பிடத்தக்கது.

2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வின்னர்’ திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. பார்த்திபன் - வடிவேலு கூட்டணியைப் போலவே, பிரசாந்த் - வடிவேலு காமெடி கூட்டணியும் மக்களை சிரிக்க வைத்தது. குறிப்பாக வின்னர் படத்தில் அவர் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற ஒன்றை அமைத்து ‘கைப்புள்ள’ என்ற கதாபாத்திரத்தில் செய்யும் ரகளைகள் ஆஸம் ரகம்.

நினைத்துப்பார்த்தாலே சிரிப்பு வரும் அளவிற்கு உடல் அசைவு, உடை, முக பாவனை, வசனங்கள் என தனக்கு கிடைத்த அத்தனை கதாபாத்திரத்திலும் சிக்ஸர் அடித்தார் வடிவேலு, இதனாலேயே ரஜினி, கமல், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

நடிப்புக்கு முட்டுக்கட்டை

நன்றாக சென்று கொண்டிருந்த அவரது திரைவாழ்க்கையில் 2006ம் ஆண்டு மாபெரும் திருப்பம் ஏற்பட்டது. நடிக்க வந்து சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் நாயகனாக நடிக்க முடிவெடுத்தார் வடிவேலு. அதன்படி, 2006ம் ஆண்டு இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் இரட்டை கதாநாயகனாக நடித்து அசத்தினார். அப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. நாயகனாக நடிக்கத் தொடங்கியதால், மற்ற நாயகர்களின் படங்களில் காமெடியனாக நடிப்பதைக் குறைத்துக் கொண்டார் வடிவேலு. ஆனால் இம்சை அரசன் 23ம் புலிகேசி கொடுத்த வெற்றியை அடுத்தடுத்து அவர் நாயகனாக நடித்த படங்கள் கொடுக்கத் தவறி விட்டன.

இது ஒருபுறம் இருக்க, 2011ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் வடிவேலு. தனது பிரச்சாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்துப் பேசியதால், சர்ச்சைகளில் சிக்கினார்.

அந்தத் தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவ, வடிவேலுவின் திரை வாழ்க்கையிலும் சிக்கல்கள் ஏற்பட்டது.தேர்தல் முடிவுக்கு பிறகு, சுமார் 20 மாதங்களுக்கும் மேல் சினிமாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார்.

சுமார் இரண்டு ஆண்டுகள் திரைப் படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, மீண்டும் தெனாலிராமன் படம் மூலம் நடிக்கத் தொடங்கினார். மீண்டும் பிஸியான நடிகராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரித்த ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ படப் பிரச்சினையில் சிக்கினார் வடிவேலு. இதனால் 2017ம் ஆண்டு தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுத்து, புதிய படங்களில் அவர் நடிக்க தடை விதித்தது.

சுமார் நான்கு வருடங்கள் நீடித்த இந்தப் பிரச்சினை இப்போது ஒரு வழியாகத் தீர்க்கப்பட்டு விட்டது. கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் (27.08.21) தயாரிப்பாள்ர்கள் சங்கத்தில் நடிகர் வடிவேலு மீதான புகாரில் சுமூக பேச்சுவார்த்தை எட்டப்பட்டுவிட்டதாகவும், அவர் படங்களில் நடிக்க தடை ஏதும் இல்லை எனவும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதை வடிவேலு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மீண்டும் நாயகனாகவே களமிறங்கி இருக்கிறார் வடிவேலு. இரண்டு படங்கள் நாயகனாக நடித்து விட்டு பிறகு காமெடி கதாபாத்திரங்களில் கவனம் செலுத்த இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.

இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில்,

‘தமது வாழ்வில் கடந்த 4 ஆண்டுகளில் சூறாவளி புயலே வீசிவிட்டதாகவும், மீண்டும் நடிக்க வந்திருப்பது மகிழ்ச்சி..’ என்றும் நெகிழ்ச்சியுடன் வடிவேலு தெரிவித்துள்ளார்.

திரைப்படங்கள் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் கலகலப்பாகப் பேசக் கூடியவர் வடிவேலு. இடையில் நடிக்க முடியாமல் போன காலகட்டத்தில் தான் பட்ட துயரங்களை ஒரு குட்டி கதையாக இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பகிர்ந்து கொண்டார்.

“நான் அனுபவித்த துன்பத்தை போல் வேறு யாரும் அனுபவித்து இருக்க முடியாது. என்னை அனைவரும் 'வைகைப்புயல்... வைகைப்புயல்..' என்று சொல்வார்கள். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் என்னுடைய வாழ்க்கையில் பெரிய சூறாவளி புயலையே சந்தித்துவிட்டேன், என்றார்.

நோயாளி ஒருவர் டாக்டரை சந்தித்து, 'எனக்கு மனசு சரியில்லை. தூக்கம் வரவில்லை. ஏதாவது மருத்துவம் பாருங்க..?' எனக் கேட்டார். அதற்கு மருத்துவர்,' இன்று சனிக்கிழமை.. நாளை ஞாயிற்றுக்கிழமை.. நாளை மறுநாள் திங்கட்கிழமை வாருங்கள். உனக்கு வைத்தியம் பார்க்கிறேன்' என்று பதிலளித்தார். அதற்கு அந்த நோயாளி,' முடியவே முடியாது. எனக்கு இப்போதே மருத்துவம் பாருங்கள். என்னை காப்பாற்றுங்கள்.' என கேட்டுக்கொண்டார். அதற்கு மருத்துவர்,' நிச்சயம் நீங்கள் திங்கட்கிழமை வாருங்கள். உங்களுக்கு வைத்தியம் பார்க்கிறேன்.' என பதிலளித்தார்.

மறுபடியும் நோயாளி, 'தனக்கு தூக்கம் வரவில்லை.' எனச் சொல்ல, மருத்துவர், 'பேசாமல் ஒன்று செய்யுங்கள். பக்கத்தில் ஒரு சர்க்கஸ் நடக்கிறது. அந்த சர்க்கஸில் உள்ள பபூன் பிரமாதமாக காமெடி செய்வார். அதை பார்ப்பதற்காக எனக்கும் என் மனைவிக்கும் என இரண்டு டிக்கெட்களை எடுத்திருக்கிறேன். என்னுடைய மனைவிக்கான டிக்கெட்டை நான் உங்களிடம் தருகிறேன். நீங்களும், நானும் அந்த சர்க்கஸிற்கு சென்று பபூன் செய்யும் காமெடியை பார்ப்போம். அந்தக் காமெடியை பார்த்தால் உனக்கு உன்னுடைய துன்பம் எல்லாம் பறந்துவிடும். தூக்கமும் வரும்.' என்றார். அதற்கு அந்த நோயாளி டாக்டரிடம்,' அந்தப் பபூனே நான் தாங்க' எனச் சொன்னார்.

”கிட்டத்தட்ட நானும் அந்த பபூன் அளவில் தான் தற்போது இருக்கிறேன். கடந்த நான்காண்டுகளாக நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது மீண்டும் நடிக்க வந்ததற்கு கடவுளின் ஆசி தான் காரணம்,” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மறக்காமல் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் நன்றி கூறிய வடிவேலு, கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு தனது நகைச்சுவை மருந்தாக இருந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்ததாகத் தெரிவித்தார்.

மேலும், ‘இப்போதிருந்து தனது பயணம் கண்டிப்பாக ஒரு நகைச்சுவை பயணமாக இருக்கும் என்றும், மக்களை இன்னும் நன்றாக சிரிக்கவைத்து, சந்தோஷப்படுத்தி விட்டுத்தான் தனது உயிர் இந்த பூமியை விட்டுச் செல்லும்’ என்றும் வடிவேலு நெகிழ்ச்சியுடன் இந்த நிகழ்வில் பேசினார்.

”நடந்ததை எல்லாம் மறந்துவிடுவோம். என்னை படம் நடிக்கவிடாமல் தடுத்தவர்களுக்கு என் காமெடி பாணியில் சொல்ல வேண்டுமானால், ‘எண்ட்’ (End) என்பதே எனக்குகிடையாது. கடந்த 10 ஆண்டுகளில் 5, 6 படங்களில் நடித்தேன். அதில்கூட சமாளித்தேன். இடைப்பட்ட காலத்தில் கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடியாக வைத்தார்கள். அதிலும் தப்பித்துவிட்டேன். என்னால் 100 கோடி ரூபாய் இழப்பு என்றார்கள். என் மீது வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய்.

இனி வரலாற்றுப் படங்களில் நடிக்கப்போவதில்லை. ‘இப்போது நீங்க நடிங்க’ என்று மக்கள் கூறிவிட்டனர். அதனால் அரசியல் வேண்டாம். இனி அரசியலுக்கு பதிலாக திரையில் நடிப்போம். முதல்வரை பார்த்ததில் இருந்தே எனக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது.

நிறைய படவாய்ப்புகள் வருகின்றன. லாரன்ஸ், அர்ஜுன், சிவகார்த்திகேயன் ஆகியோர் பேசியுள்ளனர். 2 படங்கள் மட்டும் நாயகனாக நடித்துவிட்டு, அப்புறம் ஃபுல்லா காமெடியன்தான்.

”விவேக் என் அருமையான நண்பன். அவரது மறைவு திரையுலகுக்கும், மக்களுக்கும் பெரிய இழப்பு. அவரது இடத்தையும் சேர்த்து நிரப்பும் பொறுப்பை கடவுள் எனக்குக் கொடுத்துள்ளார்,” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார் வடிவேலு.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு காமெடி நடிகர் கம்பேக் கொடுப்பதற்கு மக்கள் மத்தியில் இந்தளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கிறதென்றால் நிச்சயம் அதன் பின்னால் வடிவேலுவின் கடின உழைப்பும், மெனக்கெடலும் இருக்கிறது. தான் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர்க் கொடுத்த பெருமைக்குரியவர் வடிவேலு.

"ஆகா ஒரு குரூப்பாத்தான் அலையிராங்கய்யா", "வந்ததுட்டான்யா வந்ததுட்டான்யா" மற்றும் சந்திரமுகி திரைப்படத்தில் இடம்பெற்ற "மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு" போன்ற வசனங்களை மக்கள் தங்களது அன்றான வாழ்க்கையிலும் பயன்படுத்தும்படி செய்தது தான் வடிவேலுவின் நடிப்பிற்கு ஒரு சான்று.

இப்பேட்டியில் கூறி இருப்பது போல், ‘மக்களை இன்னும் நன்றாக சிரிக்கவைத்து, சந்தோஷப்படுத்தி நூறு ஆண்டுகள் வடிவேலு ஆரோக்கியமாக வாழ வேண்டும்’ என அவரது பிறந்தநாளான இன்று யுவர் ஸ்டோரி தமிழும் அவரை வாழ்த்துகிறது.