விபத்தில் மரணித்த ஆதரவற்ற ‘ஒரு ரூபாய் மனிதன்' - இறுதி ஊர்வலத்தில் நெகிழவைத்த 3000 பேர்!
மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் இறுதிச்சடங்கில் உதிர்த்த மனிதம்!
கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஹடகலி நகரவாசிகளுக்கு பசவா என்ற மனிதர் மிக நெருக்கம். அந்த நகரவாசி மக்கள் அவரை ‘ஹுச்சா பஸ்யா’ என்று அழைத்து வந்தனர்.
‘ஹுச்சா’ என்றால் ’மனநலம் பாதிக்கப்பட்டவர்’ என்று பொருள். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஹடகலி நகரப் பகுதிகளில் வசித்து வந்தார். 45 வயது மதிக்கதக்க இவர் ஆதரவற்ற நபராக அந்தப் பகுதி மக்களிடம் யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.
என்றாலும், பெரிய தொகை எதுவும் யாசகம் கேட்காமல், மக்களிடம் ஒரு ரூபாய் மட்டுமே யாசகம் கேட்பாராம். ஒரு ரூபாய்க்கு மேல் ஒரு பைசா கூட வாங்க மறுத்துவிடும் பஸ்யா, யாரேனும் கூடுதலாக தொகை கொடுத்தால் அதில் ஒரு ரூபாய் மற்றும் எடுத்துக்கொண்டு மீத சில்லறையை சரியாக அவர்களிடமே கொடுத்துவிடுவார் எனக் கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள்.
பஸ்யா பொதுவாக ஹூவினா ஹடகாலி பேருந்து நிலையத்தில் அமர்ந்திருப்பார். அவர் எங்கிருந்து வந்தார் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. பஸ்யா எல்லோரையும் ‘அப்பாஜி’ என்று அழைப்பதால், எல்லோருக்கும் தெரிந்த முகமாகிவிட்டார். சில நாட்கள் முன் வாகன விபத்தில் சிக்கியுள்ளார் பஸ்யா. பேருந்து ஒன்று மோதியதில் காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
மூன்று நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
“அவர் மிகவும் நல்ல மனிதர், அவர் இறந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் வந்த நாட்களில் என் வியாபாரம் நன்றாக இருந்தது. அவரது ஆன்மா சாந்தியடையும் என்று நம்புகிறேன்,” என்று ஒரு உள்ளூர் கடைக்காரர் பஸ்யாவின் மறைவு குறித்து பேசுகிறார்.
இதனிடையே, பஸ்யாவின் மறைவு அந்தப் பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கிருக்கும் அமைப்புகள், உள்ளூர்வாசிகள் மற்றும் கடைக்காரர்கள் ஒன்றிணைந்து நிதி திரட்டி பஸ்யாவுக்கு பிரமாண்ட இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
அவரின் மரணச் செய்தி அறிந்து பலர் திரண்டனர். ஆதரவற்ற மனிதனாக, வீடற்ற நபராக இருந்த பஸ்யாவுக்காக கிட்டத்தட்ட 3,000 பேர் அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுள்ளனர். பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், பதாகைகளை ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் சாலைகளில் இசைக்குழுவினர் இசையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பஸ்யாவின் இறுதி ஊர்வலம் மனித தன்மைக்கு உதாரணமாக நெகிழவைத்துள்ளது.
தொகுப்பு: மலையரசு