நியூஸ் வியூஸ்

கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய ஹீரோக்கள்; நீங்களும் உதவலாமே!

YS TEAM TAMIL
14th Aug 2019
13+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

2018ல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட போது தமிழ்நாடு, கர்நாடகா மட்டுமின்றி துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளும் முன் வந்து உதவிக்கரம் நீட்டினர். ஓராண்டு கழித்து அதே நிலைமையில் மீண்டும் பாதிக்கப்பட்டு வெள்ளத்தால் தவிக்கிறது கேரளம். கன மழை, வெள்ளப்பெருக்கு, நிலச் சரிவால் வீடுகள் இழப்பு மற்றும் உயிர்சேதம் என்று கவலைக்கிடமான நிலைமையில் உள்ளது கேரளா.


கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளபாதிப்பில் இருந்தே மக்கள் இன்னும் மீண்டுவராத நிலையில் இது இன்னும் பெரிய அதிர்ச்சியாக வந்துள்ளது. கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் நிலைமை மோசமாக இருந்தாலும் அப்பொழுது கிடைத்த உதவிகள் அளவிற்கு இப்பொழுது கிடைக்காமல் சற்று தடுமாறுகிறது கேரளா. 1600க்கும் மேலான மீட்பு முகாமில் 1லட்சத்திற்கும் மேலான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த முகாம்களில் போதிய மீட்புப் பொருட்கள் கிடைக்கவில்லை.


இருப்பினும்,சில நல்லுள்ளங்கள் எதையும் எதிர்பாராமல் உதவி செய்து தான் வருகின்றனர்;

கேரளா

கேரளா, எர்னாகுளத்தைச் சேர்ந்த சிறு துணிக் கடை வியாபாரியான நௌஷத் விற்பனைக்காக வைத்திருந்த புத்தாடைகளை மீட்பு முகாமில் இருக்கும் மக்களுக்கு தானமாக வழங்கிவிட்டார். ஈத் பெருநாளுக்கு முன்பு தனது விற்பனை துணிகளை தானமாக கொடுத்த நௌஷதை ஒரு தன்னார்வளர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போட உடனடியாக வைரல் ஆனது. இது குறித்து மனோரமா இதழுக்கு பேட்டி அளித்த இவர்,

“சமூக வலைதளத்தில் பிரபலமாவது பற்றி எனக்கு தெரியாது, நான் வெறும் தெரு வியாபாரி. இறந்தபின் இதை எல்லாம் எடுத்து செல்லமுடியாது தேவையானோருக்கு உதவ வேண்டும். இப்படி தான் என் பக்ரீத்தை நான் கொண்டாட விரும்பினேன்,” என்றார்.

ஈத் பண்டிகைக்கு புத்தாடைகளை விற்பனைக்கு வாங்கி வைத்துள்ளார், வெள்ளத்தால் வியாபாரம் நடக்கவில்லை. இதனால் அடைத்திருந்த கடையை திறந்து மீட்புப்பணியில் இருக்கும் தன்னார்வலர்களுக்கு உதவ தனது கடைத் துணிகளை எடுத்து வழங்கியுள்ளார் இவர்.


கடந்த வருடமும் இதே போல் உதவியுள்ளார் நௌஷத், ஆனால் அப்போது அது யாருக்கும் தெரியவில்லை. இப்பொழுது தனது குடோனில் இருந்து துணிகளை எடுப்பதை நடிகர் ராஜேஷ் ஷர்மாவின் குழு வீடியோ எடுத்ததால் இன்று தெரிய வந்துள்ளது.

“கடவுள் கொடுத்ததை நான் கொடுக்கிறேன். இதுவே எனக்கு மகழ்ச்சி,” என்கிறார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ முதல் அமைச்சர் மீட்பு நிதி திரட்டப்பட்டு வருகிறது. கடந்த வருடம் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து எல்லா மாநில மக்களும் நிதி உதவி செய்தனர். ஆனால் அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்று தவறான குற்றச்சாட்டு சமூக வலைதளத்தில் பரவிவந்ததால் இந்தாண்டு நிதி வருகை குறைந்துள்ளது. மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் கேரளா முதல் அமைச்சர் பினராயி விஜயன், 9 ஆம் வகுப்பு மாணவனின் உதவியை பகிர்ந்துள்ளார்.

கேரளா

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆதர்ஷ் என்னும் சிறுவன் பள்ளிகளில் இருந்து நிதி திரட்டி உதவ கேரள முதல் அமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்துள்ளார். மீட்பு நிதிக்கு ஆதர்ஷ் உதவுவது இது முதல் முறை அல்ல, கடந்த நான்கு வருடமாக தனது சேமிப்பை தானம் செய்து வருகிறார் இச்சிறுவன்.

ஆதர்ஷ் முன்மாதிரியாக இருக்கிறார் என அவரை பாராட்டி தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார் முதல்வர்.

இதற்கிடையில், 32 வயதான லின்னு மீட்புப் பணியில் ஈடுபட்டு பல உயிர்களை காப்பற்றியபின் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். இவருக்கு பாராட்டுகளையும் அனுதாபங்களையும் கேரள அரசும், சமூக வலைதளங்களும் வழங்கி வருகிறது.


உங்கள் உதவிக் கரங்களை நீங்கள் வழங்க நினைத்தால்,


1. மைலாப்பூரில் உள்ள மாத்ரூபூமி அலுவலகத்தில் ஒரு சேகரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு - 9539496500


தேவையான பொருட்கள்: அரிசி, பருப்பு வகைகள், நாப்கின்கள், போர்வைகள், நைட்டீஸ், பெட்ஷீட்கள், சட்டைகள்.

கேரளா

2. Location: Octaves Studio, G1, New No.39/Old No.16, Sangeeth Apartments, Sarangapani Street, T Nagar, Chennai 600017. Contact: 94469 60500


கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்


13+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags