40 கோடி ரூபாய் மாத வருமானம் ஈட்டும் வீட்டு உபயோகப் பொருட்கள் பிராண்ட்!

2015-ம் ஆண்டு வேலையை விட்டுட்டு Lifelong Online தொடங்கிய பரத் பிரபல டி2சி பிராண்ட் உருவாக்கி அபார வளர்ச்சியடைந்துள்ளார்.
3 CLAPS
0

2015-ம் ஆண்டு இணையம் மக்களிடையே மிகவும் பிரபலமானது. இதனால் மின்வணிகமும் பிரபலமாகத் தொடங்கியது.

நுகர்வோரின் மாறி வரும் தேவைகளுக்கேற்ப தயாரிப்புகள் புதுமையான முறையில் வடிவமைக்கப்பட்டாலும்கூட வீட்டு உபயோகப் பொருட்கள் பல ஆண்டு காலமாகவே ஒரே மாதிரியாக இருப்பதை பரத் கவனித்தார்.

”2015-ம் ஆண்டு காலகட்டத்தில் மொபைல், டிவி போன்ற தயாரிப்புகளில் பெரியளவில் புதுமை படைக்கப்பட்டன. ஆனால் வீட்டு உபயோகப் பொருட்களில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. 2015-ம் ஆண்டில் மக்கள் வசதியான வாழ்க்கை முறைக்கு மாறுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். ஆனால் அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் வீட்டு உபயோகப் பொருட்கள் வடிவமைக்கப்படவில்லை,” என்று இந்தப் பிரிவில் காணப்பட்ட இடைவெளியை சுட்டிக் காட்டினார் பரத்.

தொழில்முனைவு முயற்சி

பரத் மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சி நிறுவனத்தில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய அனுபவமிக்கவர். தொழில்முனைவில் ஈடுபட விரும்பி கார்ப்பரேட் பணியை விட்டுவிட முடிவு செய்தார்.

பரத்

”வீட்டு உபயோகப் பொருட்களை மக்களின் தேவைக்கேற்ப தயாரித்து வழங்க விரும்பினேன். நியாயமான விலையில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்,” என்கிறார்.

பரத் தனது முடிவில் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் இருந்தார். 2015-ம் ஆண்டு குருகிராமில் Lifelong Online தொடங்கினார். Bain & Company நிறுவனத்தில் உடன் பணியாற்றிய வருண் குரோவர், தொழில்முனைவர் அதுல் ரஹேஜா ஆகியோர் இவரது தொழில் முயற்சியில் இணைந்துகொண்டார்கள்.

“நுகர்வோர் சந்திக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்கும் வகையில் தயாரிப்புகளை வடிவமைக்கத் திட்டமிட்டேன். டி2சி வணிக மாதிரியில் கவனம் செலுத்தினேன். இதனால் செலவுகள் குறையும். இந்த பலன் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்,” என்கிறார் பரத்.

மூவரும் இணைந்து சிறியளவிலான சீட் கேப்பிடல் கொண்டு முதல் தயாரிப்பாக மிக்சர் கிரைண்டரை விற்பனை செய்யத் தொடங்கினார்கள்.

ஐந்தாண்டுகள் கடந்துள்ள நிலையில் வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலறைப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், லைஃப்ஸ்டைல் பிரிவு என பல வகையான தயாரிப்புகளை இந்த பிராண்ட் வழங்கி வருகிறது.

2019-ம் ஆண்டு பரத் குழுவினர் Tanglin Venture Partners மூலம் 40 கோடி ரூபாய் சீட் நிதி திரட்டியுள்ளனர். இன்று, 60 பேர் கொண்ட குழுவாக செயல்படும் Lifelong Online அதிகபட்சமாக 40 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக பரத் தெரிவிக்கிறார்.

மொத்த விற்பனை அளவில் 33 சதவீதம் சமையலறை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பிரிவில் இருந்து பெறப்படுவதாகவும் மூன்றில் ஒரு பங்கு அழகு சாதனப் பொருட்களில் பிரிவு பங்களிப்பதாகவும் மீதமுள்ளவை லைஃப்ஸ்டைல் மற்றும் சுகாதாரப் பிரிவில் இருந்து கிடைப்பதாகவும் பரத் தெரிவிக்கிறார்.

தொழிற்சாலை மற்றும் சில்லறை வர்த்தகம்

அமேசான், ஃப்ளிப்கார்ட், Tata Cliq, Nykaa, பேடிஎம், ஸ்னாப்டீல், 1Mg போன்ற ஆன்லைன் தளங்களிலும் ஆஃப்லைன் முறையிலும் 500-க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் Lifelong Online தயாரிப்புகள் சில்லறை வர்த்தக முறையில் விற்பனை செய்யப்படுகின்றன.

”முன்பெல்லாம் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கக் கடைக்குச் செல்லும்போது அங்குள்ள விற்பனையாளர் எந்த பிராண்டைப் பரிந்துரைக்கிறாரோ அதை மக்கள் நம்பி வாங்கிவிடுவார்கள். ஆனால் இன்று மக்கள் ஆன்லைனில் தயாரிப்பு பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்கிறார்கள். பிராடக்டைப் பயன்படுத்தியவர்கள் கொடுக்கும் மதிப்பீட்டைக் கருத்தில் கொண்டே தீர்மானம் எடுக்கிறார்கள். இந்த வாடிக்கையாளர்களையே எங்கள் பிராண்ட் இலக்காகக் கொண்டுள்ளது,” என்று விவரிக்கிறார் பரத்.

இந்த பிராண்ட் தயாரிப்புப் பணிகள் கோவையில் உள்ள ஒரு தொழிற்சாலையிலும் ஹரியானாவில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன.

“எங்கள் தயாரிப்புகளை பிரத்யேகமாகத் தயாரிக்கும் தொழில்முனைவோர் உள்ளனர். தொழிற்சாலைகளில் நாங்கள் முதலீடு செய்யவில்லை. லீஸ் முறையில் எடுத்து தயாரிப்புப் பணிகள் மேற்கொள்கிறோம்,” என்கிறார்.

இதுபோல் செலவுகளைக் குறைப்பதாலும் டி2சி முறையில் விற்பனை செய்வதாலும் இடைத் தரகர்கள் தலையீடு தவிர்க்கப்பட்டு குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தயாரிப்புப் பணிகள்

Lifelong Online பிராண்ட் டி2சி மாதிரி மூலம் வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை எளிதாகக் கேட்டுப் பெறமுடிகிறது.

இந்தத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பொறியாளர்கள் தயாரிப்பை வடிவமைக்கிறார்கள்.

இவ்வாறு வடிவமைக்கப்பட்ட தயாரிப்பு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவுகளைப் பொருத்து மீண்டும் மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் தயாரிப்பு அதற்கேற்ப மறுவடிவம் பெறுகிறது.

இதைத் தொடர்ந்து பரத் மற்றும் குழுவினர் தர பரிசோதனை செய்து அதன் முடிவுகள் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் இறுதித் தயாரிப்பை சந்தையில் அறிமுகப்படுத்துகிறார்கள்.

சவால்கள்

Lifelong Online ஆரம்பத்தில் சில ஆண்டுகள் வரை சுயநிதியில் இயங்கி வந்தது. விரைவிலேயே விரிவாக்கப் பணிகளுக்காக நிதி தேவைப்பட்டது. அதனால் கடன் வாங்கியது.

“கடன் பெற்றுள்ள நிறுவனம் என்பதாலும் தொடங்கப்பட்டு நான்கைந்து ஆண்டுகளே ஆன நிறுவனம் என்பதாலும் முதலீட்டாளர்கள் நிதியளிக்க முன்வரவில்லை. செயல்பாட்டு மூலதனம் கொடுக்க வங்கிகளும் முன்வரவில்லை.  ஈக்விட்டி ஃபைனான்ஸ் மட்டுமே எங்கள் முன் இருந்த வாய்ப்பாக இருந்தது,” என்கிறார் பரத்.

கொரோனா பெருந்தொற்று சமயத்தில் வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு சென்று தயாரிப்பை இன்ஸ்டால் செய்வதும் சர்வீஸ் செய்வதும் சாத்தியமில்லாமல் போனது. இந்த செயல்முறைகளைத் தெளிவாக விளக்கும் உள்ளடக்கங்களை உருவாக்கி டிஜிட்டல் வாயிலாக வழங்கி சிக்கலுக்கு தீர்வு கண்டுள்ளனர்.

வருங்காலத் திட்டங்கள்

வாடிக்கையாளர்களின் தேவையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தயாரிப்பை உருவாக்கி புதுமை படைப்பதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாங்குவதாக பரத் குறிப்பிடுகிறார்.

“இந்தப் பிரிவில் செயல்படும் மிகப்பெரிய பிராண்டுகள் டிஜிட்டல் ரீதியாகவும் எங்களைப் போல் டி2சி மாதிரியிலும் முழுமையாக செயல்பட அதிக காலம் எடுக்கும்,” என்கிறார் பரத்.

வரும் நாட்களில் மேலும் பல தயாரிப்புகளை வழங்க பரத் திட்டமிட்டுள்ளார். வீட்டு உபயோகப் பொருட்களைப் புதுமையாக வடிவமைக்க இளம் பொறியாளர்களையும் வடிவமைப்பாளர்களையும் ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளார்.

ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா