பதிப்புகளில்
’வாவ்’ வாசல்

ஏடிஎம்-ல் கிடந்த ரூ.10000- உரியவரிடம் ஒப்படைக்க 10 நாட்களாக தூங்காமல் போராடும் ஹானஸ்ட் தாத்தா!

ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி, பணம் தானாக கொட்டியது, ஏடிஎம் மிஷினையே திருடிச் செல்ல முயற்சி.. இப்படித்தான் ஏடிஎம் பற்றிய செய்திகளை நாம் ஊடகங்களில் பார்த்திருப்போம். ஆனால், எதிர்பாராதவிதமாக ஏடிஎம்-ல் கேட்பாரற்று கிடைத்த பணத்தை, உரியவரிடம் ஒப்படைக்க 10 நாட்களாய் நடயாய் நடந்துள்ளார் ராமசந்திரன்.

Chitra Ramaraj
12th Jul 2019
48+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவரான இவர், பெனசன் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார்.


இந்நிலையில், இம்மாதம் முதல் தேதியன்று இரவு 7 மணியளவில் தனது பென்சன் பணத்தை எடுப்பதற்காக திருவேற்காடு சாலையில் உள்ள ஹெச்.டி.எப்.சி வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார் ராமச்சந்திரன். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்கனவே வெளிவந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் இருந்தது. எடுப்பதற்கு வசதியாக வெளியில் இருந்த அந்த நோட்டுக்களைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

ATM

பட உதவி: விகடன்

தனக்கு முன் பணத்தை எடுக்க வந்த யாரோ தான் இந்தப் பணத்தை தவற விட்டிருக்க வேண்டும் என அவர் தெரிந்து கொண்டார். ‘பாவம் என்ன அவசரத்திற்காக பணத்தை எடுக்க வந்தார்களோ.. இப்படித் தவற விட்டு விட்டார்களே’ என ராமச்சந்திரனுக்கு கவலை ஏற்பட்டது. எப்படியும் இந்தப் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தே தீருவது என அவர் முடிவெடுத்தார். ஏடிஎம் மிஷினில் இருந்து கிடைத்த பணத்தில், நான்கு 2,000 ரூபாய் நோட்டுகளும், மூன்று 500 ரூபாய் நோட்டுகளும், இரண்டு 200 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஒரு 100 ரூபாய் நோட்டு என மொத்தத்தில் பத்தாயிரம் ரூபாய் இருந்தது.


அதனைத் தொடர்ந்து ஏடிஎம்-ல் பணம் எடுக்க வந்தவர்களிடம் இது குறித்து அவர் விசாரித்தார். பணத்தைத் தவற விட்டவர்கள் யாரேனும் மீண்டும் பணத்தைத் தேடி வருகிறார்களா என அங்கேயே காத்திருந்தும் பார்த்துள்ளார். ஆனால், அப்படி யாரும் வரவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார் ராமசந்திரன்.


பெனசன் பெற்று வாழ்பவரான ராமச்சந்திரனுக்கு, அடுத்தவர் பணத்தை கையில் வைத்திருப்பதே பெரிய உறுத்தலாக இருந்துள்ளது. இதனால் இரவில் தூக்கம்கூட வராமல் தவித்துள்ளார். ராமச்சந்திரனைப் போலவே அவரது குடும்பத்தாரும் நேர்மையானவர்களாக இருப்பது அவரது அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அவரது குடும்பத்தாரும், அப்பணத்தை நாமே வைத்துக் கொள்ளலாம் எனக் கூறாமல், உரியவரிடம் அதனை ஒப்படைக்க ராமச்சந்திரன் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் ஆதரவாக இருந்து வந்தனர்.

இதையடுத்து மறுநாள் காலை, அதாவது ஜூலை 2-ம் தேதி சம்பந்தப்பட்ட ஏடிஎம் மையத்தின் வங்கிக் கிளை குறித்து விசாரித்தார் ராமச்சந்திரன். அதில், முகப்பேர் கிழக்கில் அந்த வங்கியின் கிளை இருப்பது அவருக்கு தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து வெயிலையும், முதுமையையும் பொருட்படுத்தாமல், அயப்பாக்கத்திலிருந்து முகப்பேருக்கு சென்றுள்ளார் அவர்.

அங்கு வங்கியின் மேலாளரைச் சந்தித்து ஏடிஎம்மில் தனக்கு பத்தாயிரம் பணம் கிடைத்த விபரத்தை அவர் கூறியுள்ளார். விபரத்தை தெரிந்து கொண்ட வங்கி மேலாளர், ‘தலைமை அலுவலகத்தில் இது குறித்து கேட்டுவிட்டு, தொடர்பு கொள்வதாகவும், அதுவரை பணத்தை நீங்களே வைத்திருங்கள்’ என்றும் கூறியுள்ளார். இதனால் பணத்தை வங்கியில் ஒப்படைக்க முடியாமல், மீண்டும் அதனை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார் ராமச்சந்திரன்.

நான்கு நாட்களுக்குப் பிறகு வங்கியில் இருந்து ராமச்சந்திரனை போனில் அழைத்து, பணத்தை வங்கியில் வந்து ஒப்படைக்கும்படி கூறியுள்ளனர். இதனால் மீண்டும் அயப்பாக்கத்தில் இருந்து முகப்பேருக்குச் சென்றுள்ளார் ராமச்சந்திரன். அங்கு பணத்தைப் பெற்றுக் கொண்ட வங்கி அதிகாரிகள், அதற்கான ஒப்புகைச் சீட்டைத் தர மறுத்துள்ளனர். இதனால் வங்கி ஊழியர்கள் மீது ராமச்சந்திரனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பணம் உரியவர்களிடம் சென்று சேராதோ என அச்சமடைந்த அவர், ஒப்புகைச் சீட்டு தந்தால் மட்டுமே பணத்தை ஒப்படைப்பேன் எனக் கூறியுள்ளார். ஆனால் அதற்கு வங்கி அதிகாரிகள் சம்மதிக்காததால், பணத்தை அவர்களிடம் ஒப்படைக்க மறுத்து விட்டார் ராமச்சந்திரன். இதனால் மீண்டும் பணத்துடன் வீடு திரும்பினார் அவர்.

யார் என்ன கஷ்டத்திற்காக எடுத்த பணமோ, பணத்தை தவற விட்டவர்கள் என்ன வேதனைப் படுகிறார்களோ என்பதையே சிந்தித்துக் கொண்டிருந்த ராமச்சந்திரன், வங்கி இதற்கு உரிய ஒத்துழைப்பு கொடுக்காததால் போலீசாரின் உதவியை நாடியுள்ளார். ஜெ.ஜெ.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்தரிடம் நடந்த சம்பவங்களை அவர் விவரித்துள்ளார். அவரும் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் போன் மூலம் பேசியுள்ளார். அப்போதும் இந்த விவகாரத்தில் நல்ல முடிவு எட்டப்படவில்லை.

இதனால் பணம் கிடைத்த ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி கேமரா மூலம், ராமச்சந்திரனுக்கு முன் பணம் எடுத்தவர் யார் என்பது குறித்து கண்டுபிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். பணத்தை தவற விட்டவர்களைக் கண்டுபிடிக்கும் வரை, பத்தாயிரம் ரூபாயையும் ராமச்சந்திரனையெ வைத்திருக்கும்படி கூறி விட்டனர் போலீசார்.

இதனால் ஏடிஎம்மில் கிடைத்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை கையில் வைத்துக் கொண்டு, எப்படி உரியவர்களிடம் ஒப்படைக்கப் போகிறோம் என்ற கவலையில் இருக்கிறார் ராமச்சந்திரன்.

ramachandran


சாலையில் ஒரு ரூபாய் கிடந்தாலே, யாரும் பார்க்கிறார்களா எனச் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு செல்பவர்கள் நிறைந்த இந்த சமூகத்தில் ராமச்சந்திரனைப் போன்ற நேர்மையானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நாம் உழைத்துச் சம்பாதித்த பணம் மட்டுமே நமக்குப் போதும், அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படக் கூடாது என மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ராமச்சந்திரனும், அவரது குடும்பத்தினரும் இருந்து வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட வங்கி நினைத்திருந்தால் சுலபமாக பணத்தை தவற விட்டவர்களை கண்டுபிடிக்க முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.


ஆனால், இதற்காகவெல்லாம் கவலைப் பட்டுக் கொண்டு ஓய்ந்து விடவில்லை ராமச்சந்திரன். முதுமையையும் பொருட்படுத்தாது, தன் கையில் கிடைத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தே தீருவது என அதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

எப்படியும் போலீசார் பணத்தை தவற விட்டவர்களைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ள போதும், கடந்த பத்து நாட்களாக தனக்குச் சொந்தமில்லாத பணத்தை கையில் வைத்துக் கொண்டு தூங்கக்கூட முடியாமல் அவதிப்பட்டு வருகிறாராம் ராமச்சந்திரன். அதோடு வங்கியின் அலைக்கழிப்புகளாலும் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.


உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா...’ என்ற பாடல் வரிகள் தான் நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

48+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags