நடமாடும் ஆட்டோவில் சுடச்சுட சுவையான மீன்கள் விற்கும் பட்டதாரி இளைஞர்!

மீன் உணவின் மருத்துவக் குணங்களை மக்களுக்கு எடுத்துரைத்து, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க ஓர் ஆட்டோவை வடிவமைத்து நடமாடும் மீன் உணவகமாக்கி கடை நடத்துகிறார் இந்த பிபிஏ பட்டதாரி.

12th Mar 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

அசைவ உணவு வகைகளிலேயே வாசனைக்கும், சுவைக்கும் பெயர் பெற்றது மீன் உணவுகள். அதிலும் சமைக்கும்போதே மீன் குழம்பின் வாசனை மூக்கைத் துளைக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. மீன் பொறிக்கும் வாசனையை வைத்தே வீட்டில் என்ன சமையல் என்பதை குழந்தைகள் கூட எளிதாக சொல்லிவிடும். அந்தளவுக்கு மீன் சமையலின் வாசனை தெரு முழுவதும் மணக்கும்.


அதிலும் விடுமுறை நாளில் நல்ல காரசாரமாக மீன் குழம்பு ஊற்றி சாப்பிட்டு விட்டு ஓர் குட்டித் தூக்கம் போட்டால்தான் பலருக்கு விடுமுறையை நன்றாக என்ஜாய் செய்த திருப்தியே ஏற்படும். இவற்றின் வாசனையே நம் பசியை இருமடங்காக்கி, இன்னும் இன்னும் என கேட்கத் தூண்டி நம் வயிற்றை நிறைய வைத்துவிடும் என்பது ஓர்புறம் இருந்தாலும், வேறெந்த உணவுப் பொருளிலும் இல்லாத புரதச்சத்து, மருத்துவக் குணங்கள் என மற்றொருபுறம் இது ஓர் ஆரோக்கியமான உணவும் கூட. வளரும் குழந்தைகள் முதல் வயதான முதியோர் வரை வயது வித்தியாசம் இன்றி அனைவரும் விரும்பிச் சாப்பிடும் உணவும் மீன்தான்.

மீன் கடை

கூடுமானவரை அசைவ உணவுகளைத் தவிர்க்குமாறு அறிவுரை கூறும் மருத்துவர்கள்கூட மீன் உண்ணக்கூடாது என பெரும்பாலும் சொல்வதில்லை. அந்தளவுக்கு மீன் உணவுகளில் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. இத்தகைய மீன் உணவுகளின் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்து, அவர்களின் நலன் காக்க வேண்டும், ஆரோக்கியமான ஓர் சமூகத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காகவே கடல் மீன் உணவு உணவகத்தை தொடங்கி நடத்தி வருகிறார் சுரேஷ்குமார் என்ற பிபிஏ பட்டதாரி இளைஞர்.


இந்த மீன் உணவு கடை நடத்தவே இவர் ஓர் ஆட்டோவையும் பிரத்யேகமாக வடிவமைத்து நடமாடும் மீன் உணவகமாகப் பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது சென்னை கே.கே. நகர் பகுதியில் வசித்து வரும் சுரேஷின் பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதி. அதனால்தானோ என்னவோ இயற்கையாகவே அவருக்கு மீன் உணவுகளின் மீது தீராத காதல் ஏற்பட்டு, தான் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெறவேண்டும் என்பதற்காகவே பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தவர், அனைத்தையும் ஓதுக்கி வைத்துவிட்டு, தற்போது முழு நேரமும் மீன் வியாபாரத்தில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.


இதுகுறித்து அவர் நம்மிடம் கூறியதாவது,

“பிபிஏ முடித்துவிட்டு, பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தேன். ஆனால் என் மனம் மட்டும் தனியாக ஓர் மீன் உணவகம் திறக்கவேண்டும் என துடித்துக் கொண்டே இருந்தது. ஏற்கெனவே எனது தாயார் படப்பையில் கடந்த 5 வருடங்களாக ஓர் ஹோட்டலை நடத்தி வருகிறார். எனவே எனக்கு இத்தொழிலில் ஓரளவுக்கு அனுபவமும் இருந்தது. அதற்காக ஒரு ஆட்டோவை விலைக்கு வாங்கினேன். அதனை நடமாடும் மீன் உணவுக் கடையாக மாற்றினேன்,” என்கிறார்.
ஆட்டோ

இவர் இந்த உணவகத்தைத் திறந்து 2 மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் அதற்குள் தனக்கென ஓர் வாடிக்கையாளர் கூட்டத்தையே கவர்ந்திழுத்துவிட்டார். இவரின் இந்த வெற்றிக்குப் பின்னால் ஓர் அசாத்தியமான கடுமையான உழைப்பு உள்ளது. வீட்டிலேயே கைகளால் அரைத்து தயாரிக்கப்படும் மசாலாப் பொருள்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் கூடுதலாக இவர்களின் கைவண்ணத்தில் கிடைக்கும் சுவையான மீன் கறி என இவரின் வெற்றிக்கான படிக்கட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நள்ளிரவு 1 மணிக்கு நானும், எங்கப்பாவும் துறைமுகத்துக்குப் போவோம். அங்க 3 மணியில் இருந்து 5 மணிவரை நடைபெறும் ஏலத்தில் கலந்துகிட்டு மீன்களை வாங்குவோம். இதுதவிர 6 மணிக்கு மேலதான் சில்லரை விலையில் சில மீன் வகைகள் கிடைக்கும். இத வீட்டுக்கு வாங்கி வரவே 6 மணி ஆயிடும். அப்புறம் அந்த மீன்களையெல்லாம் வெட்டி, கழுவி, சுத்தம் செய்து மசாலா போட்டு ஊற வைக்கணும். இதுக்கே நேரம் சரியா இருக்கும். சாயங்காலம் 4.30 மணிக்கு கடையைத் திறந்தா, இரவு 10.30 மணி வரை பிசியா இருக்கும் என்கிறார்.
துறைமுகம்

அதிகாலையில் துறைமுகத்தில் மீன்களை ஏலத்தில் எடுக்கும் சுரேஷ்குமார்.

பிறகு எப்பதான் தூங்குவீங்க என்ற நமது கேள்விக்கு, இரவு 11 மணிக்கு கடையை முடிச்சுட்டு வீட்டுக்குப் போய் சாப்பிட்டு, பிறகு நேராக கிளம்பி துறைமுகத்துக்கு மீன் வாங்க போவோம்ல, அப்பதான் காரிலேயே படுத்துத் தூங்குவோம் என்கிறார் அசால்ட்டாக.

நாளொன்று சில மணி நேரம் மட்டுமே தூங்கி, பின் நாள் முழுவதும் வேலை செய்யும் இந்த மீன்கடையில் இவர்கள் தினசரி 40 கிலோ வரை மீன்களை வாங்கி, பொறித்து விற்பனை செய்கின்றனர். இதில் ஓர் நாளைக்கு ரூ.8 ஆயிரம் மூதலீடு செய்தால், ரூ.12 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். மேலும், இவரின் கடையில் 7 நபர்கள் சம்பளத்துக்கு வேறு பணிபுரிகின்றனர்.
மீன்கள்
அப்படி இந்தத் தொழிலில் என்ன லாபம் கிடைக்கிறது என்றால், நான் மீன்களை மிகக் குறைந்த விலைக்குத்தான் விற்கிறேன். எனக்கு மீன் உணவுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதே முக்கியம், பணம் அல்ல என்கிறார் தெளிவாக.

கடந்த வாரம் கூட பெங்களூருவில் இருந்த காரில் வந்த 6 இளைஞர்கள் இங்கு வந்து மீன்களை உண்டு விட்டு, நீண்ட நேரம் அமர்ந்து உரையாடிச் சென்றனர். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கு சென்றால் தரமான மீன்கள், ஆரோக்கியமான முறையில் சமைத்து, குறைந்து விலையில் அளிப்பார்கள் என்பது மக்களுக்குத் தெரியவேண்டும், மக்களிடம் மீன் உணவுகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என்பதே என் லட்சியம் என்கிறார்.


இவரிடம் ரூ.10க்கும் பொறித்த மீன் கிடைக்கும், ரூ.150, 200க்கும் சுவையான மீன்கள் கிடைக்கும். வரும் வாடிக்கையாளரின் முன்பே மீன்கள் சுடச்சுட எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்துத் தரப்படுகிறது. இதனாலேயே நாளுக்குநாள் இவரின் நடமாடும் உணவகத்தில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதுகிறது.


மேலும், இவர் இந்த மீன் வியாபாரம் மட்டுமன்றி, இந்த வியாபாரத்துக்கு பயன்படுத்தப்படும் ஆட்டோவையும் தயாரித்து, ஆர்டர் செய்பவர்களுக்கு வழங்கி வருகிறார். பொதுவாக ரூ.1 லட்சத்துக்கு ஓர் ஆட்டோவை வாங்கி, வாடிக்கையாளரின் விருப்பம் மற்றும் தேவையைப் பொறுத்து ஆட்டோவை வடிவமைத்தும் தருகிறார்.

மீன்

விற்பனைக்காக மசாலா தடவி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மீன் வகைகள்.

இதே ஆட்டோ பாடிகட்டும் தொழிலில் பலரும் சக்கைபோடு போட்டு, லட்சங்களில் வருவாய் ஈட்டும்போது, இவர் மட்டும் ஓர் ஆட்டோ உணவகம் அமைத்துத் தர வெறும் பத்தாயிரம் மட்டுமே ஊதியமாக பெறுகிறார். இவரின் தயாரிப்பில் வெளிவந்துள்ள சுமார் 70 ஆட்டோக்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றும் பல்வேறு உணவகங்களாக நடமாடி வருகின்றன. இன்னும் விரும்பி கேட்பவர்களுக்கு பதினைந்தே நாள்களில் அவர்கள் விரும்பியதுபோன்ற ஆட்டோவை வடிவமைத்தும் தருகிறார்.


Sea Boss, Sea Foods என்ற பெயரில் இவர் நடத்தி வரும் கடல் மீன் உணவகத்தில் தற்போது மண்பானையில் மீன் குழம்பு தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சுகர், பிரஷர் என எந்ததெந்த நோய்களுக்கு என்னென்ன மீன் உணவுகளை உட்கொள்ளவேண்டும். எந்தெந்த மீன்களில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதையும் இவர் அழகாக பதாகைகளாக அவரது கடையில் வாடிக்கையாளர்களின் பார்வைக்காக வைத்துள்ளார்.


பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளால் பாதிப்பு, கோழி மற்றும் ஆட்டிறைச்சியில் விரைவான வளர்ச்சிக்காக வேதிப் பொருள்கள் சேர்ப்பு என அனைத்து உணவுப் பொருள்களிலும் கலப்படம் தலைவிரித்தாடும்போது, இயற்கை அன்னையான கடல் வாரி வழங்கும் மீன் உணவுகளில் மட்டும் தான் இயற்கையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த ஆரோக்கியமான உணவின் பயன் அனைத்து மக்களுக்கும் தெரியவேண்டும் என்பதையே முக்கியக் குறிக்கோளாக கொண்டுள்ள இவர், விரைவில் சென்னை மட்டுமன்றி தமிழகம் முழுவதும் இதுபோன்ற நடமாடும் மீன் உணவகங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

How has the coronavirus outbreak disrupted your life? And how are you dealing with it? Write to us or send us a video with subject line 'Coronavirus Disruption' to editorial@yourstory.com

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India