விஞ்ஞான உலகின் முதல் சூப்பர் ஸ்டாராக ஐன்ஸ்டீன் உருவானது எப்படி?

ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை நிருபிக்கும் வகையில், 1919ல் வெளியான கண்டுபிடிப்பு தான், அவரை ஒரு நட்சத்திர விஞ்ஞானியாக்கியது. நூற்றாண்டு விழா காணும் இந்த மகத்தான அறிவியல் கண்டுபிடிப்பை, சர்வதேச அறிவியல் தினமான இன்று, திரும்பி பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

10th Nov 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அறிமுகம் தேவையில்லை. அறிவியல் உலகின் ராக்ஸ்டராக திகழும் நட்சத்திர விஞ்ஞானி அவர்.


ஐன்ஸ்டீனுக்கு முன் எண்ணற்ற விஞ்ஞானிகளை உலகம் கண்டிருந்தாலும், ஒரு திரை நட்சத்திற்கு ஈடான புகழையும், ஈர்ப்பையும் வெகுமக்கள் மத்தியில் கொண்டிருந்த முதல் சூப்பர் ஸ்டார் விஞ்ஞானியாக ஐன்ஸ்டீன் விளங்குகிறார்.


ஐன்ஸ்டீன் பெயரை கேட்டதுமே, நவீன அறிவியலுக்கு அடிப்படையாக விளங்கும் அவரது கோட்பாடுகளை அறிந்தவர்கள் மட்டும் அல்ல, அவரது அறிவியலின் அடிப்படையை அறியாதவர்கள் கூட, வியப்பும், மதிப்பும் கொள்கின்றனர். விஞ்ஞான உலகில், ஐன்ஸ்டீனுக்கு இருக்கும் செல்வாக்கு அப்படி!


ஐன்ஸ்டீனுக்கு இப்படி பெயரும், புகழும் ஏற்பட்டது எப்படி தெரியுமா? அந்த நிகழ்வின் நூற்றாண்டு விழாவை இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்பது தெரியுமா?

einstein

புதிய அறிவியல்

ஆம், 1919ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி நடைபெற்ற நிகழ்வு தான் ஐன்ஸ்டீனை உலகறிச்செய்தது. அதற்கு முன் ஐன்ஸ்டீன் இயற்பியல் உலகில் மட்டுமே அறியப்பட்ட மேதையாக இருந்தார். புதிய அறிவியல் துவக்கமாக அமைந்த அவரது சார்பியல் கோட்பாட்டை பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை.


ஆனால், 1919ல், இங்கிலாந்தில் ராயல் சொசைட்டியில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சிக்கு பின், அகில உலகமும் ஐன்ஸ்டீன் பற்றி தெரிந்து கொண்டது. நியூட்டன் காலத்து விஞ்ஞானத்தை அவர் தலைகீழாக மாற்றிவிட்டார் எனப் போற்றியது. இத்தனைக்கும் ஐன்ஸ்டீனின் கோட்பாடு அறிவியல் தெரிந்தவர்களே எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு சிக்கலானதாக இருந்தது. இருப்பினும், அந்த புதிர் தன்மையே பொதுமக்கள் அவரைக் கொண்டாட வைத்தது.


அந்த நிகழ்ச்சியில் அப்படி என்ன நடந்தது என்றால், ஐன்ஸ்டீன் முன் வைத்திருந்த ’பொது சார்பியல்’ கோட்பாட்டிற்கான ஆதாரம் வெளியிடப்பட்டது.

ஐன்ஸ்டீனுக்கு முன்

இந்த நிகழ்ச்சி கொஞ்சம் ஸ்பெஷலானது. ஏனெனில், ஐன்ஸ்டீன் அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே 1915ல், பொது சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டிருந்தார். ஈர்ப்பு விசை தொடர்பாக அது வரை இருந்த புரிதலை தலைகீழாக மாற்றும் வகையில் இந்த கோட்பாடு அமைந்திருந்தது.


ஈர்ப்பு விசை என்றதும், நியூட்டன் பெயர் தான் நினைவுக்கு வரும். ஈர்ப்பு விசை என்பது வெளி முழுவதும் பரவியிருக்கும் விசை என்றும், பிரம்மாண்ட பருப்பொருட்களை ஒன்றுக்கு ஒன்று இழுக்கும் விசை என்றும் நியூட்டன் நம்பினார். சூரியனின் ஈர்ப்பு விசை பூமியை இழுக்கிறது என்றும், பதிலுக்கு பூமியின் ஈர்ப்பு விசை அதை பிடித்துத் தள்ளுகிறது என்றும் அவர் கருதினார்.

ஐன்ஸ்டின் இதற்கு முற்றிலும் மாறுபட்ட கோட்பாட்டை முன்வைத்தார். ஈர்ப்பு விசையே வெளி என்பதாக அவரது கோபாடு அமைந்திருந்தது. காலத்தையும், வெளியையும் ஒன்றாக இணைப்பதாகவும் இது அமைந்திருந்தது. காலமும், வெளியும் நிலையான மேடை போல அல்லாமல், அலை பாயும் தன்மை கொண்டிருக்கிறது என்று ஐன்ஸ்டீன் கூறினார்.

காலமும் வெளியும், ஒரு பிரம்மாண்ட ரப்பர் துணி பரப்பு போல படர்ந்திருக்கும் நிலையில், அதிக எடையுள்ள பருப்பொருள் அதன் மையத்தை குவியச் செய்வதாகவும் ஐன்ஸ்டீன் கூறினார். கனமான கோலி குண்டு, ரப்பர் துணி நடுவே எப்படி தாக்கம் செலுத்தி குழிவை ஏற்படுத்துமோ அதே போல, பிரம்மாண்டமான பொருட்கள், காலவெளியின் மீது தாக்கம் செலுத்துகிறது.

ஈர்ப்பு விசை ஏன்?

ஆக, பூமி, சூரியனை நோக்கி இழுக்கப்படுவது விசையினால் அல்ல. கால வெளியின் மீது சூரியன் தாக்கம் செலுத்தி, அதன் மையத்தை குவியச்செய்கிறது. இதனால், சூரியனை சுற்றியுள்ள காலவெளி வளைகிறது. இதன் காரணமாகவே, அதன் பாதையில் செல்லும் பூமி ஈர்க்கப்படுகிறது. அதாவது, துணி பரப்பின் மைத்தில் எடையை வைத்தால், மற்ற இடங்களில் உள்ள பொருட்களும் மையத்தை நோக்கி இழுக்கப்படுவது போல இது நிகழ்கிறது.

அதிக எடையுள்ள பருப்பொருட்களால், கால வெளி வளைய நேர்வதே ஈர்ப்புவிசைக்கான காரணம் என்பதே ஐன்ஸ்டீன் முன்வைத்த இந்த பொது சார்பியல் கோட்பாட்டின் அடிப்படையாக அமைந்தது.

நியூட்டன் கண்டறிந்து கூறிய ஈர்ப்பு விசைக் கோட்பாட்டை தலைகீழாக புரட்டிப்போடும் வகையில், ஐன்ஸ்டீனின் புதிய கோட்பாடு அமைந்திருந்தது.


இதை சரி பார்ப்பதற்கான வழியையும் ஐன்ஸ்டீனே முன் வைத்திருந்தார். சூரியன் போன்ற பிரம்மாண்டமான பருப்பொருள், கால வெளியை வளையச்செய்யும் என்பதால், அதன் பாதையில் வரும் எந்த பொருளும் லேசாக வளையவே செய்யும் என்று அவர் கூறினார்.


நேர் கோட்டில் செல்லக்கூடிய ஒளியும் இந்த விளைவுக்கு உள்ளாகும் என்பதால், சூரியன் அருகே ஒளிக்கதிர் வளைவதை பார்க்கலாம் என்றும் அவர் கூறினார். பெரிய தொலைநோக்கி வழியே பார்த்தால், ஒளியின் வளைவு, அருகாமையில் உள்ள நட்சத்திரங்களின் இருப்பிடம் மாறுபட்டு தோன்றுவதில் இருந்து இதை புரிந்து கொள்ளலாம் என்றும் ஐன்ஸ்டீன் கூறியிருந்தார்.

ஒளி

கிரகணத்தை தேடி

ஐன்ஸ்டீன் தனது கோட்பாட்டை நிருபிக்க முற்படவில்லை. அறிவியல் உலகின் முன் புதிய கோட்பாட்டை சமர்பித்துவிட்டு தனது ஆய்வில் மூழ்கிவிட்டார். காலவெளியின் வளைவே ஈர்ப்பு விசையை உண்டாக்குகிறது என ஐன்ஸ்டீன் கண்டறிந்து கூறிய கருத்தாக்கத்தை உலகிற்கு நிருபித்துக்காட்டும் பொறுப்பை, இங்கிலாந்தைச்சேர்ந்த ஆர்தர் எடிங்டன் மற்றும் வாட்சன் டைசன் ஆகிய விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டனர்.


இதற்காக அவர்கள் இரண்டு குழுக்களாக, 1919ம் ஆண்டு மே மாதம் ஆப்பிரிக்கா மற்றும் தென்னமெரிக்காவில் இருந்த பிரேசிலுக்கு சென்று அங்கிருந்த வனப்பகுதியில், அந்த ஆண்டு நிகழ்ந்த சூரிய கிரகணத்தை படம் பிடித்தனர்.


வழக்கமான காலங்களில், சூரியன் அருகே ஒளி வளைவதை படம் பிடிக்க வழியிருக்காது. ஏனெனில், சூரியனின் பிரகாசம் சுற்றியுள்ள நட்சத்திர வெளிச்சத்தை மங்கச்செய்துவிடும். எனவே தான், சூரிய கிரகணத்தைத் தேர்வு செய்தனர். அதிலும், 1919ல் நிகழ்ந்த சூரிய கிரகணம் ஆறு நிமிடம் நீடிக்கக் கூடிய அபூர்வ தன்மை கொண்டிருந்ததால், ஆய்வுக்கு சாதகமான அமைந்தது. பல்வேறு சவால்களுக்கு இடையே, இந்த ஆய்வை நடத்தி சூரிய கிரகண காட்சியை தொலைநோக்கியில் படம் பிடித்தனர்.


இந்த ஆய்வின் முடிவை தான், பின்னர் நவம்பர் மாதம், ராயல் சொசைட்டியில் வெளியிட்டனர். சூரியன் அருகே, ஒளிக்கதிர் லேசாக வளைவதற்கான ஆதாரம் தொலைநோக்கியில், படம் பிடிக்கப்பட்டதை குறிப்பிட்டு, ஐன்ஸ்டீனின் புதிய கோட்பாடு நிருபிக்கப்பட்டதை அவர்கள் உலகிற்கு அறிவித்தனர். அறிவியல் உலகையே புரட்டிப்போடும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்திருந்தது.

தலைகீழ் மாற்றம்

அது வரை அறிவியலின் மையமாக நியூட்டனின் ஈர்ப்பு விசை கருத்தாக்கமே அமைந்திருந்தது. அதை மையமாகக் கொண்டே இயற்பியல் விதிகளை நியூட்டன் வகுத்திருந்தார். ஆனால், ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு அதை மாற்றி, பிரம்மாண்ட பருப்பொருட்களால் காலவெளி வளைவதையும், அதன் தாக்கமே ஈர்ப்பு விசையாகிறது என்றும் உணர்த்தியது.

செய்தி

ஐன்ஸ்டீன் ஹீரோ

நியூட்டன் கண்டுபிடித்த ஈர்ப்பு விசைக்கான விளக்கத்தை மாற்றி அமைத்த ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு நிருபிக்கப்பட்டது, நியூட்டன் தேசிய நாயகனாக கொண்டாடப்பட்டு வந்த இங்கிலாந்தில் அறிவிக்கப்பட்டது. எதிர்பார்க்கக் கூடியது போல அறிவியல் உலகில் இந்த அறிவிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

லண்டன் டைம்ஸ் மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட நாளிதழ்கள், இந்த அறிவிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டன. டைம்ஸ்; அறிவியல் புரட்சி என இதை வர்ணித்தது. நியூட்டன் கருத்தாக்கம் மாற்றி அமைக்கப்பட்டது என்றும் அறிவித்தது. சொர்கத்தில் எல்லா ஒளியும் வளைகிறது என நியூயார்க் டைம்ஸ் வர்ணித்திருந்தது. ஐன்ஸ்டீன் புதிய கருத்துக்கு வெற்றி என்றும் தெரிவித்திருந்தது.

பிரபஞ்சம் பற்றிய மனித குலத்தின் புரிதலை மாற்றி அமைக்கும் புதிய அறிவியலுக்கான தொடக்கமாக அமைந்த, இந்த அறிவிப்பு ஏற்படுத்திய தாக்கம், ஐன்ஸ்டீனை புதிய நட்சத்திரமாக உருவாக்கியது. தொடர்ந்து அவரது கண்டுபிடிப்பை புரிந்து கொள்ள பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் (அது சிக்கலானதாக இருந்தது வேறு விஷயம்) ஆர்வம் காட்டியதும் அந்த ஆர்வத்தை தக்க வைத்துக்கொள்ளக்கூடியதாக அவரது கோட்பாடு இருந்ததும் ஐன்ஸ்டீன் புகழைய நீடிக்கச்செய்தது. இன்றளவும் இது தொடர்கிறது.


ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாடு நிருபனத்தின் நூற்றாண்டு விழா தொடர்பான மூலக்கட்டுரைகளை வாசிக்க:

1. நியூயார்க் டைம்ஸ் கட்டுரை | 2. ஸ்மித்சோனியன் கட்டுரை

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India