‘வீழ்வேன் என்று நினைத்தாயோ’ – மூடப்படும் நிலைக்குச் சென்று 50 கோடி நிதி திரட்டிய Freshmenu

இந்தியாவின் கிளவுட் கிச்சன் ஸ்டார்ட் அப்களில் முன்னோடியான Freshmenu கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வேறு நிறுவனம் கையகப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டபோதும் அதன் நிறுவனர் ராஷ்மி நம்பிக்கையுடன் முன்னேறிச் சென்று 50 கோடி ரூபாய் நிதி திரட்டும் அளவிற்கு மீட்டெடுத்துள்ளார்.
1 CLAP
0

ஃப்ரெஷ்மெனு (FreshMenu) நிறுவனம் இந்தியாவில் முன்னோடியாக செயல்படத் தொடங்கிய கிளவுட் கிச்சன்களில் ஒன்று. லாபகரமாக செயல்பட்டு வந்த இந்நிறுவனம், திடீரென்று கொரோனா உட்பட பல்வேறு காரணங்களால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதாக தெரிவிக்கிறார் இதன் நிறுவனர் ராஷ்மி தாகா.

இருப்பினும், ஃப்ரெஷ்மெனு நிலைமையை சமாளித்து மீண்டு எழுந்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று ஏராளமான துறைகளைப் புரட்டிப் போட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகள் சில துறைகளை பாதிப்பிலிருந்து மீட்டெடுத்துள்ளது.

ராஷ்மி தாகா - நிறுவனர், Freshmenu

அந்த வகையில், 2018-ம் ஆண்டு Prosus (முன்பு Naspers) நிறுவனம் ஸ்விக்கி நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்தது. இந்த முதலீடு இந்தியாவில் உணவுத் தொழில்நுட்பத் துறையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கிறார் ராஷ்மி.

இந்தியாவின் உணவுத் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே தடவையில் இவ்வளவு அதிக தொகை நிதி திரட்டியிருக்கிறது. அதே ஆண்டு ஜொமேட்டோ நிறுவனம் அலிபாபா போன்ற நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்டியுள்ளது.

“இந்தத் துறையில் 1 பில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டதும் எல்லோரது பார்வையும் இதன் பக்கம் திரும்பியது. எல்லோரும் இந்தத் துறையைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார்கள். அதிக நிதி திரட்டிய நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வதில் எல்லோரும் ஆர்வம் காட்டினார்கள்,” என ராஷ்மி விவரித்தார்.

2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃப்ரெஷ்மெனு, அந்த சமயத்தில் 3 மில்லியன் டாலர் வரை நிதி திரட்டி பல்வேறு நகரங்களில் செயல்படத் தொடங்கியிருந்தது.

“எனக்கு முன்பு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று கிடைத்ததை ஏற்றுக்கொள்வது அல்லது சூழலை எதிர்த்து நின்று போராடுவது. நிறுவனம் கையகப்படுத்தப்படுவது பற்றிய பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் இதுபோன்ற முடிவுகள் எடுப்பது கடினமாகவே இருந்தது,” என்கிறார் ராஷ்மி.

எந்த நிறுவனம் கையகப்படுத்துகிறதோ அதன் குரலே ஓங்கியிருக்கும். ஃப்ரெஷ்மெனுவையும் குழுவினரையும் பார்ட்னர் போல் நடத்துவார்களா என்பது சந்தேகமே. இவற்றை ராஷ்மி உணர்ந்திருந்தார்.

கடினமான சூழல்

இரண்டு வாய்ப்புகளில் எதைத் தேர்வு செய்வது என்பது பற்றி யோசித்தார். எதிர்த்து நின்று போராடத் தீர்மானித்தால் மீண்டும் ஆரம்பப்புள்ளியில் இருந்து தொடங்கவேண்டியிருக்கும்.

ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்தார். அவருடைய வணிகமும் வணிக மாதிரியும் தனித்துவமானது என்பதை திடமாக நம்பினார். அவரது காத்திருப்பிற்கு பலன் கிடைத்தது.

ஃப்ரேஷ்மெனு செஃப் குழு

ஃப்ரெஷ்மெனு சமீபத்தில் Florintree Advisors தலைமையில் 50 கோடி ரூபாய் (கிட்டத்தட்ட 6.4 மில்லியன் டாலர்) நிதி திரட்டியிருக்கிறது. கிச்சன் எண்ணிக்கைகளை அதிகப்படுத்தவும் புதிய பிராண்டுகளை அறிமுகம் செய்யவும் இந்தத் தொகை பயன்படுத்தப்பட உள்ளது.

Blackstone India முன்னாள் தலைவர் மேத்யூ சிரியாக் தலைமையில் Florintree Advisors செயல்படுகிறது.

”இந்தியாவில் கிளவுட் கிச்சன் துறையில் முன்னோடியாகத் திகழ்பவர் ராஷ்மி. வலுவான வணிகத்தைக் கட்டமைத்திருக்கிறார். வாடிக்கையாளர்கள் ஃப்ரெஷ்மெனுவை எந்த அளவிற்கு விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டிருக்கிறோம்,” என்று ஃப்ரெஷ்மெனு நிறுவனத்தில் முதலீடு செய்வது பற்றி மேத்யூ குறிப்பிட்டுள்ளார்

ஃப்ரெஷ்மெனு பிராண்டை மேலும் வலுவாக்குதல், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல், விநியோக சங்கிலி மேலாண்மை, தொழில்நுட்ப மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும் என்கிறார் மேத்யூ.

”ஃப்ரெஷ்மெனு தரமான முறையில் சேவையளித்து வருகிறது. இதில் சற்றும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். அதேசமயம் கிச்சன் நெட்வொர்க்கை விரிவுபடுத்த இருக்கிறோம். இந்தியாவின் முன்னணி கிளவுட் கிச்சன் நிறுவனமாக ஃப்ரெஷ்மெனுவை மாற்ற திட்டமிட்டிருக்கிறோம்,” என்கிறார் மேத்யூ.

ஃப்ரெஷ்மெனு குழு

ராஷ்மி, பிராண்டின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறார். இதுதான் அவருக்கு உந்துசக்தியாக இருந்து வருகிறது.

“நாங்கள் தரமான, ஃப்ரெஷ்ஷான உணவைத் தயாரிக்கிறோம். எங்கள் வணிக மாதிரி வலுவானது. எல்லோரும் டெலிவர் செய்கிறார்கள், சொந்தமாக கிளவுட் கிச்சன் தொடங்குகிறார்கள். ஆனால், எங்களுடைய செயல்பாடுகள் தனித்துவமானது,” என்கிறார் ராஷ்மி.

2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் Lightspeed Venture Partners நிறுவனத்திடமிருந்து ஃப்ரெஷ்மெனு 2.94 மில்லியன் டாலர் நிதி திரட்டியது. இது ஓரளவிற்குக் கைகொடுத்தாலும் வளர்ச்சிக்குப் போதுமானதாக இருக்கவில்லை.

“உணவு சந்தையில் வலுவான பிராண்டாக ஃப்ரெஷ்மெனு உருவாகியிருக்கிறது. எத்தனையோ கடினமான சூழல்களை சந்தித்திருக்கிறோம். செயல்பாடுகளை லாபகரமானதாக மாற்ற போராட வேண்டியிருந்தது. பெருந்தொற்று போன்ற மோசமான சூழல்களையும் எதிர்கொண்டு, போராடி, மீண்டு எழுந்திருக்கிறோம்,” என்கிறார் ராஷ்மி.

கொரோனா தாக்கம்

கோவிட்-19 பெருந்தொற்றின் அடுத்தடுத்த அலைகள் வணிகத்தை வெகுவாக பாதித்தது. குழுவினரின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக ராஷ்மி தெரிவிக்கிறார்.

”கிச்சன்களை திறம்பட நிர்வகிக்கவும் லாபம் ஈட்டவும் மெனு என்ஜினியரிங், சமையல் முறைகள், பேக்கேஜிங் என ஒவ்வொரு அம்சங்களிலும் கவனம் செலுத்தினோம்,” என்கிறார்.

ஃப்ரெஷ்மெனுவில் சில மாதங்களுக்கு சம்பள குறைப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. செயல்முறைகளையும் செலவுகளையும் மறுஆய்வு செய்துள்ளனர்.

2023 நிதியாண்டில் 200 கோடி ரூபாய் ஆண்டு தொடர் வருவாயை (ARR) எட்டவும் கிச்சன் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்தவும் தற்போது புதிதாகக் கிடைத்துள்ள நிதி உதவும் என்கிறார் ராஷ்மி.

முன்னோடி

இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கிளவுட் கிச்சன் ஸ்டார்ட் அப்களில் ஃப்ரெஷ்மெனு நிறுவனமும் ஒன்று. ஃப்ரெஷ்மெனு ராஷ்மியின் இரண்டாவது தொழில் முயற்சி.

“கார்ப்பரேட் நிறுவனங்களில் சேல்ஸ் பிரிவில் பணியாற்றிய பிறகு சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்தேன். சுயநிதியின் afday என்கிற ஸ்டார்ட் அப் தொடங்கினேன். கலை மற்றும் கலைப் பொருட்களைத் தொகுத்து வழங்கும் தளமாக இது செயல்பட்டு வந்தது,” என்கிறார் ராஷ்மி.

எதிர்பார்த்த அளவிற்கு இந்த முயற்சி வெற்றியடையாததால் ராஷ்மி இதை நிறுத்திக்கொண்டார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் வரை Bluestone, Ola போன்ற நிறுவனங்களில் விற்பனை பிரிவில் தலைமைப் பொறுப்பு வகித்தார்.

அதைத் தொடர்ந்து மீண்டும் தொழில்முனைவில் ஈடுபட விரும்பி உணவு வணிகத்தில் கவனம் செலுத்தினார்.

ரெஸ்டாரண்ட் மாடல்களில் வளர்ச்சியடைய முடியாது என்று முடிவு செய்த ராஷ்மி செஃப் மூலம் தயாரிக்கப்படும் ஃப்ரெஷ்ஷான உணவை பாக்ஸில் வழங்குவது பற்றி யோசித்தார்.

இப்படித் தொடங்கிய ஃப்ரெஷ்மெனுவின் பயணம் தினமும் 12,000 முதல் 15,000 ஆட்ர்கள் வரை பெறும் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது.

மெனு உருவாக்குவது, மூலப்பொருட்கள் முடிவு செய்வது, பேக்கேஜிங், டெலிவர் என அனைத்தையும் ஃப்ரெஷ்மெனு நிறுவனமே மேற்கொள்கிறது.

”உலகின் வெவ்வேறு உணவு வகைகளை வாடிக்கையாளர்களின் உணவுத் தட்டில் கொண்டு சேர்ப்பதுதான் ஃப்ரெஷ்மெனுவின் நோக்கம். வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் உணவை செஃப் சமைத்துக் கொடுக்க 5 கி.மீட்டர் வரை டெலிவர் செய்கிறோம். எப்போதும் ஃப்ரெஷ்ஷான மூலப்பொருட்களைக் கொண்டு ஃப்ரெஷ்ஷான உணவு கொடுக்கவேண்டும் என்று விரும்புவதால் ’ஃப்ரெஷ்மெனு’ என பெயரிட்டிருக்கிறோம்,” என்று புன்னகையுடன் குறிப்பிடுகிறார் ராஷ்மி.

ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world