டாட்காம் பிரச்சனையில் இருந்து Zoho மீண்டது எப்படி? ஸ்ரீதர் வேம்புவின் டர்னிங்க் பாயிண்ட் முடிவுகள்!

சென்னையைச் சேர்ந்த ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு வென்ச்சர் கேப்பிடலை நிராகரித்துவிட்டு சுயநிதியில் செயல்பட்டு பல மில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக வளர்ச்சியடையச் செய்துள்ளார்.
0 CLAPS
0

சமீபத்தில் ஜோஹோ கார்ப்பரேஷன் 2.6 மில்லியன் டாலர் (20 கோடி ரூபாய்) தொகையை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரோபோடிக்ஸ் நிறுவனமான GenRobotics Innovation நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. இது இந்திய ஸ்டார்ட் அப்களில் ஜோஹோ செய்யும் ஏழாவது முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்தியாவில் டீப்டெக் சூழலை மேம்படுத்துவதற்கு ஜோஹோ முன்னுரிமை அளித்து வருகிறது. Genrobotics நிறுவனத்தில் ஜோஹோ செய்துள்ள முதலீடு இது தொடர்பான முன்னெடுப்பாகும்,” என்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு.

ஏற்கெனவே பெங்களூருவைச் சேர்ந்த Voxelgrids நிறுவனத்தில் ஜோஹோ 5 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. அதைத் தொடர்ந்தே தற்போது GenRobotics நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

இத்தனை ஆண்டுகளில் இந்த யூனிகார்ன் ஐந்து டீப்டெக் ஸ்டார்ட் அப்களில் கிட்டத்தட்ட 10 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வென்ச்சர் கேப்பிடலை நிராகரித்துவிட்டு சுயநிதியில் செயல்பட்டு பல மில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக வளர்ச்சியடையச் செய்துள்ளார்.

27 ஆண்டுகளில் ஜோஹோ நிறுவனம் 75 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் எண்ணிக்கையுடன் 690 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் நிறுவனமாக ஓங்கி உயர்ந்து நிற்கிறது.

தொடக்கம்

ஸ்ரீதர் வேம்பு, டோனி ஜி தாமஸ், ஸ்ரீனிவாஸ் கனமுரு, குமார் வேம்பு, சேகர் வேம்பு, சைலேஷ் குமார் தவே ஆகியோர் இணைந்து ஜோஹோ நிறுவனத்தை நிறுவியுள்ளனர்.

“1995ம் ஆண்டுகளில் எங்களுக்குள் சில கேள்விகள் முளைத்தன. இந்தியாவில் ஏராளமான திறமைசாலிகள் இருக்கின்றனர். இவர்களை ஏன் நாம் வெளிநாடுகளுக்கு அனுப்பிவிடுகிறோம்? ஏன் உள்நாட்டு தொழில்நுட்ப பவர்ஹவுஸ் உருவாக்க முடியவில்லை? இந்தக் கேள்விக்கான பதில்தான் இந்த நிறுவனத்தைத் தொடங்க ஊக்கமளித்தது,” என்று யுவர்ஸ்டோரியிடம் இ-மெயில் வாயிலாக பகிர்ந்துகொண்டார் ஸ்ரீதர் வேம்பு.
”‘வணிகத்தில் எப்படி நீடித்திருப்பது?’ என்கிற கேள்வியைத் தொடர்ந்து முன்னிறுத்தியே விடை தேடினோம்,” என்கிறார் ஸ்ரீதர் வேம்பு.

ஸ்ரீதர் வேம்பு படித்த கல்லூரியின் சீனியர் டோனி. இவர் சிலிக்கான் வேலியில் SNMP இண்டர்னெட் ப்ரோட்டோகால் சாஃப்ட்வேர் ஒன்றில் பணியாற்றி வந்தார். 1996-ம் ஆண்டு இந்த சாஃப்ட்வேரை விற்பனை செய்ய அவருக்கு உதவி தேவைப்பட்டது. அப்போது ஸ்ரீதர் அவருடன் இணைந்துகொண்டார்.

அந்த சமயத்தில் ஜோஹோ நிறுவனம் அட்வெண்ட் நெட்வொர்க் மேனேஜ்மெண்ட் என்கிற பெயரில் செயல்பட்டது. ஸ்ரீதர் அதில் சேர்ந்தார். வர்த்தக நிகழ்ச்சி ஒன்றில் டோனி பூத் ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தார். அதில் சேல்ஸ்மேனாக ஸ்ரீதர் வேம்பு சேர்ந்தார்.

1997-ம் ஆண்டு இந்நிறுவனம் 350000 டாலர் விற்பனையை எட்டியது. இவை சென்னை ஆர்&டி யூனிட்டிற்கு பயன்படுத்தப்பட்டது.

அட்வெண்ட் வணிகத்தை ஸ்ரீதரும் அவரது குழுவினரும் சீரியஸான வணிகமாக பார்க்கத் தொடங்கிய காலகட்டம் இது.

“வாடிக்கையாளர்கள் எங்கள் பிராடக்டிற்கு கட்டணம் செலுத்த முன்வந்தார்கள். அவர்களுக்கு எங்கள் பிராடக்ட் தேவைப்பட்டது. இப்படி எங்கள் பிராக்ட் அதற்கான சந்தையைக் கண்டறிந்தது,” என்கிறார்.

1998-ம் ஆண்டு அட்வெண்ட் விற்பனை 1 மில்லியன் டாலரைக் கடந்தது. அடுத்த ஆண்டே விற்பனை இருமடங்கானது.

“சந்தை வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இருப்பினும் எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. இந்த சிறிய சந்தையே பிராடக்ட் எப்படி உருவாக்குவது, வாடிக்கையாளர்களை எப்படிக் கண்டறிவது, எப்படி விற்பனை செய்வது, வாடிக்கையாளர்களுக்கு எப்படி சப்போர்ட் செய்வது, எப்படி லாபம் ஈட்டுவது என பல்வேறு விஷயங்களை எங்களுக்குக் கற்றுக்கொடுத்தது,” என்கிறார்.

1999-ம் ஆண்டு வென்ச்சர் கேப்பிடல் நிறுவனத்திடமிருந்து ஒரு ஆஃபர் கிடைத்தது. ஆனால், ஸ்ரீதர் வேம்பு அதை மறுத்துவிட்டார்.

“வேறொருவரிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்கள் விருப்பத்தை ஈடேற்றுவது என்பது என்னைப் பொருத்தவரை சூதாட்டத்திற்கு சமமானது. எனவே நல்ல மனிதனாக, அந்த ஆஃபரை வேண்டாம் என மறுத்துவிட்டேன்,” என்கிறார்.

வலுவான மீட்சி

2000-ம் ஆண்டு ஸ்ரீதர் சிஇஓ பொறுப்பேற்றார். ஆண்டு வருவாய் 10 மில்லியன் டாலர் இருந்தது. அந்த சமயத்தில்தான், அதாவது 2001-ம் ஆண்டில் இந்நிறுவனம் டாட்-காம் பிரச்சனையை சந்தித்தது.

“வணிகம் பாதிக்கப்பட்டது. டெலிகாம் சந்தை மீளமுடியாத நிலையில் இருப்பது தெரிந்தது. எங்கள் வருவாய் மொத்தமும் அந்த சந்தையில் இருந்தே வந்துகொண்டிருந்தது,” என்கிறார் ஸ்ரீதர்.

வணிகத்தைத் தக்கவைத்துக்கொள்வது குறித்து ஸ்ரீதர் வேம்பு குழுவினருடன் கலந்து பேசினார். இந்நிறுவனம் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தத் தொடங்கியது. 2002-ம் ஆண்டு ஐடி மேனேஜ்மெண்ட் பிராடக்ட் ManageEngine, 2005-ம் ஆண்டு கிளவுட் டிவிஷன் Zoho.com போன்றவை அறிமுகமானது.

Zoho டொமெயின் அமெரிக்காவைச் சேர்ந்த ஹாஸ்பிடாலிட்டி ஸ்டார்ட் அப் ஒன்றிற்கு சொந்தமானதாக இருந்தது. 2002ம் ஆண்டு 5,000 டாலர் கொடுத்து ஜோஹோ அதை வாங்கிக்கொண்டது.

இத்தனை ஆண்டுகளில் இந்நிறுவனம் சாஃப்ட்வேர்-ஆஸ்-ஏ-சப்ஸ்கிரிப்ஷன் பிராடக்ட்ஸ் பல்வற்றை அறிமுப்படுத்தியிருக்கிறது. இவற்றிற்கு வணிகங்கள் ஓர் ஆண்டு பயன்பாட்டிற்கு கட்டணம் செலுத்தியது.

2005-ம் ஆண்டு நவம்பர் மாதம், இந்நிறுவனம் அதன் பிரபல பிராடக்டுகளில் ஒன்றான கஸ்டமர் ரிலேஷன்ஷிப் மேனேஜ்மெண்ட் (CRM) சாஃப்ட்வேர் அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து Mail, Writer, Sheet, Show, Creator, Docs, Meeting என பல்வேறு பிராடக்டுகளையும் அறிமுகப்படுத்தியது.

Sridhar Vembu, Co-founder and CEO, Zoho Corp

இப்படி பல பிராடக்டுகளை அறிமுகப்படுத்தி, பெரிய சந்தைகளில் நுழைந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏராளமான வாடிக்கையாளர்களைப் பெற்றது. அட்வெண்ட் என்கிற பெயரில் செயல்பட்ட நிறுவனம் 2009-ம் ஆண்டு Zoho Corporation என்கிற பெயரில் மறுபிராண்ட் செய்யப்பட்டது.

Zoho, ManageEngine, Qntrl, TrainerCentral என நான்கு பிரிவுகளுடன் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

Amazon, Philips, Godrej, OnePlus, Renault, Ola, Hotstar என மிகப்பெரிய ஜாம்பவான்கள் ஜோஹோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்.

2021 நிதியாண்டில் 1,917.72 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருக்கிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 140 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

2021 நிதியாண்டில் வணிக செயல்பாடுகள் மூலம் 5,229.65 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 22.3 சதவீதம் அதிகம்.

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், சீனா, சிங்கப்பூர், மெக்சிகோ, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இந்நிறுவனத்தின் அலுவலகம் செயல்படுகிறது. 10,000-க்கும் மேற்பட்டோர் இவற்றில் பணியாற்றுகின்றனர்.

ஜோஹோ ஆர்&டி பிராஜெக்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. கிராமப்புறங்களில் விரிவடைந்து அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

ஆங்கில கட்டுரையாளர்: மாள்விகா மாலு | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world