35 பைசா செலுத்தினால் ரூ.10 லட்சம் - ரயில் பயணக் காப்பீடு குறித்து அறிய வேண்டியவை!
ரயிலில் பயணிக்க விரும்புவோர் தங்கள் பயணச் சீட்டை ஐஆர்சிடிசி மூலம் எடுக்கும்போது, மிக எளிதாக வெறும் 35 பைசாவில் ரூ.10 லட்சத்துகான ரயில் பயணக் காப்பீட்டை எடுக்கலாம்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் பகுதியில் தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது ஷாலிமார் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியபோது, எதிர்திசையில் வந்த பெங்களூரூ - ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும் விபத்தில் சிக்கியது. இந்த பயங்கர விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர்.
நாட்டையே உலுக்கிய ரயில் விபத்துக்கு மத்திய அரசின் சார்பில் ரயில்வே துறையும், அந்தந்த மாநில அரசுகளும் நிதியுதவி வழங்குகின்றன.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஒடிசா விபத்தில் சிக்கிய பயணிகள் ஒருவேளை டிக்கெட் எடுக்காமல் பயணித்து இருந்தாலும், அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மருத்துவமனையில் உறவினர்கள் உதவியின்றி சிகிச்சை பெறுபவர்களுக்கு உதவிட அரசு சார்பில் ஒருவர் உடன் இருக்கும்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘139’ என்ற ஹெல்ப்லைன் எண் மூலம் மூத்த ரயில்வே அதிகாரிகள் அழைப்புகளுக்கு பதிலளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“காயமடைந்த அல்லது இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எங்களை தொடர்பு கொண்டால் அவர்கள் நேரில் வர ஏற்பாடுகள் செய்யப்படும். பயணம் மற்றும் பிற செலவுகளை நாங்களே கவனித்துக்கொள்வோம்,” என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர.
இந்த ரயில் விபத்துக்கான இழப்பீடு உடனடியாக வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம், சிறிய காயங்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெறும் 35 பைசாவுக்கு ரூ.10 லட்சம்:
மேற்கண்ட நிவாரண நிதி மட்டுமின்றி, இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோரில் தங்கள் பயணச் சீட்டை ஐஆர்சிடிசி மூலம் எடுத்தவர்கள், அதில் 35 பைசாவுக்கு காப்பீடு எடுத்திருந்தால், அவர்களுக்காக தனியாக காப்பீடுத் தொகை கிட்டும். இந்தக் காப்பீடு குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.
நாட்டையே கலங்கவைத்த ரயில் விபத்து நேர்ந்த சூழலில், காப்பீடு பற்றி பேசுவது சிலருக்கு எதிர்மறை எண்ணமாகத் தோணலாம். ஆனால், பெருந்தொற்று முதல் பேரிடர் வரையில் எதுவும் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற காலக்கட்டத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இத்தகைய எதிர்மறை சூழல்களில், உயிர் இழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலமும், கடுமையாக உடல் பாதிப்பு அடைந்தவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் நிலையில், பொருளாதார இழப்புகளை ஈடு செய்ய உதவும் காப்பீடு பற்றி தெரிந்துவைத்திருப்பது அவசியமே.
ரயில் காப்பீடு எடுப்பது எப்படி?
ஐஆர்சிடிசி (IRCTC) செயலி அல்லது வலைதளம் மூலம் நாம் ரயில் டிக்கெட்டை பதிவு செய்யும்போது, ‘நீங்கள் பயணக் காப்பீடு எடுக்க விரும்புகிறீர்களா?’ என்ற கேள்வி கேட்கப்படும். அதற்கு, ‘ஆம்’ (YES) என்று க்ளிக் செய்தாலே போதும். இதற்கான பிரிமியம் தொகை வெறும் 35 பைசா மட்டுமே ஆகும். நம்மில் பலரும் எதுவும் யோசிக்காமல் ‘நோ’ பட்டனை க்ளிக் செய்வது உண்டு. அப்படி செய்யாதிருப்பது நல்லது.
- நாம் பயணக் காப்பீட்டை தேர்ந்தெடுத்த உடன், காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து நமக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் மெயிலில் நாமினி சம்பந்தமான இணைப்பு வரும்.
- இந்த இணைப்புக்குள் சென்று நாமினி உள்ளிட்ட சில தகவல்களை பதிவு செய்ய வேண்டும். அத்துடன், அந்த இணைப்பில் கேட்கப்படும் பாலிசி நம்பர் ஐஆர்சிடிசி தளத்தில் நம் டிக்கெட் புக்கிங் ஹிஸ்டரியில் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்க.
- ஒருவேளை நாமினி உள்ளிட்ட தகவல்களை நாம் குறிப்பிடவில்லை எனில், ரயில் பயணத்தில் நமக்கு ஏதாவது அசம்பாவிதம் நேரிட்டால், அந்தக் காப்பீட்டு தொகை நம்முடைய சட்டப்படியான வாரிசுக்கு கிடைக்கும்.
ரயில் விபத்து அல்லது ரயிலில் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்து, ரயில் காப்பீடு எடுத்த பயணி ஒருவர் இறந்தால், அவர் குறிப்பிட்டிருந்த நாமினிக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்; அந்தப் பயணி நிரந்தரமாக முழுவதும் பாதிப்படைந்தால் அவருக்கு ரூ.10 லட்சமும், நிரந்தர பாதி பாதிப்படைந்திருந்தால் ரூ.7.5 லட்சமும் அல்லது படுகாயம் அடைந்திருந்தால் மருத்துவ செலவுகளுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும்.
அத்துடன், காப்பீடு செய்த பயணி இறந்துவிட்டால், அவரது சடலத்தை சொந்த ஊருக்குக் கொண்டு செல்வதற்காக காப்பீட்டு நிறுவனம் ரூ.10,000 வழங்கும் என்று ஐஆர்சிடிசி தெரிவிக்கிறது.
ரயில் பயணக் காப்பீடு செய்த நபரோ அல்லது அவரது நாமினியோ தங்களது பகுதிக்கு அருகில் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கு விபத்து நடந்த நான்கு மாதங்களுக்குள் சென்று, காப்பீட்டுத் தொகை கோரும் படிவத்தை நிரப்பி தரவேண்டும். அத்துடன், கேட்கப்படும் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். அதன்பின், 15 நாட்களில் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.
டெர்ம் இன்ஷூரன்ஸ் - யோசிக்கலாமே!
இந்த நேரத்தில் நாம் ‘டெர்ம் இன்ஷூரன்ஸ்’ பலன் குறித்தும் யோசிக்க வேண்டும். காப்பீட்டுத் திட்டங்களில் 'Term Insurance' என்பது ஒருவரின் இறப்புக்குப் பிறகு, அவரது குடும்பத்தை பொருளாதார ரீதியில் காக்கும் அற்புதமானத் திட்டம். இப்படி ஓர் எளியத் திட்டத்தில் மிகப் பெரிய பலன் வேறெதிலும் இருக்க வாய்ப்பு இல்லை.
நீங்கள், உங்களின் எதிர்காலத்துக்காகவும், உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்துக்காகவும் செயல்படுத்தி வரும் நிதித் திட்டங்களில் டேர்ம் இன்ஷூரன்ஸும் நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும். ஒருவேளை, இந்தக் காப்பீட்டுக் காலம் முடிவதற்குள் உங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டால், இந்தக் காப்பீட்டுத் திட்டம் நிச்சயம் உங்களின் குடும்பத்தைக் காலம் முழுவதும் நிதி நெருக்கடிகளில் இருந்து காக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
இதர காப்பீட்டுத் திட்டங்களைப் போல் இல்லாமல் டேர்ம் இன்ஷூரன்ஸைக் குறைந்த பிரீமியத்தில் வாங்க முடியும் என்பது தனிச் சிறப்பு. ஆனால், மற்ற காப்பீட்டுத் திட்டங்கள் போல் டேர்ம் இன்ஷூரன்ஸில் காப்பீட்டுக் காலம் முடிந்த பிறகு எந்தவிதமான காப்பீட்டுப் பலனையும் பெற இயலாது. இது, நமக்கு ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் மட்டுமே நம் குடும்பத்தைக் காக்க உதவும். ஆனால், இதற்காக நாம் செலுத்தும் ப்ரீமியம் தொகை என்பது மிக மிகக் குறைவானது என்பதை மனதில் கொண்டு, தயங்காமல் இந்தத் திட்டத்தில் இணையுங்கள்.
உதாரணமாக, ஒருவர் தனது 25 வயதில் ரூ.1 கோடி மதிப்பிலான 'டேர்ம் இன்ஷூரன்ஸ்' எடுத்திருந்தால், அவர் மாதம்தோறும் செலுத்தும் தொகை ரூ.1000-ஐ விடக் குறைவு. அவரது மரணத்துக்குப் பிறகு, அவரது குடும்பத்துக்குக் கிடைக்கத்தக்க ரூ.1 கோடி காப்பீடு தொகை என்பது அவரை நம்பி வாழும் குடும்பத்தினருக்கு பெருந்துணை என்பதில் ஐயமில்லை.
உங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் உங்கள் குடும்பத்தின் 'காப்பான்' - டெர்ம் இன்ஷூரன்ஸ்
Edited by Induja Raghunathan