Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

தன் 2 மாத சம்பளத்தை மாவட்ட பள்ளிகளை புதுப்பிக்க நன்கொடை செய்த கலெக்டர்!

ஒரு மாவட்ட ஆட்சியர் நினைத்தால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை காட்டியுள்ளார் இவர்.

தன் 2 மாத சம்பளத்தை மாவட்ட பள்ளிகளை புதுப்பிக்க நன்கொடை செய்த கலெக்டர்!

Friday January 24, 2020 , 3 min Read

ஸ்வப்னில் தெம்பே மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில் வளர்ந்தவர். கடின உழைப்பாளியான இவரது பயணம் பலருக்கு உந்துதலளிக்கக் கூடியது.


பொறியாளரான இவர் ஐஏஎஸ் அதிகாரி ஆனார். இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான மேகாலயாவின் கிழக்கு காரோ மலைப்பகுதியின் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். முப்பத்தி இரண்டு வயதான இவர் தனது வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களைக் கடந்து வந்துள்ளார். இளமைக் காலத்தில் கடினமான சூழல்களை எதிர்கொள்ள நேர்ந்தபோதும் மனம் தளர்ந்துவிடவில்லை. யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆயத்தமானவாறே பயிற்சி மையத்தில் வகுப்பெடுத்து வருவாய் ஈட்டினார்.

1

இன்று சிவில் சர்வீஸ் அதிகாரியாக தனது மாவட்டத்தில் உள்ள பள்ளிகளைப் புதுப்பிப்பதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை மேம்ம்படுத்தி வருகிறார். இவர் மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களில் STAR (School Transformation by Augmenting Resources) என்கிற திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம் ஏற்கெனவே 60 பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


”சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த சிவில் சர்வீஸ் எழுத தீர்மானித்தேன். தரமான கல்வியின் மூலம் பெரும்பாலான சமூக பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும் என்பதே என்னுடைய நம்பிக்கை. எனவே இந்தப் பிரிவில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். இதில் நேரடியாக பங்களிப்பதில் நான் தீவிர முனைப்புடன் இருந்தேன்.

”கிழக்கு காரோ மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த என்னுடைய இரண்டு மாத சம்பளத் தொகையை நன்கொடையாக வழங்கினேன்,” என்று ஸ்வப்னில் சோஷியல்ஸ்டோரி உடனான உரையாடலில் தெரிவித்துள்ளார்.
2

ஊக்கமளிக்கும் பயணம்

ஸ்வப்னில் ஜபல்பூரில் பிறந்தவர். கத்னி நகரில் வளர்ந்தார். இவரது அப்பா புருஷோத்தம் தெம்பே கணித ஆசிரியர். ஸ்வப்னில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிப்பை முடித்ததும் ஐஐடி கராக்பூரில் மெக்கானிக்கல் பொறியியல் படித்தார்.


2008-ம் ஆண்டு கல்லூரி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தபோது ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்று தீர்மானித்தார். ஸ்வப்னில் யுபிஎஸ்சி தேர்வு எழுதுவதற்கு முன்பு இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி திட்டத்தில் பொதுக்கொள்கை பிரிவில் முதுகலைப் படிப்பில் சேர்ந்தார்.

3

ஸ்வப்னில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற இருந்த சமயத்தில் அவரது அப்பா நோய்வாய்பட்டு உயிரிழந்தார்.

”என் அப்பாவின் உடல்நிலை மோசமாக இருந்த இரண்டாண்டுகள் என் வாழ்க்கையின் கடினமான காலகட்டமாக இருந்தது. குடும்பத்தின் நிதிநிலை மோசமாக இருந்ததால் நான் வருவாய் ஈட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே நான் ஹைதராபாத்தின் டெலாய்ட் நிறுவனத்தில் பிசினஸ் அனலிஸ்டாக பணியில் சேர்ந்தேன். இரண்டாண்டுகள் பணத்தை சேமித்த பின்னர் எனக்கு ஆர்வம் இருந்த பகுதியில் செயல்படத் தொடங்கினேன்,” என்று நினைவுகூர்ந்தார்.

ஸ்வப்னிலுக்கு சமூக நலனில் பங்களிக்கவேண்டும் என்கிற ஆர்வம் மேலோங்கி இருந்தது. இதனால் டெல்லிக்கு மாற்றலானார். சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாரானவாறே பயிற்சி மையம் ஒன்றில் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். மூன்று முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர் 2015ம் ஆண்டு அகில இந்திய அளவில் 84வது ரேங்க் எடுத்தார்.

”ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்கிற என்னுடைய கனவை கைவிடுமாறு குடும்பத்தினரும் நண்பர்களும் அறிவுறுத்தினர். இருப்பினும் நான் மனம் தளர்ந்துவிடவில்லை. கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருக்கும்வரை சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவது சாத்தியமே என்பதைத் தெரிந்துகொண்டேன்,” என்றார் ஸ்வப்னில்.

மாணவர்கள் நலன்

ஸ்வப்னில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை உதவி செயலாளராக இருந்துள்ளார். இந்திய-திபெத்திய எல்லை காவல்படை (ITBP) உதவி கமாண்டன்டாக பணியாற்றியுள்ளார்.

4

ஸ்வப்னில் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் பயிற்சி பெற்றார். அதன்பிறகு மேகாலயாவின் மேற்கு காரோ மலைப்பகுதியின் தாதேங்ரே பகுதியின் சப் டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் ஆனார். தற்போது அதே பகுதியின் மாவட்ட ஆட்சியராக உள்ளார்.


ஸ்வப்னில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதில் பல்வேறு சவால்களை சந்தித்தார்.

”கிழக்கு காரோ மலைப்பகுதியில் பெரும்பாலானோர் பழங்குடியினர். சாலைகள் வாகனம் செல்லும் அளவிற்கு வசதியுடன் இருக்காது. தடையற்ற மொபைல் நெட்வொர்க் இருக்காது. வளர்ச்சியடையாத பகுதியாகவே இருந்தது. இதனால் சில பகுதிகள் முற்றிலும் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தைக் காட்டிலும் எழுத்தறிவு மோசமான நிலையில் காணப்பட்டதே (67 சதவீதம்) மிகப்பெரிய சிக்கலாக இருந்தது. எனவே அதை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட தீர்மானித்தேன்,” என்றார்.
5

ஸ்வப்னில் அந்தப் பகுதியில் உள்ள பள்ளிகளைப் பார்வையிட்டார். அனைத்துப் பள்ளிகளிலும் இரண்டு அல்லது மூன்று வகுப்பறைகள் மட்டுமே இருந்தன. வகுப்பறைகள் மோசமான நிலையில் இருந்தது. சுவர்கள் வண்ணங்களின்றி பொலிவிழந்து காணப்பட்டது. அத்துடன் ஆசிரியர்களும் முறையாக வருவதில்லை. மாணவர்கள் படிப்பை இடைநிறுத்தம் செய்ய இவையெல்லாம் காரணிகள் என்பதை ஸ்வப்னில் உணர்ந்தார்.

”இதற்கு தீர்வுகாண ‘ஸ்டார்’ என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இதில் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் பல்வேறு வேலை வாய்ப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி வளாகங்களில் பதாகைகளும் வரைபடங்களும் வைத்தோம். ஆசிரியர்களுக்கும் பயிற்சியளித்தோம்,” என ஸ்வன்பில் விவரித்தார்.
6

பள்ளியை தத்தெடுக்கும் மற்றுமொரு திட்டத்தையும் ஸ்வப்னில் தொடங்கினார். இதில் பள்ளியை தத்தெடுத்துக்கொண்டு உள்கட்டமைப்பை புதுப்பிப்பது, பாடகுறிப்புகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பது உள்ளிட்டவற்றிற்கு மக்கள் நன்கொடை வழங்க ஊக்குவித்தார். இந்த நோக்கத்திற்காக ஸ்வப்னில் தனது இரண்டு மாத சம்பளத் தொகையை நன்கொடையாக வழங்கினார். விரைவில் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையும் இணைந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சியளிக்க திட்டமிட்டுள்ளார் இந்த ஐஏஎஸ் அதிகாரி.

”இந்த முயற்சிகளின் மூலம் ஏற்கெனவே 60 பள்ளிகள் சீரமைக்கப்பட்டுள்ளது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே. செயல்படுத்தவேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது. மக்களின் முகத்தில் காணப்படும் புன்னகையே எனக்கு மென்மேலும் ஊக்கமளித்து வருகிறது,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி | தமிழில்: ஸ்ரீவித்யா