இட்லி-சாம்பார், பிரியாணி, அல்வா: விண்வெளி செல்லும் வீரர்களுக்கு மெனு ரெடி!
'Mission Gaganyaan' செல்லும் விண்வெளி வீரர்களுக்கு ரெடி டூ ஈட் இந்திய உணவுகள் மெனு ரெடியாக உள்ளது.
ககன்யான் - இந்தியாவின் முதல் மனித விண்வெளித் திட்டம். ’ககன்யான் திட்டம்’ மூலம் 4 இந்தியர்களை 7 நாள்களுக்கு விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது. இந்தத் திட்டத்துக்கான செலவு ரூ.10,000 கோடி என மதிப்பிடப் பட்டுள்ளது. திட்டத்தின் முதற்கட்டமாக இரண்டு ஆளில்லா விண்கலங்கள் செலுத்தப்பட இருக்கின்றன. அதன் வெற்றிக்குப் பின்னர் மூன்றாவதாக 4 விண்வெளி வீரர்களுடன் விண்கலம் செலுத்தப்பட இருக்கிறது.
விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை தயாரித்துள்ளது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் மைசூருவில் இயங்கும் உணவுப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் (டிஎஃப்ஆர்எல்). இந்தியா முழுவதும் உள்ள உணவு வகைகளை உள்ளடக்கிய இரண்டு டஜன் உணவுப் பொருட்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
காலை உணவுக்கு இட்லி அல்லது உப்மா. லன்சுக்கு சிக்கன் பிரியாணி அல்லது வெஜ் புலாவுடன் சைடு டிஷ்ஷாக பருப்பு மற்றும் வெஜிடேபிள் குருமா. இரவு உணவிற்கு சப்பாத்தி வித் சிக்கன் குருமா எப்படியிருக்கும்? உணவுக்கு பின் இனிப்புக்காக அல்வா. மூவேளைகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் பசிக்கும்போது எனெர்ஜி பார். தேவைப்படும் நேரங்களில் காபி, தேநீர் அல்லது பழச்சாறு. இதுவே - ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் வீரர்களது மெனு.
இருப்பினும், விண்வெளியில் உள்ள நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்வதற்காக, பட்டியலில் உள்ள சில உணவுப்பொருள்கள் நிலுவையில் உள்ளன.
“சுவைத்தன்மை மற்றும் பூஜ்ஜிய நுண்ணுயிர் தரநிலைகள் போன்ற காரணிகளைப் பற்றிய சோதனைகளுக்காக நாங்கள் உணவு சாம்பிள்களை இஸ்ரோவுக்கு அனுப்பியுள்ளோம். அவற்றை விண்வெளி பயணத்திற்காக இஸ்ரோவால் தேர்ந்தெடுத்து வைக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஃப் விமானிகள் சுவைப்பர். அவர்களின் சுவைக்கு ஏற்ப உணவின் சுவை மாற்றியமைக்கப்படும். உணவுகளில் லேசாக மசாலாவே சேர்த்துள்ளோம். இருப்பினும், அதிகம் காரம் விரும்புபவர்களுக்காக கூடுதல் மசாலா பாக்கெட்டுகளும் தயாரித்துள்ளோம்,” என்று டி.எஃப்.ஆர்.எல் இயக்குனர் அனில் செம்வால் கூறினார்.
உணவுகள் அனைத்தும் ரெடி டூ ஈட் என வகையானவை. பூமியை பார்வையிட்டுக் கொண்டே, லக்சரியான உணவை சுடச்சுட வீரர்கள் சாப்பிட வேண்டும் என்பதற்காக பிரத்யேக ஃபுட் ஹிட்டர்களையும் வடிவமைத்துள்ளனர்.
“உணவுகளைத் தவிர, உணவு ஹீட்டர்கள், தண்ணீர் போன்ற திரவ உணவுகளுக்கான பிரத்யேக கொள்கலன், கழிவுகளை அகற்றும் பைகளை உருவாக்கும் பணியிலும் ஈடுப்பட்டுள்ளோம். டி.எஃப்.ஆர்.எல் உருவாக்கிய உணவுகளில் சப்பாத்திகள், சிக்கன் பிரியாணி, அல்வா, சிக்கன் கறி, பாதாம், கீரை மற்றும் பன்னீர் ஆகியவை அடங்கும்,” என்றார் செம்வால்.
இதை உறுதிசெய்த இஸ்ரோ தலைவர் சிவன் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் கூறியதாவது,
“ககன்யான் விண்வெளி வீரரர்கள் விண்வெளிக்கு செல்கையில் இந்திய உணவுகளையே பயன்படுத்துவர். இதற்காக நாங்கள் ரஷ்யாவை சார்ந்திருக்கவில்லை. பல சதாப்தங்களாக ஆயுதப்படைக்கான ரெடி டூ ஈட் உணவினை தயாரிக்கும் பணியில் டிஎப்ஆர்எல் ஈடுப்பட்டுவருகிறது. நாங்கள் இப்போது உணவுகளை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்,” என்றார்.
தகவல் மற்றும் பட உதவி : தி வீக்