வயசு 19 தான்; ஆனா ஆட்டம் வெறித்தனம்: டென்னிஸ் உலகின் முடிசூட காத்திருக்கும் இகா!
டென்னிஸ் உலகில் தனக்கான தனி முத்திரையை பதித்து வரும் 19- வயது பெண் இகா ஷிவான்டேக்கின் கதை!
19 வயது தான் அந்த பெண்ணுக்கு. ஆனால், வெறித்தனமான ஆட்டம்.
டென்னிஸ் உலகில் தனக்கான தனி முத்திரையை பதித்து வருபவர் தான் இகா ஷ்வியாடெக். மிரட்டலான ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார் இகா. அண்மையில் நடந்து முடிந்த பிரெஞ்ச் ஓபன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்று ஆச்சரியப்படுத்தியுள்ளார் இகா. போலாந்து நாட்டைச்சேர்ந்த இகா தான் இன்றை டென்னிஸ் உலகின் நாயகி.
டென்னிஸ் விளையாட்டில் ஒவ்வொரு பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பதின்ம வயதில் சிறந்த வீராங்கனை உருவாவது வாடிக்கை. 2020-ம் ஆண்டு முடியும் தருவாயில் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார் இகா. பிரெஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பங்கேற்ற முதல்முறையே பட்டம் வென்றிருக்கும் இகாவின் சாதனை மலைக்க வைக்கிறது.
2020 பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால் பட்டம் வென்றார். இந்தத் தொடரில் முதல் போட்டி தொடங்கி இறுதிப் போட்டிவரை ஒரு போட்டியில்கூட செட்டை இழக்காமல் ரஃபேல் நடால் வெற்றி வாகைசூடினார்.
அதேபோலத்தான் இகாவும். மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் போட்டி தொடங்கி இறுதிப் போட்டிவரை ஒரு செட்டைக்கூட இழக்காமல் பட்டத்தைத் தட்டிச் சென்றிருக்கிறார் இகா ஷ்வியாடெக். ரஃபேல் நடாலின் பிரதியாக பார்க்கப்படுகிறார்.
சொல்லப்போனால் ரஃபேல் நாடாலைவிடவும் திறமையானவர் என்றும் பாராட்டப்படுகிறார் இகா. காரணம், ரஃபேல் நடாலாவது 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர், அனுபவசாலி.
ஆனால், இகா ஷ்வியாடெக் அப்படியில்லையே. அவர் ஒரு கத்துக்குட்டி. பெரிய அளவில் அனுபவமில்லாத நிலையில், முதல் பிரெஞ்சு ஓபன் போட்டித் தொடரிலேயே இந்தச் சாதனையைப் படைத்திருப்பது அரிதானது.
அதுவும் தரவரிசையில் 54-வது இடத்தில் இருந்த இகா, 4-வது இடத்திலிருந்த அமெரிக்காவின் சோஃபியா கெனினை நேர் செட்டுகளில் வீழ்த்தி, டென்னிஸ் உலகை திரும்ப பார்க்க வைத்தார்.
கடந்த ஆண்டு விம்பிள்டன் ஜூனியர் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்றவர் இகா. அதுமட்டுமில்லாமல் இளையோர் ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றவர். எனவே, சீனியர் டென்னிஸில் இகா காலடி எடுத்து வைக்கும்போது சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நினைத்ததுபோலவே நடத்திக் காட்டியிருக்கிறார்.
டென்னிஸில் தொழில்முறை போட்டியாளர்களாக இருப்பவர்களுக்கு ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியிலாவது வெல்ல வேண்டும் என்பது கனவாக இருக்கும். இந்தப் பதின்பருவத்து வீராங்கனையோ அமெரிக்க ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் என 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வெல்லும் பெருங்கனவுடன் இருக்கிறார்.
பெருங்கனவுகளுடனும், கடின உழைப்புடனும் வலம் வரும் இகா ஷ்வியாடெக் எதிர்காலத்தில் டென்னிஸ் உலகின் முக்கிய இடத்தை பிடிப்பார் என்பதில் சந்தேகமில்லை!