11 ஆண்டுகள் நிறைவு செய்து நிறுவன நாள் கொண்டாடிய ‘ஐஐஎம் திருச்சி’

திருச்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இந்திய மேலாண்மை கழகத்தின் (ஐஐஎம்) பதினோறாவது நிறுவன நாள் கொண்டாடப்பட்டது.
0 CLAPS
0

திருச்சியில் கடந்த 11 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இந்திய மேலாண்மை கழகத்தின் (ஐஐஎம்) 11-வது ’நிறுவன நாள்’ கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ஐஐஎம் திருச்சிராப்பள்ளி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நேரடியாகக் கலந்துகொண்டனர். நிர்வாகக் குழுவினரும் முன்னாள் மாணவர்களும் மெய்நிகர் வடிவில் பங்கேற்றனர்.

இந்நிறுவனம் 2011-ம் ஆண்டு முதல் இதுவரை எட்டியுள்ள மைல்கற்கள் மற்றும் சாதனைகள் ஒரு வீடியோ வாயிலாக சுட்டிக்காட்டப்பட்டது.

இதில் வரவேற்புரையாற்றிய ஐஐஎம் திருச்சி இயக்குநர் டாக்டர் பவன் குமார் சிங், இந்நிறுவனத்தை இந்த நிலைக்கு வளர்ச்சியடையச் செய்ய முன்னாள் இயக்குநர்கள் மற்றும் தலைவர்களுக்கு நன்றி பாராட்டினார்.

ஐஐஎம் திருச்சி நிர்வாகக் குழுவின் தலைவர் ஸ்ரீ ஜலஜ் தனி நிகழ்ச்சியில் உரையாற்றினார். நிறுவனர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனை தற்போது அனைவரும் அனுபவித்து வருவதாகத் தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்று சமயத்தில் நிறுவனத்தை பராமரித்த ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். அதேபோல், பெருந்தொற்று சூழலில் மாணவர்களுக்கு ஆதரவளித்த கார்ப்பரேட் மற்றும் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்தார். முன்னாள் மாணவர்கள் கல்வி நிறுவனத்தின் மேம்பாட்டில் பங்களிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

PGPM 2020-2022 மாணவர்களான திவ்யான்ஷ் குப்தா, என்.கார்த்திக், பி.ரிஷிகேஷ் மேனன், யு.பிரவீன், பி.அன் மேரி மைக்கேல், சஷ்வத் ஜெயின் ஆகியோரின் பிராஜெக்டிற்கு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்திய Make a Difference (MAD) பிராஜெக்ட் விருது வழங்கப்பட்டது.

ஐஐஎம் திருச்சியில் பத்தாண்டு காலம் பணியை நிறைவுசெய்த பேராசிரியர்களும் ஊழியர்களும் பாராட்டப்பட்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட என்எல்சி இந்தியா, மனிதவளத் துறையின் நிர்வாக இயக்குநர் சதீஷ் பாபு திறமையான தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உரையாற்றினார். மேலாளர்கள் பொதுவாக தரவுகள், உள்ளுணர்வு, பகுத்தறியும் திறன் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்கள் எடுப்பார்கள். ஆனால், திறமையான ஒரு தலைவர் நேர்மை, அறநெறி, கடும் உழைப்பு, அனுதாபம் ஆகியவற்றால் நிறைந்த பணிக் கலாச்சாரத்தை உருவாக்குவார் என்று குறிப்பிட்டார்.

நம்பகத்தன்மையை உருவாக்கி, நல்ல உறவுமுறையை ஏற்படுத்த ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டியது ஒரு தலைவரின் பொறுப்பு. ஒரு தலைவரின் திறமையே நிறுவனத்தின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.