விதைத்தவர்கள்

பார்வையில்லாதோர் படிக்கும் புத்தக வரைபடங்களை புரிந்துகொள்ள உதவும் தொழில்நுட்பம்!

YS TEAM TAMIL
11th Feb 2019
19+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

விளக்கப்படம் இல்லாத உயிரியல் வகுப்பை உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடியுமா? அல்லது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) ஆகிய பாடங்களை வரைபடங்கள் இல்லாமல் கற்றுக்கொள்ள முடியுமா? இந்தப் பாடங்களில் இருக்கும் கருத்துக்களையும் செயல்முறைகளையும் புரிந்துகொள்வதில் இருக்கும் சவால்கள் காரணமாக பார்க்கும் திறனற்ற மாணவர்கள் இத்தகைய பாடங்களைக் கற்பதைப் புறக்கணித்துவிடுகின்றனர்.

இந்தியாவில் பார்வை குறைபாடுள்ளவர்களுக்கென வடிவமைக்கப்பட்ட புத்தகத்தில் எழுத்துக்கள் மட்டுமே பிரெயில் வடிவில் இருக்கும். வரைபடங்கள் நீக்கப்பட்டிருக்கும். இதனால் பார்வையற்றோர் கோட்பாடுகள் சார்ந்த பாடங்களை மட்டுமே படிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.

”இதனால் அவர்களுக்கு இன்றைய நவீன யுகத்திற்கேற்ற பணி வாய்ப்புகள் கிடைக்காமல் போகிறது,” என்றார் ஐஐடி டெல்லி பிஎச்டி மாணவரான பியூஷ் சன்னனா.

அத்தகைய மாணவர்கள் அறிவியல் மற்றும் தொடர்புடைய பாடங்களைப் படிக்க உதவவேண்டும் என்பதற்காக 36 வயதான பியூஷ் மற்றும் அவரது குழுவினர் ’ரெய்ஸ்ட் லைன்ஸ் ஃபவுண்டேஷன்’ (RLF) என்கிற சமூக நல நிறுவனத்தை 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் ஐஐடி டெல்லியில் அமைத்தனர்.

பார்வையில்லாதோர் தொட்டுணர்ந்து புரிந்துகொள்ளும் வகையிலான விளக்கப்படங்களை உருவாக்க RLF ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு 3-டி அச்சு பயன்படுத்தப்பட்டுள்ளது.

பார்வையில்லாதோர் வரைபடத் தகவல்களை தொடு உணர்வைக் கொண்டு புரிந்துகொள்ளும் வகையில் விளக்கப்படங்கள் அமைந்திருக்கும். அச்சுக்களை உருவாக்குவதற்கும் தொடு உணர்வு வரைபடங்களை உருவாக்கத் தேவையான வெப்பமூட்டலுக்கும் இந்தத் தொழில்நுட்பம் உதவும்.

பார்வையில்லாதோருக்காக தொட்டுணரும் வகையிலான வரைபடங்கள் கான்செப்ட் வெளிநாடுகளில் பிரபலம். இத்தகைய தொட்டுணரும் வகையிலான வரைபடங்களை இந்தியக் கல்வி முறையில் சேர்த்து பாடப்புத்தகங்களில் இணைக்கும் பணியில் RLF ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் பார்வையற்ற மாணவர்கள் கல்வி கற்பதில் இருக்கும் எல்லைகள் விரிவடையும்.

ஐஐடி டெல்லியில் துவக்கம்

RLF ஐஐடி டெல்லியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆராய்ச்சி ஊழியர்கள், மாணவர்கள் அடங்கிய குழுவான அசிஸ்டெக் (Assistech Labs) லேப்ஸின் பிரிவாகும். இக்குழு பார்வையில்லாதோருக்கு எளிய தீர்வுகளை வழங்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இவர்கள் 2013-ம் ஆண்டில் பார்வையற்றோர் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் நடக்க உதவும் ஸ்மார்ட்கேன் உருவாக்கினர்.

ஸ்மார்ட்கேன் பயன்படுத்துவதற்கான தேவை இருப்போரிடம் அதைப் பயன்படுத்தும் முறையை எடுத்துரைப்பது சவால் நிறைந்ததாக இருந்துள்ளது.

வரைபடம் இருந்தால் அவர்களால் எளிதாக புரிந்துகொள்ளமுடியும் என குழுவினர் கருதினர். ஆனால் அவர்களால் வரைபடத்தைப் பார்க்கமுடியாது. அது தொட்டுணரக்கூடிய விதத்தில் இருக்கவேண்டும். இவர்கள் உருவாக்கிய முதல் தொட்டுணரும் வரைபடம் பயறு வகையைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

ஸ்மார்ட்கேன் கையேட்டில் வரைபடத்தை இணைப்பது அடுத்தகட்ட நடவடிக்கையாக இருந்தது. ஆனால் வரைபடம் கைகளால் உருவாக்கப்பட்டிருந்ததால் அதிகளவில் உருவாக்குவது சவாலாக இருந்தது. எனவே ஆராய்ச்சி தொடர்ந்தது. அப்போதுதான் பார்வையற்றோருக்கு காட்சிப்படுத்துவதில் இருக்கும் சிரமத்தைப் புரிந்துகொண்டனர்.

”பார்வையற்ற மாணவர்கள் பள்ளிப் படிப்பு முடித்த பிறகு அறிவியல் மற்றும் கணிதப்பாடங்களைப் படிப்பதை நிறுத்திவிடுவதை உணர்ந்தோம். ஏனெனில் பிரெயில் புத்தகங்கள் வரைபடங்கள் இன்றியே கிடைக்கிறது. அனைத்தையும் விளக்கமாக எடுத்துரைக்கும் பணி ஆசிரியரைச் சார்ந்ததாகவே உள்ளது,” என்று பியூஷ் விவரித்தார்.

அதிகப்படியான திறன்களை இழப்பதால் ஏற்படும் பாதிப்பு அதிகம். உலகம் முழுவதும் சுமார் 285 மில்லியன் பேருக்கு பார்வை குறைபாடு உள்ளது. இதில் சுமார் 39 மில்லியன் பேர் பார்வையற்றோர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவில் பார்வை குறைபாடு இருப்பவர்கள் ஐந்து மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதாகவும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகம் எனவும் 2011-ம் ஆண்டின் அரசாங்க கணக்கெடுப்புத் தரவுகள் சுட்டிக்காட்டுகிறது.

இந்த மக்கள்தொகையில் ஐந்து முதல் 19 வயது வரையிலும் உள்ள குழந்தைகள் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிக்கின்றனர்,” என்றார் பியூஷ். அதாவது தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

தொட்டுணரும் வகையிலான வரைபடங்கள் எவ்வாறு உதவும்?

ஆரம்பத்தில் இருந்தே வரைபடங்கள் மற்றும் வரைகலை படிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

“எழுத்துக்கள் அது தொடர்புடைய ஒலியின் படங்களைக் கொண்ட புத்தகங்கள் வாயிலாகவே கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதேபோல் எண்களும் வெவ்வேறு பொருட்களின் படங்களைக் கொண்டே கற்றுக்கொடுக்கப்படுகிறது,” என்றார் பியூஷ்.

பள்ளிப்படிப்பில் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்கையில் வரைபடம் முக்கியமாகிறது. ”வேதியியல் அமைப்புகள் மற்றும் சமன்பாடுகள், கணித வரைபடங்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பகுதிகள் குறித்த விளக்கப்படங்கள், அமைப்புகள், இயற்பியல் கருத்துக்கள், புவியியல் வரைபடங்கள் போன்றவை எப்போதும் பார்வை திறன் கொண்ட குழந்தைகளுக்கு வரைபடங்கள் வாயிலாகவே கற்றுக்கொடுக்கப்படுகிறது,” என்றார்.

”இந்த காரணத்தினாலேயே RLF ஐஐடி டெல்லியில் இன்குபேட் செய்யப்பட்டது. தொட்டுணரும் வகையிலான வரைபடங்களுடன் எளிதாக படிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட பாடப்புத்தகங்களை பார்வை குறைபாடுள்ள ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கவேண்டும். இதனால் கட்டாயத்தினால் பாடங்களைத் தேர்வு செய்யாமல் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். இதுவே எங்களது நோக்கம்.”

இதுவே பெரியளவில் செயல்பட்டு சிக்கலுக்கு தீர்வுகாணவேண்டும் என்கிற உந்துதலையும் ஐஐடி டெல்லியில் உள்ள குழுவிற்கு அளித்தது. எளிதான, அதிகம் பேர் பயன்படுத்தக்கூடிய, தானியங்கி தீர்வுகளை உருவாக்குவதற்காக இக்குழுவினர் பார்வையற்றோர், பார்வையற்றோருக்கான நிறுவனங்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களுடன் இணைந்திருந்து பணியாற்றினர்.

வெவ்வேறு ஷீட்கள் மற்றும் டூல்களைக் கொண்ட பல்வேறு வெர்ஷன்கள் குழுவிடம் இருந்தது. ஆனால் பார்வை குறைபாடுள்ளவர்களின் தனித்தேவைக்கு ஏற்றவாறான வரைபடங்களை அச்சிடக்கூடிய 3டி பிரிண்டர்களே சிறந்த பலனளித்தது என்றார் பியூஷ்.

”இந்தப் பிரிவில் செயல்படும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது சிறியளவிலான க்ளையண்டுகளின் தனித்தேவைக்கேற்றவாறான தொட்டுணரும் வகை வரைபடங்களை உருவாக்க சிறப்பு கல்வியாளர்களின் சேவையைப் பயன்படுத்திக்கொள்கின்றன. இது பெரியளவில் சாத்தியமில்லை என்பதுடன் தரமான தயாரிப்பிற்கும் ஏற்றதாக இருக்காது. மற்றொரு புறம் தொட்டுணரும் வகையிலான வரைபடங்களை தொழில்முறையாக வடிவமைப்பவர்களை, வெளியீட்டாளர்களோ பிரெயில் பிரெஸ் போன்ற ஏஜென்சிக்களோ அணுக முடியாது,” என்றார் பியூஷ்.

RLF அறிமுகப்படுத்திய ஆறு மாதங்களிலேயே 12 உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழு இந்த தீர்வை பெரியளவில் சாத்தியப்படுத்தி தொட்டுணரும் அம்சம் கொண்ட 2,000 புத்தகங்களைத் தயாரித்தது. இந்நிறுவனத்திற்குள்ளாகவே மாதத்திற்கு சுமார் 500 புத்தகங்களைத் தயாரிக்க முடியும்.

ஆறாம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரையிலான கணிதம், அறிவியல், புவியியல் மற்றும் பொருளாதார புத்தகங்களின் 1,000 தனிப்பட்ட வரைபடங்களை 70,000-க்கும் அதிகமான தொட்டுணரும் வகையிலான வரைபட பிரதிகளாக இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. RFL மாதவிடாய் சுகாதார மேலாண்மை தொடர்பான கையேடுகளை உருவாக்கி அந்தப் புத்தகத்தில் வரைபடங்களையும் சேர்த்துள்ளது. அத்துடன் யோகாசன பயிற்சிக்கான யோகிகஸ்பார்ஷ் கையேட்டில் யோகாசன நிலைகளுக்கான படங்களையும் உருவாக்கியுள்ளது.

இந்நிறுவனம் நேரடி ஆர்டர்கள் தவிர அதன் வலைதளம் வாயிலாக கலைக்கூடங்களில் இருந்து சைட்மேப், பயிற்சி கையேடுகள் போன்ற தனிப்பட்ட ஆர்டர்களையும் பெறத் துவங்கியது.

”தற்போது சந்தையில் செயல்படுதல், வணிக வளர்ச்சி, பன்முகத்தன்மை போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தி வருகிறோம்,” என்றார் பியூஷ்.

கம்ப்யூட்டர், ஸ்மார்ட்ஃபோன்கள், இசைக்கருவிகள், கட்டட லேஅவுட் போன்றவற்றிற்கான பயிற்சி கையேடுகளிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

முதலீடு

2015-ம் ஆண்டு Centre of Excellence in Tactile Graphics (CoETG) என்கிற பெயரில் மேற்கொள்ளப்பட்ட திட்டம் பின்னர் Raised Lines Foundation என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முதலில் CoETG மூன்றாண்டுகளுக்கு இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தால் ஆதரிக்கப்பட்டது. இதன் மூலம் தொட்டுணரும் வகையிலான வரைபடங்களை வடிவமைப்பது குறித்தும் உருவாக்குவது குறித்தும் முழுமையாக தெரிந்துகொண்டது. மேலும் இரண்டாண்டுகளுக்கு இந்த அமைச்சகம் தனது ஆதரவை நீட்டித்துக்கொண்டது.

”தற்சமயம் ஐஐடி டெல்லியில் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேஷன் யூனிட் வழியாக Raised Lines Foundation-ஆக இன்குபேட் செய்யப்பட்டுள்ளோம். எங்களது செயல்பாடுகள் ஐஐடி சோனிபட் வளாகத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது,” என பியூஷ் தெரிவித்தார்.

ஐஐடி டெல்லி பேராசிரியர்களான எம் பாலகிருஷ்ணன் மற்றும் பிவிஎம் ராவ் RLF-ல் பங்களிக்கின்றனர்.

நிதி திரட்டல் ஒரு சமூக முயற்சியாக மேற்கொள்ளப்படுகிறது. NCERT, மாநில கல்வி வாரியங்கள், சர்வ சிக்‌ஷா அபியான் (MHRD), WSSCC மற்றும் பார்வையற்றோருக்காக பணியாற்றும் பிற நிறுவனங்கள் போன்றவை RLF-க்கு ஆதர்வளித்துள்ளது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே. பாடபுத்தகங்களுக்கான தேவை அதிகம் இருப்பதால் RFL மிக விரைவாக வளர்ச்சியடைய வேண்டிய அவசியம் உள்ளது.

லாபநோக்கமற்ற முறையில் செயல்படுவதால் இந்தப் புத்தகங்களை உருவாக்கி அதிகம் பேரை சென்றைடையச் செய்ய பொது நிதி மற்றும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதி ஆகிய இரண்டையும் எதிர்நோக்குகிறோம்,” என்றார் பியூஷ்.

வருங்கால திட்டம்

அடுத்த மூன்றாடுகளில் RFL பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் உட்பட பார்வையற்றோருக்காக பணியாற்றும் 200-க்கும் அதிகமான நிறுவனங்களைச் சென்றடைந்து நாடு முழுவதும் தொட்டுணரும் வகையில் வடிவமைக்கப்பட்ட 25,000 புத்தகங்களை விநியோப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. அத்துடன் பல்வேறு மொழிகளில் உள்ள பாடபுத்தகங்கள், பயிற்சி மாட்யூல்கள், பிற புத்தகங்கள் என 50-க்கும் அதிகமான புத்தகங்களை வடிவமைப்பதுடன் வெளிநாடுகளில் இருக்கும் க்ளையண்டுகளுக்கும் புத்தகங்களை விநியோகிக்க விரும்புகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : ராஷி வர்ஷினி | தமிழில் : ஸ்ரீவித்யா

19+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags