கோவிட் நிவாரணம்: $2 மில்லியன் நிதி வழங்கிய ஐ.ஐ.டி மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள்!

ஐ.ஐ.டி மெட்ராஸ், இந்த நன்கொடையின் உதவியுடன் வாங்கிய 200 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை (தலா 10 லிட்டர் கொள்ளளவு) கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷனிடம் ஒப்படைக்கிறது.
1 CLAP
0

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் மெட்ராஸ் ஐ ஐ டி-யின் முன்னாள் மாணவர்கள் ஒரு அமைப்பாக ஒன்றிணைந்து, இந்தியாவில் கோவிட்-19 நிவாரண முயற்சிகளுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் நன்கொடை அளித்துள்ளனர். அதிக தாக்கத்தை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு கட்டமாக இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஐ ஐ டி மெட்ராஸ் முடிவு செய்துள்ளது.

ஐ.ஐ.டி மெட்ராஸ்-ன் அலும்னி அண்ட் கார்பொரேட் ரிலேஷன்ஸ் (ஏசிஆர்) என்னும் அமைப்பு மற்றும் வட அமெரிக்காவின் ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இந்த நிதியைத் திரட்டியுள்ளன.

ஐ.ஐ.டி-எம் முன்னாள் மாணவர் தொண்டு அறக்கட்டளை, உள்ளூர் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு ஒருங்கிணைந்து செயல்படுவதில் முக்கியப் பங்கு வகித்தது.

ஐ.ஐ.டி மெட்ராஸ் முன்னாள் மாணவர்களின் இந்த முயற்சிகளைப் பற்றி வென்ச்சர் கேபிடல் நிறுவனமான ராக்கெட்ஷிப் வி.சி-யின் பங்குதாரரும் ஐ.ஐ.டி மெட்ராஸ் முன்னாள் மாணவருமான ஆனந்த் ராஜாராமன் கூறுகையில்,

“இந்த இக்கட்டான நேரத்தில், நம் நாட்டிற்காக ஒன்றிணைந்து உதவுவது புலம்பெயர்ந்தோரின் கடமையாகும்.  சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞனாக, ஐ.ஐ.டி மெட்ராஸ் முன்னாள் மாணவர் வலையமைப்பு, சென்னை மற்றும் தமிழ்நாடு முழுமைக்கும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களை வழங்கி, ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற நிதி திரட்டியதற்காக நான் நன்றியும் பெருமிதமும் கொள்கிறேன்,” என்றார்.

இந்த பங்களிப்புகளின் உதவியுடன் வாங்கிய 200 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை (தலா 10 லிட்டர் கொள்ளளவு) ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி, 2021 ஜூன் 3 ஆம் தேதி சென்னை கார்ப்பரேஷன் ஆணையர் ககந்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ். இடம் வழங்கினார்.

மேலும், ஐ.ஐ.டி மெட்ராஸின் பதிவாளர் டாக்டர் ஜேன் பிரசாத் 74 Bipap யூனிட்களை சமீபத்தில் சென்னை கார்ப்பரேஷன் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். ஐ.ஐ.டி மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள் தெலுங்கானா அரசுக்கு 200 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை (தலா 5 லிட்டர்) நன்கொடையாக அளித்துள்ளனர்.

ஐ.ஐ.டி. மெட்ராஸ் அறக்கட்டளை-அமெரிக்காவின் தலைவர் கமல் துக்கிராலா,

“ஐ.ஐ.டி மெட்ராஸைச் சேர்ந்த சக முன்னாள் மாணவர்களுடன் இந்த இயக்கத்திற்குப்  பங்களிப்பது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. சவாலான காலகட்டத்தில் எங்களால் உதவ முடிந்தது மகிழ்ச்சியளிக்கிறது," என்கிறார்.

சென்னை ஐ.ஐ.டி மெட்ராஸ் முன்னாள் மாணவர் தொண்டு அறக்கட்டளையின் செயலாளர் என்.அலமேலு கூறுகையில்,

“இந்த நன்கொடை மூலம் ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்களான நாங்கள் உடலால் பிரிந்திருந்தாலும் எண்ணத்தால் இணைந்திருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றார்.

மேலும், ஐ.ஐ.டி மெட்ராஸ் முன்னாள் மாணவர் (பி.டெக், ‘93 குழு) ரேகா ரங்கநாதன்,

“சென்னை தான் எங்கள் வீடு. கோவிட் பாதிப்புகள் குறித்து அறிந்து உதவ எண்ணினேன். என்னால் இயன்ற வகையில் பங்களித்திருக்கிறேன்,” என்கிறார்.

இவைதவிர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மருத்துவத் தேவைகளுக்காக ஐ.ஐ.டி மெட்ராஸ் ஒரு கோவிட் நிவாரண நிதியை உருவாக்கியுள்ளது. கடந்த நிதியாண்டிலும் இதற்காக ஐஐடி மெட்ராஸ் 96 லட்சம் ரூபாய் நிதி திரட்டியது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world