இந்தியாவில் முதல் ‘IKEA வணிக வளாகம்’ - குர்கானில் அமைக்கும் INGKA நிறுவனம்!

ரூ.3,500 கோடி செலவில் முதல் IKEA ஷாப்பிங் சென்டர்!
0 CLAPS
0

உலக அளவில் சில்லறை விற்பனையில் பிரபலமான நிறுவனமான 'இங்கா' (INGKA) ஹோல்டிங் நிறுவனம் இந்தியாவில் முதல் IKEA வணிக வளாகத்தை (ஷாப்பிங் சென்டர்) தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஹரியானா மாநிலம் குர்கான் நகரில் IKEA-வின் ஷாப்பிங் சென்டர் அமையும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அந்நிறுவனம், வெறும் ஷாப்பிங் என்பதை விட, இந்த மையம் மக்களின் தேவையை பிரதிபலிக்கும் வகையில், அடுத்த தலைமுறைக்கான மையமாகவும் இந்த சென்டர் அமையும். ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் சில்லறை விற்பனைக்கான கலகலப்பான இடமாகவும் இந்த வணிக மையம் செயல்படும்.

”இந்த திட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட முதலீடு சுமார் 400 மில்லியன் யூரோக்கள் (ரூ.3,500 கோடி). 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கட்டுமானம் தொடங்கும். மேலும், இந்தத் திட்டம் மூலம் 2,500 க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை வணிகத்தின் மேலும் வளர்ச்சிக்கு IKEA பங்களிக்கும்," என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, முதலில் நொய்டாவில் வணிக வளாகம் அமைக்க IKEA திட்டமிட்டிருந்தது. இதற்காக நிலங்களையும் வாங்கி இருந்தது. ஆனால், இப்போது முதலில் குர்கானிலும் அதற்கடுத்ததாக நொய்டாவிலும் வணிக மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது INGKA. IKEA இந்திய சி.இ.ஓ பீட்டர் பெட்சல் இது தொடர்பாக பேசும்போது,

“குர்கானில் உள்ள எங்கள் IKEA ஸ்டோரை இங்கா மையங்களுடன் அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். IKEA க்கு இந்தியா ஒரு உற்சாகமான நாடு, மேலும் எங்களின் அணுகுமுறை மூலம் மக்களைச் சென்றடைவதற்கான நீண்ட கால அர்ப்பணிப்பு எங்களிடம் உள்ளது. நிச்சயம் எங்களது தயாரிப்பு மூலம் வாடிக்கையாளர்களை ஈர்ப்போம்," என்று தெரிவித்துள்ளார்.

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறுகையில், ”IKEA மற்றும் INGKA மையங்களை ஹரியானாவுக்கு வரவேற்கிறோம். ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை வர்த்தகத்தை உருவாக்குவதற்கும் மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் உள்ள நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் IKEA மற்றும் INGKA மையங்களுடனான இந்த கூட்டணியை நாங்கள் எதிர்நோக்குகிறோம். மாநிலத்திற்குள் சுமூகமான முதலீட்டு ஓட்டத்தை எளிதாக்குவதற்கு சிறந்த ஆதரவை வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. இந்த திட்டம் குர்கானை புதிய ஷாப்பிங் இடமாக நிறுவுவது மட்டுமல்லாமல், இப்பகுதியில் வேலைவாய்ப்பையும் வழங்கும்," என்று பேசியுள்ளார்.

தகவல் உதவி: இந்தியன் எக்ஸ்பிரஸ் | தொகுப்பு: மலையரசு

Latest

Updates from around the world