இளையராஜா + மணிரத்னம்: அந்தப் பிரிவும், 80ஸ், 90ஸ் கிட்ஸ் ஏக்கமும்!
ஐந்து தலைமுறையாக இளையராஜாவும், நான்கு தலைமுறையாக மணிரத்னமும் தமிழ் சினிமாவின் மகத்தான ஆளுமைகளாக வலம் வரும் வேளையில், 80களில் இவர்களது கூட்டணி படைத்தவை காலத்தால் அழியாத ஆக்கங்கள்.
தமிழ் சினிமாவுக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் இசையமைப்பாளர் இளையராஜா தனது இசை மூலம் கொடுத்தவையும், அதன் தாக்கமும் எளிதில் விவரிக்க முடியாதது.
“100 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் இப்போதுள்ள ஆளுமைகளைக் குறைத்துக் குறைத்து மிகவும் முக்கியமான அல்லது அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஓர் ஆளுமையைக் கொண்டு வந்தால், அந்தக் கடைசி மனிதராக இளையராஜாவே இருப்பார்.”
- சமீபத்தில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா சொன்ன இந்த ஸ்டேட்மென்ட்டை தமிழ் சினிமாவையும் தமிழ்ச் சமூகத்தையும் நன்கறிந்த எவராலும் மறுக்க முடியாது. அந்த அளவுக்கு இளையராஜாவின் அரை நூற்றாண்டுப் பங்களிப்பு அசாத்தியமானது.
இதேபோல், திரைப் படைப்பாக்கத்தில் தமிழ் சினிமாவின் பெருமிதங்களில் ஒருவர்தான் இயக்குநர் மணிரத்னம். ‘பான் இந்தியா’ என்ற பதம் எல்லாம் பரிச்சயமே இல்லாத காலத்தில் தேசம் முழுவதும் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் பெரும் கவனத்தை ஈர்த்த படைப்புகளைத் தந்தவர். இந்தியத் திரைத் துறையில் ஆதிக்கம் செலுத்திய பாலிவுட்டை தென்னகத்தைப் பார்த்து அடக்கி வாசிக்க வைத்தவர்.
2010-ல் ‘டைம்’ இதழ் உலக அளவிலான ‘ஆகச் சிறந்த 100 திரைப்படங்கள்’ பட்டியலை வெளியிட்டது. அதில் இடம்பெற்ற இந்தியப் படைப்புகள்: சத்யஜித் ரேயின் ‘அபு ட்ரையாலஜி’, குரு தத்தின் ‘பியாசா’ மற்றும் ‘மணிரத்னத்தின் ‘நாயகன்’.
- இதுவே, தமிழுக்குப் பெருமிதம் சேர்க்கும் இந்தியத் திரைப் படைப்பாளிகளில் மணிரத்னம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை பறைசாற்றும்.
இசையும் காட்சி மொழியும்
ஐந்து தலைமுறையாக இளையராஜாவும், நான்கு தலைமுறையாக மணிரத்னமும் தமிழ் சினிமாவின் மகத்தான ஆளுமைகளாக வலம் வரும் வேளையில், 80-களில் இவர்களது கூட்டணி படைத்தவை காலத்தால் அழியாத ஆக்கங்கள்.
அவை: கன்னடத்தில் பல்லவி அனு பல்லவி (1983) , மலையாளத்தில் உணரூ (1984), தமிழில் பகல் நிலவு (1985), இதய கோயில் (1985), மெளன ராகம் (1986), நாயகன் (1987), அக்னி நட்சத்திரம் (1988), இதயத்தை திருடாதே (1989), அஞ்சலி (1989) மற்றும் தளபதி (1991).
இந்தப் படங்களில் இடம்பெற்ற எந்தத் தலைமுறையிலும் திகட்டாத பாடல்களையும், அவற்றின் காட்சி மொழியையும் பட்டியலிட்டால் ‘நகுவா நயனா’, ‘தீரம் தேடி ஓலம் பாடி’, ‘பூமாலையே தோள் சேரவா...’, ‘நான் பாடும் மெளன ராகம்’, ‘இதயம் ஒரு கோயில்’, ‘சின்ன சின்ன வண்ணக் குயில்’, ‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘நிலாவே வா’, ‘தென் பாண்டி சீமையிலே’, ‘ஓ பாபா லாலி’, ‘ஓ ப்ரியா ப்ரியா’, ‘ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா’, ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’, ‘சின்னத் தாயவள்’ ‘ராக்கம்மா கையத்தட்டு’ என நீளும்.
தமிழ் சினிமாவில் எல்லா தரப்பு ரசிகர்களுமே பின்னணி இசையை உள்வாங்கி சிலிர்ப்பின்பம் பெறத்தக்க ரசனையைக் கூட்டியதும் இளையராஜா - மணிரத்னம் கூட்டணிதான் என்றால் அது மிகையல்ல. மெளன ராகம், நாயகன், இதயத்தை திருடாதே, தளபதி முதலான படைப்புகளின் பிஜிஎம் டிராக்குகளை இன்று நீங்கள் கேட்டாலும் இதை உணரலாம்.
பிரிவு நிகழ்ந்தது ஏன்?
அப்போது, மும்பையில் ‘தளபதி’ படத்துக்கான மியூஸிக் ரெக்கார்டிங் நடந்துகொண்டிருந்தது. இளையராஜா அமைத்த இசையில் சிற்சில சில திருத்தங்களைச் சொல்லியிருக்கிறார் மணிரத்னம். ஆனால், இளையராஜாவோ அதை ஏற்க மறுத்துவிட்டார். உடனே சென்னைக்குத் திரும்பிவிட்டார் மணிரத்னம். இந்நிகழ்வில் இருவருக்குமே மனக் காயம்தான்.
மணிரத்னம் சொன்ன திருத்தங்கள் இல்லாமலேயே ‘தளபதி’ படத்தின் இசை மிகச் சிறப்பாக வந்தது. ஒருவேளை, அந்தத் திருத்தங்கள் செயய்ப்பட்டிருந்தால், அதுவே ஆகச் சிறந்ததாகக் கூட ஆகியிருக்கலாம். ஆனால், அங்கே ‘ஈகோ’ தன் வேலையைக் காட்டியது. இரு மகத்தான படைப்பாளிகளைப் பிரித்தது.
இந்தப் பிரிவால் அந்த இருவரையும் விட தங்களுக்குத்தான் பேரிழப்பு என்பதை இன்றளவும் ரசிகர்கள் சொல்லி வருவதை கவனிக்க முடிகிறது. இந்த விவகாரத்தை வைத்து மணிரத்னம், இளையராஜா ரசிகர்களிடையே வாக்குவாதமும் நடைபெறுவது உண்டு.
“மணிரத்னம் எடுத்த காட்சிகளில் ராஜா சாரின் மியூஸிக்கை மியூட் பண்ணிட்டா, அதுல பெருசா தாக்கமே இருக்காது!”
“மணிரத்னம் தன் காட்சி மொழிகளில் சரியான ‘ஸ்பேஸ்’ கொடுக்கலைன்னா, இளையராஜா கிட்ட இருந்து அப்படியான மியூஸிக்கே வந்திருக்காது!”
இந்தச் செல்லச் சண்டைகளையெல்லாம் தாண்டி, ராஜாவும் மணியும் மீண்டும் இணைய வேண்டும் என்று இன்றளவும் 80ஸ், 90ஸ் கிட்ஸ் ஏங்கிக் கிடக்கின்றனர். அப்படி இணைந்தால், அவர்களுக்கு மட்டுமல்ல... இன்றைய 2கே கிட்ஸுக்கும் அது மிகப் பெரிய விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.
ஏனெனில், சமகால இயக்குநர்களே நெருங்க முடியாத வகையில் திரைமொழியில் அப்டேட்டாக இருக்கிறார் மணிரத்னம். தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோ ஜாம்பவான்களால் எடுக்க முடியாத ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி ‘பொ.செ 1’, ‘பொ.செ 2’ எடுத்து ரசிகர்களுக்கு அட்டகாசமான திரை அனுபவத்துடன் கல்லா கட்ட வைத்ததே இதற்குச் சான்று.
இன்னொரு பக்கம் இளையராஜா 80 வயதில் 2கே கிட்ஸுக்கும், இனி வரப்போகும் தலைமுறைக்கும் இசை விருந்து படைக்கும் வேலைகளில் வெற்றி வாகை சூடி வருகிறார். இதற்கு, அண்மையில் வெளியான ‘மார்டன் லவ் சென்னை’ ஆந்தாலஜி சீரிஸுக்கு அவர் அமைத்த இசையே சான்று.
காலம் எதையும் மாற்றும் ‘மெளன ராகம்’ போல. அதுவரை இவ்விருவரின் ரசிகர்களும் ஏக்கத்துடன் பாடிக் கொண்டிருப்பர்...
“மன்றம் வந்த தென்றலுக்கு...”
(ஜூன் 2 - இளையராஜா & மணிரத்னம் பிறந்தநாள்)
Edited by Induja Raghunathan