ஓலா நிறுவனத்தில், ஃபிளிப்கார்ட் இணை நிறுவனர் சச்சின் பன்சல் 21 மில்லியன் டாலர் முதலீடு
ஃபிளிப்கார்ட் இணை நிறுவனர் சச்சின் பன்சல், இணைய கால்டாக்சி நிறுவனமான ஓலாவில் 21 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறார். இந்திய மதிப்புப் படி இது உத்தேசமாக ரூ.150 கோடியாகும். ஓலா நிறுவனம், 2 பில்லியன் டாலர் நிதி திரட்டுவதாக விஷயம் அறிந்த வட்டாரங்கள் அளித்தத் தகவல் அடிப்படையில் வெளியான செய்தியை அடுத்து சச்சின் பன்சலின் இந்த முதலீடு தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. இதன் மூலா ஒலாவின் சந்தை மதிப்பு 6 பில்லியன் டாலராக கருதப்படுகிறது.
சச்சின் பன்சலில் இந்த முதலீடு முதல் கட்டம் தான் என்றும் கூறப்படுகிறது. ஓலா நிறுவனத்தில் அவர் மொத்தம் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், அதில் இந்த 21 மில்லியன் டாலர் ஒரு பகுதி என்றும் கூறப்படுகிறது.
இந்த நிதி திரட்டும் சுற்றின் ஒரு பகுதியாக, பெங்களூருவைச்சேர்ந்த ஓலா ஏற்கனவே, 74 மில்லியன் டாலர் திரட்டியுள்ளது. ஸ்டெட்வியூ கேபிடல் இதில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
“பெரிய அளவில் திரட்டப்படும் 2 பில்லியன் டாலர் நிதி, எலெக்ட்ரிக் வாகனங்கள் வீச்சை அதிகரிக்க, ஃபுட்பாண்டாவின் விரிவாக்கம், வளர்ச்சிக்கு மற்றும் சர்வதே சந்தையில் கவனம் செலுத்த பயன்படுத்தப்படும்,” என ஓலா தொடர்பான நம்பகத்தகுந்த வாட்டாரம் தெரிவிக்கிறது.
நாடு தழுவிய அளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வீச்சை விரிவாக்க ஓலா திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
2018 ல், வால்மார்ட் நிறுவனம் ஃபிளிப்கார்ட்டை கையகப்படுத்திய போது, அதன் இணை நிறுவனர்களில் ஒருவரும் செயல் தலைவருமான சச்சின் பன்சல், தனது 5.5 சதவீத பங்குகளை விற்றுவிட்டு வெளியேறினார். 800 மில்லியன் முதல் ஒரு பில்லியன் டாலர் வரை அவர் இதற்காக பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில், சச்சின் பன்சல், முன்னாள் முதலீட்டு வங்கியாளர் அங்கீத் அகர்வாலுடன் இணைந்து பிஏசி அக்விஷன்ஸ் லிட் எனும் நிறுவனத்தை துவக்கினார். இந்நிலையில் தற்போது அவர் ஓலாவில் முதலீடு செய்துள்ளார்.
ஓலா நிறுவனத்திற்கு 2018 சுவாரஸ்யமான ஆண்டாக அமைந்தது. சர்வதேச விரிவாக்கம் மற்றும் 2017 ல் கையகப்படுத்திய ஃபுட்பாண்டா நிறுவன வளர்ச்சி ஆகியவற்றில் அது கவனம் செலுத்தியது. மேலும், 2017 ல் ஓலா சாப்ட்பேங்க் முன்னிலை வகித்த சுற்றில் 1.2 பில்லியன் டாலர் திரட்டியது. அதன் பிறகு புதிய சந்தையில் கவனம் செலுத்தி வருகிறது. ஆஸ்திரேலியாவில் துவங்கி, யுகே மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நுழைந்துள்ளது.
ஓலா தற்போது இந்தியாவில், 11 பிரிவுகளில் 110 நகரங்களில் செயல்படுகிறது. 125 மில்லியன் பயனாளிகளை கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. நிறுவனம் ஒரு மில்லியன் ஓட்டுனர்களை தனது பார்ட்னராக கொண்டுள்ளது. மொத்த அடிப்படையில், ஆண்டுக்கு ஒரு பில்லியன் ரைடு சேவைகளை வழங்குவதாக கருதப்படுகிறது.
போட்டி நிறுவனமான, உபெர் இந்த ஆண்டு தீவிர விரிவாக்கத் திட்டத்தை கொண்டுள்ளது. இந்திய செயல்பாடுகளையும் வலுப்படுத்தி வருகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து கஷ்யப் | தமிழில்: சைபர்சிம்மன்