வருகிறது 'ஸ்மார்ட் சிலிண்டர்' - இண்டேன் நிறுவனம் அறிமுகம்!

வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப புதிய வசதி!
31 CLAPS
0

இந்தியாவில் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக திகழும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐ.ஓ.சி.எல்)-ன் இண்டேன் நிறுவனம் வாடிக்கையாளர்களின் சிரமங்களை போக்கும் வகையில் புதிய வடிவிலான கேஸ் சிலிண்டரை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

‘Indane Composite Cylinder' என பெயரிடப்பட்டுள்ள இந்த சிலிண்டர்கள் ’ஸ்மார்ட் சிலிண்டர்' என அழைக்கப்படுகிறது. இந்த சிலிண்டரில் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதாவது பழைய சிலிண்டரில் எவ்வளவு கேஸ் காலியாகியிருக்கிறது, எவ்வளவு மீதம் இருக்கிறது என்பது தெரியாது. ஆனால் இந்த ஸ்மார்ட் சிலிண்டர் எவ்வளவு கேஸ் செலவாகியிருக்கிறது, எவ்வளவு கேஸ் மீதம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் அடுத்த மறு நிரப்பலை எளிதில் திட்டமிட முடியும்.

ஸ்மார்ட் சிலிண்டர் மூன்று அடுக்கு கட்டுமானத்தைக் கொண்டுள்ளது. முதல் அடுக்கில், உயர்-அடர்த்தி பாலிஎதிலீன் (எச்டிபிஇ) உள் லைனரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அடுக்கு பாலிமர் போர்த்தப்பட்ட கண்ணாடியிழைகளின் கலப்பு அடுக்கு ஆகும். மூன்றாவது மற்றும் கடைசி அடுக்கு ஒரு எச்டிபிஇ வெளிப்புற ஜாக்கெட் ஆகும்.

புதிய ஸ்மார்ட் சிலிண்டர், தற்போதுள்ள எஃகு சிலிண்டர்களை விட பல நன்மைகளைக் கொண்டுள்ளன. எஃகு சிலிண்டர்களில் பாதி அளவு மட்டுமே எடை கொண்டிருக்கும் இது. மேலும், இந்த சிலிண்டர்கள் ஒளிஊடுருவக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இது வாடிக்கையாளர்களுக்கு எல்பிஜி அளவை துல்லியமாக சரிபார்க்க உதவுகிறது. இது வாடிக்கையாளர்கள் தங்கள் அடுத்த மறு நிரப்பலை எளிதில் திட்டமிட உதவும்.

இந்த சிலிண்டர்கள் துருப்பிடிக்காதவை. இதனால் பழைய சிலிண்டர்கள் போல் தரைகளில் கறை ஏற்படுத்தாது. இன்றைய நவீன சமையலறைகளுக்கு ஏற்றதாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக இந்த ஸ்மார்ட் சிலிண்டர்கள் புது டெல்லி, குர்கான், ஹைதராபாத், ஃபரிதாபாத் மற்றும் லூதியானாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடம் 5 கிலோ மற்றும் 10 கிலோ அளவுகளில் கிடைக்கின்றன. இதற்குக் கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து இந்த சிலிண்டர்கள் விரைவில் நாடு முழுவதும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது எஃகு சிலிண்டர்கள் வைத்திருப்பவர்கள், இந்த ஸ்மார்ட் சிலிண்டர்களை மாற்றிக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு வைப்புத்தொகை மற்றும் மானியமில்லாத பிரிவில் இந்த சிலிண்டர்களுக்கான 10 கிலோ வேரியண்டிற்கு ரூ.3350 மற்றும் 5 கிலோ வேரியண்டிற்கு ரூ.2150 அளவு பாதுகாப்பு வைப்பு தொகையாக செலுத்த வேண்டியிருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் உதவி: ஜீ நியூஸ் | தொகுப்பு: மலையரசு

Latest

Updates from around the world