‘முறையுடன் இலக்குடன் கனவு கண்டால் வெற்றி நிச்சயம்’ – அணில் ஃபுட்ஸ் நிர்வாக இயக்குநர் சுகுமார் நாகராஜன்!

யுவர்ஸ்டோரியின் India MSME Summit மாநாட்டில் யுவர்ஸ்டோரி தமிழ் ஆசிரியர் இந்துஜா ரகுநாதனிடம் அணில் ஃபுட்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிப்பயணத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டார் `அணில் ஃபுட்ஸ்’ நிர்வாக இயக்குநர் சுகுமார் நாகராஜன்.
6 CLAPS
0

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு எனச் சொல்லப்படுகிறது. குறிப்பாக எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் வரிசையில் இந்தியாவில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தை வகிக்கிறது. 5 மில்லியம் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களோடு தமிழ்நாடு சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

கடந்த நான்காண்டுகளாக யுவர்ஸ்டோரியின் ஒரு பகுதியான எஸ்எம்பி ஸ்டோரி 'இந்திய எம்.எஸ்.எம்.இ மாநாடு’ (India MSME Summit) ஏற்பாடு செய்து வருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புதிதாக உருவாகி வரும் வாய்ப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளவும் உதவும் நோக்கத்தும் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ஜூன் 21-ம் தேதி முதல் ஜூன் 27-ம் தேதி வரை ஒருவார காலம் நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்தத் துறை சார்ந்த வாய்ப்புகளைப் பற்றியும் சவால்களைப் பற்றியும் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள், துறை சார் நிபுணர்கள், சங்கங்கள், அரசு அமைப்புகள் போன்றோருடன் கலந்துரையாடல் நடப்பெற்றது.

அந்த வரிசையில், தமிழகத்தின் திண்டுக்கல்லில் சிறியளவில் ஒரு எம்.எஸ்.எம்.இ. ஆக தொடங்கப்பட்ட ’அணில் ஃபுட்ஸ்’ நிறுவனம் தென்னகத்தின் மிகப்பெரிய பிராண்டாக உருவெடுத்தது எப்படி? என்ற தலைப்பில், யுவர்ஸ்டோரியின் India MSME Summit மாநாட்டில் யுவர்ஸ்டோரி தமிழ் ஆசிரியர் இந்துஜா ரகுநாதன் உடன் தங்களது வளர்ச்சிப்பயணத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டார் ’அணில் ஃபுட்ஸ்’ நிர்வாக இயக்குநர் சுகுமாரன் நாகராஜன்.

’மெல்லிய சேமியாவில் தொடங்கிய பயணம்’ இன்று பல பிராடக்டுகளுடன் 250 கோடி மதிப்புடைய நிறுவனமாக தென்னகம் முழுவதும் விரிவடைந்திருக்கிறது அணில் ஃபுட்ஸ். கூடிய விரைவில் இந்தியா முழுவதும் இந்த பிராண்டை பிரபலப்படுத்த உள்ளனர்.

சிறியளவில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு வெற்றி என்பது சாத்தியமா என்கிற சந்தேகம் இருப்பது சகஜம்தான். ஆனால், அப்படி இந்தத் துறையில் சிறியளவில் தொழில் தொடங்குவோராலும் மிகப்பெரிய பிராண்டாக உயர்ந்து நிற்க முடியும் என்கிற நம்பிக்கையையும் பாமர மக்களின் வீடுகளையும் சென்றடைந்து மிகவும் பரிச்சயமான, மனதிற்கு நெருக்கமான பிராண்டாக மாறமுடியும் என்கிற நம்பிக்கையும் இந்த வெற்றிக்கதை நிச்சயம் விதைக்கும்.

இனி அவருடனான உரையாடலில் இருந்து…

சுகுமார் நாகராஜன்: என் அப்பா ஏ.நாகராஜன் அவர்களால் 1984ம் ஆண்டு ‘அணில்’ திண்டுக்கல்லில் தொடங்கப்பட்டது. எங்கப்பா பத்தாம் வகுப்புகூட தேர்ச்சி பெறாதவர். பலசரக்கு கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். படிப்படியாக வேலைகளைக் கற்றுக்கொண்டார். ஒருகட்டத்தில் சேமியா வணிகம் தொடங்கும் வாய்ப்பு கிடைத்தது.

“வாய்ப்பு என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதை விடாப்பிடியாகப் பற்றிக்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.”

அவர் தொழில் தொடங்கிய புதிதில் சேமியா பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. ஆனால் கிடைக்கும் வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்பதை மட்டும் நன்றாக உணர்ந்திருந்தார். தொழில் சம்பந்தமாக ஆழமாக கற்றுக்கொண்டார்.

மிகக்குறைந்த முதலீட்டுடன் ‘அணில் சேமியா’ என்கிற பிராண்டை தொடங்கினார். நேரடியாக கடைகளுக்கு எடுத்துச் சென்று தயாரிப்பை கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், ஆரம்பத்தில் பெரிதாக ஆதரவு எதுவும் கிடைக்கவில்லை. அதன் பிறகே தன் தயாரிப்பை விளம்பரப்படுத்தவேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டோம்.

கொழும்பு வானொலி நிலையத்தின் மூலம் விளம்பரப்படுத்தினோம். அதன் பிறகு, மெல்ல மக்கள் மத்தியில் ’அணில் சேமியா’ என்கிற தயாரிப்பு பற்றி தெரியவந்தது. தரமும் சுவையும் நன்றாக இருந்ததால் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

படிபடியாக வளர்ந்தோம். விநியோகஸ்தர்களை ஏற்பாடு செய்தோம். சேமியா என்கிற தயாரிப்புடன் நின்றுவிடக்கூடாது என்பதால் ராகி சேமியா என்கிற புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தினோம். தமிழகத்தில் ராகி சேமியாவை எங்கள் நிறுவனமே முதன் முதலில் அறிமுகப்படுத்தியது.

அதைத் தொடர்ந்து ஆட்டா, மைதா, ரவை என ஒவ்வொன்றாக சேர்க்கப்பட்டு தற்போது கிட்டத்தட்ட 35 பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

இந்துஜா: அப்பா காலத்துக்கும், தற்போது தொழிலை நடத்துவதற்கான வித்தியாசம் என்ன?

சுகுமார் நாகராஜன்: அப்பா காலத்தில் தொழில்முறையாக செயல்படவில்லை. இன்று எங்கள் நிறுவனம் எம்என்சி நிறுவனம் போல் புரொபஷனல் அணுகுமுறையுடன் இயங்கி வருகிறது.

எங்கள் நிறுவனத்தில் 10 துறைத்தலைவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு சுயாதீனமாக முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

250 கோடி ரூபாய் டர்ன்ஓவர் எட்டியிருக்கிறோம். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் செயல்படுகிறோம். உலகில் தமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் எங்கள் தயாரிப்புகள் சென்றடைந்திருக்கின்றன. அமெரிக்காவில் எல்லா கடைகளில் எங்கள் தயாரிப்புகள் கிடைக்கின்றன.

இந்துஜா: உங்கள் அப்பா மூன்றாம் நிலை நகரத்தில் செயல்படத் தொடங்கினார். தனக்கான விளம்பரப்படுத்தும் உத்தியை வகுத்துள்ளார். சிறுதொழிலாக தொடங்கும் பலர் அடுத்தகட்டத்திற்கு செல்லாமல் தேங்கிவிடும் நிலையில் ஒரே ஒரு தயாரிப்புடன் தொடங்கிய உங்கள் அப்பாவிற்கு விரிவாக்கம் செய்யும் எண்ணம் எப்படி வந்தது?

சுகுமார் நாகராஜன்: எந்த ஒரு வணிகத்திற்கும் தனித்துவம் (USP) முக்கியம். என் தயாரிப்பின் தனித்துவம் எனக்குத் தெரியவில்லை என்றால் நான் விளம்பரப்படுத்துவதில் அர்த்தம் இல்லை.

எங்கள் தயாரிப்பைப் பொறுத்தவரை தரம், சுவை இவை இரண்டுமே எங்கள் USP என்பேன். மேலும், என் அப்பா புதுமையாக பல விஷயங்களை செய்தார். எல்லோரும் சேமியா தயாரித்தாலும் ரோஸ்டட் சேமியா என்கிற தயாரிப்பை அறிமுகப்படுத்தியதில் நாங்கள் முன்னாடி. சேமியாவை மக்கள் வறுத்த பிறகே பயன்படுத்துவார்கள் என்பதால் அந்த செயல்முறையை எளிதாக்க இதை அறிமுகம் செய்தோம்.

இல்லத்தரசிகளை வேலைகளை எந்த அளவிற்கு எளிமையாக்குகிறோமோ அந்த அளவிற்கு தயாரிப்பில் வெற்றி கிடைக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

ராகி சேமியாவும் இப்படித்தான் புதுமையாக அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது பிரேக்ஃபாஸ்ட் மற்றும் டின்னர் கேட்டகிரிக்குத் தேவையான அனைத்தையும் வழங்கி வருகிறோம். கம்பு, வரகு, சோளம், தினை இப்படி சிறுதானிய சேமியா வகைகளைக் கொடுக்கிறோம்.

சிறுதானியத்தைக் கொண்டு உலர் தோசை மாவு அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இதை தண்ணீரில் கரைத்து வெறும் 15 நிமிடங்களில் நீங்கள் தோசை தயாரிக்கலாம்.

இந்துஜா: திண்டுக்கல்லை தாண்டி மற்ற இடங்களுக்கு விரிவடையவேண்டும் என்று எந்த காலகட்டத்தில் முடிவு செய்தீர்கள்? அணில் ஃபுட்ஸ் அடுத்தகட்டத்தற்கு செல்வதற்கான விதை எப்போது விதைக்கப்பட்டது?

சுகுமார் நாகராஜன்: ஆரம்பத்தில் பொருட்களை தயாரித்து மொத்த வியாபாரிடம் கொடுத்துவிடுவோம். அவர்கள் விற்பனை செய்தார்கள். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல் இது புரொஃபஷனல் அணுகுமுறை கிடையாது. எனவே, விநியோகஸ்தர்கள் மூலம் தயாரிப்புகளை வியாபாரம் செய்ய முடிவு செய்தோம். இதற்கு சேல்ஸ் ஃபோர்ஸ் அவசியம் என்பது புரிந்து சேல்ஸ் டிபார்ட்மெண்டை எங்கள் சிஸ்டத்தில் இணைத்தோம்.

தற்போது தமிழ்நாடு முழுவதும் எங்களுடன் 300 விநியோகஸ்தர்கள் இணைந்திருக்கிறார்கள். அதன் பிறகு, புரொடொக்‌ஷன் மேனேஜரை நியமித்தோம். அப்போது அதிக தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதனால் மனிதவள மேம்பாட்டு துறையை உருவாக்கினோம். இப்படி படிப்படியாக புரொஃபஷனலாக எங்களை மாற்றிக்கொண்டோம். இதன் காரணமாகவே தென்னிந்தியாவில் பெரிய நிறுவனமாக வளர்ச்சியடைய முடிந்தது.

இந்துஜா: உணவுத்துறை மட்டுமல்லாது எந்த ஒரு துறையில் செயல்படும் எம்.எஸ்.எம்.இ நிறுவனமாக இருந்தாலும், அடுத்தகட்ட வளர்ச்சியை எட்டி பெரிய பிராண்டாக வளர எந்த மாதிரியான முன்னெடுப்புகளை எடுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

சுகுமார் நாகராஜன்: உதாரணத்திற்கு இன்று நான் 5 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் செய்தால், அதே வணிக மாதிரியைக் கொண்டு என்னால் 50 கோடி ரூபாய்க்கு வணிகம் செய்யமுடியாது. அதேபோல், 50 கோடி ரூபாய் வணிக மாதிரியைக் கொண்டு 500 கோடி ரூபாய் வணிகத்தை செய்யமுடியாது. ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு செல்ல முதலில் மாற்றத்திற்கு தயாராக இருக்கவேண்டும்.

வணிக வளர்ச்சியை நீங்கள் எதிர்பார்த்தீர்களானால் உங்களுக்குக்கீழ் முடிவெடுக்கும் திறன் கொண்ட பலரை நியமிக்கவேண்டும். ஒரு கட்டம்வரை தொழில்முனைவர் தானே முடிவுகளை எடுத்து வியாபாரத்தை வளர்ச்சியடையச் செய்ய முடியும். ஆனால் காலப்போக்கில் அவருக்குகீழ் நியமிக்கப்படுபவர்கள் முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். இதனால் முன்னேற்றத்திற்கான திட்டமிடலில் ஒருவரின் அறிவுத்திறனைக் காட்டிலும் பலரது அறிவுத்திறன் ஒன்றுதிரட்டப்படும்.

இந்துஜா: சிறுதொழில் செய்பவர்கள் ஒரே ஒரு பிராடக்டில் மட்டுமே கவனம் செலுத்துவது வழக்கம். இதுபோல் செயல்படுபவர்கள் வளர்ச்சியடைவது சாத்தியமா?

சுகுமார் நாகராஜன்: பொருள் எதுவாக இருந்தாலும் பிராண்ட் இமேஜ் மிகவும் முக்கியமானது. நுகர்வோருக்கு தேவையில்லாத ஒரு பொருளை அதிகளவில் தயாரித்தாலும் பலனில்லை. ஒரே ஒரு பொருளாக இருந்தாலும் சரி, நம் பிராண்ட் இமேஜை மக்களிடம் கொண்டு சேர்த்துவிடவேண்டும். இதுதான் சவாலான கட்டமாக இருக்கும். அதைத்தொடர்ந்து அதே பிராண்டின்கீழ் எத்தனை பொருளை வேண்டுமானால் விற்பனை செய்ய முடியும்.

நிறைய தயாரிப்புகளுடன் தொடங்குவதைக் காட்டிலும் ஒரே ஒரு பொருளில் தொடங்கி அதை நல்லபடியாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்த்துவிட்டால் போதும்.

இந்துஜா: சிறுதொழில் நிறுவனங்களுக்கு முதலீடு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். உங்கள் அப்பா சுயமாக முதலீடு செய்து தொடங்கினார், அடுத்தகட்டத்திற்கு சென்றபோது முதலீடு தேவைப்பட்டதா? கடன் பெறுவதிலும் பல்வேறு சிக்கல்களை நிறுவனங்கள் சந்திக்கின்றன?

சுகுமார் நாகராஜன்: ஆரம்பத்தில் ஜீரோவில் இருந்தே தொடங்கினோம். படிப்படியாகவே வளர்ந்தோம். கிடைத்த லாபத்தை தொழிலிலேயே முதலீடு செய்தோம். வளர வளர பணப்புழக்கத்தையும் ஏற்படுத்த முடிந்தது.

எந்த ஒரு நிறுவனத்திற்கும் ஃபைனான்ஷியல் டிசிப்ளின் முக்கியம். எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் தோல்வியை சந்திப்பதற்கு முக்கியக் காரணமே நிதி சார்ந்த ஒழுக்கம் இல்லாததுதான். பலர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு ஒன்றில் கிடைக்கும் வருவாயை வேறொன்றில் முதலீடு செய்து சிக்கலில் சிக்கிக்கொள்கின்றனர். இது தவறு.

ஒரே தொழிலை செய்து அதிலேயே நிதி சார்ந்த திட்டமிடல் இருக்குமானால் கடன் சுமையும் குறையும் வணிகமும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்.

இந்துஜா: அணில் ஃபுட்ஸ் நிறுவனம் சந்தித்த சவால்கள் என்னென்ன? அவற்றை எப்படி எதிர்கொண்டு சமாளித்தீர்கள்?

சுகுமார் நாகராஜன்: நாங்களும் பல தோல்விகளை சந்தித்திருக்கிறோம். உதாரணத்திற்கு அணில் ஊறுகாய் என்கிற தயாரிப்பை நாங்கள் அறிமுகப்படுத்தினோம். அதில் காஸ்டிங் தொடர்பான தவறு செய்துவிட்டோம். இதனால் இந்தத் தயாரிப்பைத் தொடரமுடியவில்லை.

ஒரு தயாரிப்பை விற்பனை செய்யவேண்டுமானால் காஸ்டிங், பிரைசிங், பிராடக்ட், பொசிஷனிங் இப்படி எல்லாமே சரியாக இருக்கவேண்டும். அப்போதுதான் அது நுகர்வோரை சென்று சேரும். நாம் ஏதாவது ஒரு தவறு செய்துவிட்டால் சிக்கலாகிவிடும்.

அந்த வகையில் அணில் ஊறுகாய் தயாரிப்பை ஓராண்டிற்கு மேல் எங்களால் தொடர முடியவில்லை. ஒரு பொருளை முறையாக அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லமுடியாமல் போனால் அதை நிறுத்திக்கொள்ள தயக்கம் காட்டக்கூடாது. அதை விட்டுவிட்டு மற்ற தயாரிப்புகளில் கவனம் செலுத்துவதே சிறந்தது.

இந்துஜா: தொழில் நிறுவனங்கள் தற்போதைய டிஜிட்டல் உலகில் எளிதாக வளர்ச்சியடைய முடிகிறதா? அன்றைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் சவால்கள் அதிகரித்துள்ளதா குறைந்துள்ளதா?

சுகுமார் நாகராஜன்: எம்.எஸ்.எம்.இ துறையைப் பொறுத்தவரை சவால்கள் அதிகரித்திருக்கிறது என்பது என்னுடைய கருத்து. அந்த காலத்தில் பிராண்டை உருவாக்க நாங்கள் இவ்வளவு கஷ்டப்படவில்லை. கிடைக்கும் டர்ன்ஓவரில் ஒரு தொகையை ஒதுக்கி தொடர்ந்து பிராண்டிங்கிற்கு செலவிட்டு வந்தோம்.

ஆனால், இன்று எவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கினாலும் போதுமானதாக இல்லை.

அதேசமயம் நல்ல ஐடியா இருக்குமானால் இன்று முதலீடு செய்ய பலர் தயாராக இருக்கின்றனர்.

அன்று பணம் பிரச்சனையாக இருந்தது, பிராண்டை வளர்ச்சியடையச் செய்வது எளிதாக இருந்தது. ஆனால் இன்று பணம் எளிதாக இருக்கிறது, பிராண்டை வளர்ச்சியடையச் செய்வது கடினமாக இருக்கிறது.

இந்துஜா: அணிட் ஃபுட்ஸ் நிறுவனத்தின் அடுத்தடுத்த இலக்குகள் என்னென்ன?

சுகுமார் நாகராஜன்: இன்று 35 பிராடக்ட்ஸ் தயாரித்து சந்தைப்படுத்தி வரும் நிலையில் அடுத்த மூன்றாண்டுகளில் 100 பிராடக்ட்ஸ் என விரிவடைய இருக்கிறோம்.

இன்று 1,500 பேருக்கு வேலை கொடுத்திருக்கிறோம். இதில் 90 சதவீதம் பேர் பெண்கள். அடுத்த மூன்றாண்டுகளில் குறைந்தபட்சம் 10,000 பேருக்காவது வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கவேண்டும் என திட்டமிட்டிருக்கிறோம். இன்றைய டர்ன்ஓவர் அளவு 250 கோடி ரூபாய். இதை 500 கோடி ரூபாயாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டிருக்கிறோம்.

இந்துஜா: எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் வெற்றியடைய உங்கள் ஆலோசனைகள் என்ன?

சுகுமார் நாகராஜன்: ஒரு நிறுவனத்தின் நோக்கம் மிகவும் முக்கியமானது. நோக்கமில்லாத எந்த ஒரு தொழில் முயற்சியும் வெற்றியடையாது. அப்துல் கலாம் சொல்வது போல் ஒரு பெரிய கனவை நாம் காணவேண்டும். அப்படிப்பட்ட கனவு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை.

கனவு எவ்வளவு முக்கியமானது அதேபோல் நிறுவனத்தின் நோக்கமும் முக்கியமானது. இதை குறுகியகால நோக்கம், நீண்டகால நோக்கம் என இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம். முறையுடன் இலக்குடன் கனவு கண்டால் வெற்றி நிச்சயம்.

Latest

Updates from around the world