‘142.8 கோடி இந்தியர்கள்’ - மக்கள் தொகையில் சீனாவை முந்திய இந்தியா; ஆனா அதுல ஒரு நல்ல செய்தி இருக்கு!

By Chitra Ramaraj
January 20, 2023, Updated on : Fri Jan 20 2023 04:01:32 GMT+0000
‘142.8 கோடி இந்தியர்கள்’ - மக்கள் தொகையில் சீனாவை முந்திய இந்தியா; ஆனா அதுல ஒரு நல்ல செய்தி இருக்கு!
2022 இறுதியில் சீனாவை விட இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்து விட்டதாக உலக மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்மூலம் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா முதலிடத்திற்கு உயர்ந்துள்ளது.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

சுற்றுச்சூழல் மாசுபாடுக்கு இணையாக உலகை அச்சுறுத்தி வரும் மற்றொரு விசயம் மக்கள்தொகை பெருக்கம். குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட நாடுகள், தங்கள் நாட்டு குடிமக்களை அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஊக்குவித்து வரும் அதேவேளையில், பெரும்பாலான நாடுகள் குடிமக்கள் குழந்தைப் பெற்றுக் கொள்வதில் சிக்கனம் காட்ட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகிறது.


சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, உலகளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் முதல் இடத்தில் சீனாவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும் இருந்து வந்தது. எனவே, மக்கள்தொகையைக் கட்டுப்பாட்டில் வைக்க, நம் நாட்டில் முதலில், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்றனர். பிறகு, ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்றனர்.


ஆனால், இனி வரும் காலங்களில், ‘நாமே குழந்தைகள்.. நமக்கேன் தனியே’ என மாறும் சூழல் வந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படும் அளவிற்கு ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

population

மக்கள் தொகையில் முதலிடத்தில் இந்தியா

ஆம், கடந்தாண்டு இறுதியில் இந்திய மக்கள் தொகை, சீனாவை முந்திவிட்டது என ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். அதற்கு முன்பு வரை, உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதல் இடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இருந்து வந்தது. எனவே, கடந்த சில ஆண்டுகளாக சீனா மக்கள் தொகையை குறைக்கக் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.


அதன் பலனாக, கடந்த சில ஆண்டுகளில் சீனாவின் மக்கள்தொகையில் சில லட்சத்தில் குறையத் தொடங்கியது. 2022ம் ஆண்டு இறுதியில் சீனாவின் மக்கள் தொகை 141 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது 2021ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் குறைவாகும்.


இப்படியாக சீனா தனது மக்கள்தொகையைக் குறைத்துக் கொண்டிருக்க, இந்தியா சத்தமில்லாமல் முதலிடத்திற்கு வந்துவிட்டது. இதனை உலக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அமைப்பு அறிக்கை மூலம் உறுதி செய்துள்ளது (மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பு என்பது மக்கள்தொகையில் கவனம் செலுத்தும் ஒரு சுயாதீன அமைப்பாகும்).


அதாவது, 2022 இறுதியில் சீனாவை விட இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்து விட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி,

இந்திய மக்கள் தொகை 142.8 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, சீனாவை விட 50 லட்சம் மக்கள் இந்தியாவில் அதிகமாக உள்ளதாக  அந்த அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

மக்கள் தொகைப் பெருக்கத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களுக்கு இடையில் மிகப் பெரிய அளவில் வித்தியாசம் இல்லாததால், சீனாவை நிச்சயம் ஒருநாள் இந்தியா முந்தி விடும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கூறப்பட்டு வந்தது. ஆனால், மிகக் குறுகிய காலத்தில் சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

சீனாவின் வெற்றி

ஏனெனில், கடந்த 60 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் மக்கள் தொகை அதிகரித்தே வந்தது. ஆனால் முதன்முறையாக இந்த ஆண்டு மக்கள் தொகை குறைந்துள்ளதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


மக்கள் தொகைப் பெருக்கம் பெரிய சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சனையாக உருவெடுத்ததால், ஒரு குழந்தை என்ற கொள்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே சீனா அறிமுகப்படுத்தியது. கறாராக அந்தக் கட்டுப்பாடுகளும் பின்பற்றப்பட்டது. அந்த திட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியால், அந்நாட்டில் மக்கள்தொகை நிலையான தன்மைக்கு வந்தது.


எனவே, கட்டுப்பாடுகளைத் தளர்த்த அந்நாடு முடிவு செய்தது. 2016ம் ஆண்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகளைத் தந்து, 2021ம் ஆண்டில் ஒவ்வொரு தம்பதியும் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குள்ளாகவே சீனர்கள் சிறிய குடும்ப வாழ்க்கை முறைக்கு பழகி விட்டனர்.

china
“சின்ன குடும்பம் என்பதற்கு சீனர்கள் பழகிவிட்டார்கள். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குடும்பத்திற்கான செலவும் அதிகரிக்கும் என்று பல குடும்பங்கள் கருதுகின்றனர். குழந்தை பிறப்பை ஊக்குவிக்க இன்னும் கூடுதலாக பலனளிக்கும் கொள்கைகளை சீன அரசாங்கம் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால், மக்கள் தொகை மேலும் குறையும்,”  என்கிறார் விக்டோரியாவில் உள்ள ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் சியுஜீயான் பெங்.

இது ஒருபுறம் இருக்க, கடந்த 2019ம் ஆண்டு கொரோனா தாக்கம் ஆரம்பமானதால் அந்நாட்டில் உயிரிழப்புகள் கடுமையாக இருந்தது. வெளிப்படையாக அந்நாட்டில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் விபரத்தை சீனா வெளியிடவில்லை. ஆனாலும், அந்நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கை சரிவு மூலம், கொரோனா உயிரிழப்புகளை உலக நாடுகளால் யூகிக்க முடிந்தது.


உதாரணத்திற்கு சீனாவில் கடந்தாண்டு 95 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்தன. அதேவேளையில், 1 கோடியே 4 லட்சத்து 10 ஆயிரம் இறப்புகள் ஏற்பட்டன. கடந்த டிசம்பர் 8 முதல் ஜனவரி 12 வரை மட்டும், சுமார் 60 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவில் உள்ள 141 கோடி மக்களில் 90 கோடி பேருக்கு தொற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில், 1 கோடிப் பேர் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பின் மீண்டும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நல்ல செய்தி

மக்கள்தொகை அதிகமாகி விட்டது என அதிர்ச்சி கொடுத்தாலும், உலக மக்கள் தொகை கணக்கீடு அமைப்பு வெளியிட்டுள்ள மற்றொரு தகவல் இந்தியாவிற்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. அதாவது,

அவ்வமைப்பின் கணக்கெடுப்புப்படி 30 வயதுக்குட்பட்ட மக்கள்தொகையில் பாதி பேர் இருக்கும் இந்தியா, வரும் ஆண்டுகளில் உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
india

தற்போதைய நிலவரப்படி, ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. சர்வதேச அளவில் அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை உற்பத்தியில் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது. அதே நேரத்தில் சமையல் எண்ணெய்களின் முதல் இறக்குமதியாளராகவும், தங்கம் மற்றும் எஃகின் இரண்டாவது பெரிய நுகர்வோர் மற்றும் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் வாங்கும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது. உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமான சந்தையின் தாயகமாகவும் உள்ளது.

மக்கள்தொகை மேலும் அதிகரிக்கலாம்

ஏற்கனவே, 2027ம் ஆண்டு உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என ஐநா தெரிவித்திருந்தது. சுதந்திர தின உரையில்கூட பிரதமர் மோடி, ‘மக்கள் தொகைப் பெருக்கம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால் எதிர்கால சந்ததிகள் மக்கள் தொகை பெருக்கத்தால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்’ என எச்சரித்திருந்தார்.


ஆனால், 2022ம் ஆண்டிலேயே நாம் மக்கள் தொகைப் பெருக்கத்தில் சீனாவைப் பின்னுக்கு தள்ளி விட்டோம். இது ஒருபுறம் இருக்க, 2022 முதல் 2050க்குள் மக்கள் தொகை அதிகரிக்க உள்ள நாடுகளின் பட்டியலில் காங்கோ, எகிப்து, தான்சானியா, பிலிப்பைன்ஸ், எத்தியோப்பியா வரிசையில் இந்தியாவும் உள்ளது. எனவே ,இந்தியா மக்கள் தொகைப் பெருக்கத்தில் வரலாற்றுச் சாதனை படைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.