பதிப்புகளில்
நியூஸ் வியூஸ்

இந்தியா-பாக் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இப்படியா விளம்பரப்படுத்துவீங்க? கடுப்பான மக்கள், பொங்கிய பிரபலங்கள்...

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வருகிற 16ம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்காக பாகிஸ்தானின் தனியார் டிவி ஒன்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலும் வெளியிட்டுள்ள விளம்பரங்கள் அனைவரின் கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது.

YS TEAM TAMIL
14th Jun 2019
33+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

12வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மே 30ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 16ம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகளிடையே போட்டி நடைப்பெற உள்ளது. இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் விளையாட்டு என்றாலே கிரிக்கெட் என்பதைத் தாண்டி அதனை ஒரு கவுரவமாக நினைக்கும் மனப்பாங்கு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

அதிலும் உலகக்கோப்பை போட்டியை பொருத்தவரையில் இதுவரையில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதில்லை என்பதை சுட்டிக்காட்டியே சமூக வலைதளங்களில் வார்த்தைப் போர்கள் நடைபெற்று வந்தன. இதற்கு ஒரு படி மேலே போய் ஊடகங்களே ரசிகர்களிடத்தில் வன்முறையை ஏற்படுத்தும் விதமாக விளம்பரங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

Match Ad

இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவு அவ்வளவு சுமூகமாக இல்லாத நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இரு நாடுகளிடையே எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று இருக்கும் சூழலில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருக்கிறது பாகிஸ்தான் மற்றும் இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட்டிற்கான விளம்பரங்கள்.

இதை விட கேவலமாக யாராலும் விளம்பரப்படுத்த முடியாது, இந்த விளம்பரங்கள் ரசிக்கும்படியாக இல்லை என டாப் லெஜென்டுகள் முதல் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாஸ் டிவி அபிநந்தனை பாக் ராணுவம் சிறைபிடித்திருந்த போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை வைத்து நகைச்சுவை என்ற பெயரில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியுடன் தொடர்புப்படுத்தி விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் இந்த விளம்பரம்  இந்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் போட்டியை முன்னிலைப்படுத்த ஒரு ராணுவ வீரரை இப்படித்தான் அவமரியாதை செய்வதா என்று கொதித்தெழுந்துள்ளனர்.

#IndvPak ட்விட்டரில் ட்ரென்டாகி வரும் நிலையில் முந்தைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானின் தோல்விகளைச் சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் ஊடகத்தின் ரசனை மிகவும் மோசமாக இருக்கிறது. அபிநந்தன் சாதாரணமாகக் கூறியவற்றை கிண்டல் செய்து இப்படி ஒரு விளம்பரம் உருவாக்கி இருப்பது அவர்களின் இயலாமையையே காட்டுகிறது என்று இந்த நெட்டிசன் கடிந்துள்ளார்.  

அபிநந்தனைப் போல மீசை வைத்துக் கொண்டு ஒரு மாடல் கையில் டீக்கப்புடன் நீல நிற ஜெர்சி அணிந்து நிற்கிறார். அவரிடம் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வெற்றி பெற என்ன யுக்தி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்கப்படுகிறது அதற்கு அவர் அதை நான் சொல்லக் கூடாது என்கிறார், மீண்டும் மற்றொரு கேள்விக்கும் மன்னித்துவிடுங்கள் நான் அதை சொல்லக்கூடாது என்று பதிலளிக்கிறார். இறுதியில் டீயை குடித்துவிட்டு டீ கப்புடன் செல்பவரை நிறுத்தி அந்த கப்பை பிடுங்கிக் கொண்டு அனுப்புகிறார்கள். அந்த சமயத்தில் #LetsBringTheCupHome என்ற ஹேஷ்டேக் வருகிறது.

விளையாட்டு என்பது நாடுகளிடையே ஒற்றுமையை உருவாக்க வேண்டும். விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும் இந்த விளம்பரத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது ஒரு கீழ்த்தரமான செயல், இந்த மாதிரியான விளம்பரங்கள் தவிர்க்கப்பட வேண்டும். பாகிஸ்தானில் உள்ள ஒரே ஒரு தொலைக்காட்சியின் நிலைப்பாடு இது ஒட்டு மொத்த நாட்டின் நிலைப்பாடும் இதுவல்ல என்று பாகிஸ்தானி ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் விளம்பரம் குறித்து இந்த வலைபதிவர் ஐசிசிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். விளையாட்டை அரசியலாக்கலாமா? விளையாட்டு பிறரை புண்படுத்தக்கூடாது மற்றவர்களின் தேசப்பற்றை கேள்வி எழுப்பக் கூடாது என்று இவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா உலகக் கோப்பையை வெல்ல விளையாடிக் கொண்டிருந்தால் பாகிஸ்தான் தங்களால் டீ கப்பை மட்டுமே வெல்ல முடியும் என்பதை இந்த விளம்பரத்தின் மூலம் ஒப்புகொண்டுள்ளனர் என்று இந்த வலைபதிவர் பதில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே அபிநந்தனை கேலி செய்யும் விளம்பரத்திற்கு பதிலடியாக ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். ஆனால் அந்த வீடியோவிற்கு பலரும் ரசிக்கும் படியாக இல்லை.

Poonam

பாகிஸ்தான் டிவி மட்டும் இந்த பொறுப்பற்ற விளம்பரத்தை செய்யவில்லை இந்தியாவில் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்காக வெளியிட்டுள்ள விளம்பரமும் அபத்தமாகத் தான் இருக்கிறது.

தந்தையர் தினமான ஜூன் 16ல் போட்டி அமைந்துவிட்ட நிலையில் வங்காளதேசமும், பாகிஸ்தானும் இந்தியாவின் பிள்ளைகள் என்ற டேக்லைனுடன் வரும் விளம்பரத்தை இந்தியர்கள் உள்பட பலரும் கண்டித்துள்ளனர்.

இது ஒரு வெட்டியான விளம்பரம், விளம்பரத்தை உருவாக்கியவருக்கு கற்பனைத் திறனே இல்லை என்பது தெரிகிறது. இது போன்ற விளம்பரங்களை நாங்கள் ஒர போதும் ஊக்கப்படுத்த மாட்டோம் என்று தனது கண்டனத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் இந்த வலைபதிவர்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளம்பரம் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டும் எடுத்துக்கொள்வோம் இது போர் அல்ல. நாங்கள் விளையாட்டை நேசிப்பவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

இரு தரப்பில் வெளியாகி இருக்கும் விளம்பரங்களுமே பைசாவிற்கு புரயோஜன் இல்லை. கேலிக்கூத்தான வகையில் கிரிக்கெட் போட்டியை விளம்பரப்படுத்தத் தேவையில்லை. ஏற்கனவே கிரிக்கெட் போட்டிக்கு தேவையான அளவு ஈர்ப்பு இருக்கிறது. இது வெறும் கிரிக்கெட் போட்டி மட்டுமே நீங்கள் அதற்கு மேல நினைத்தால் வாழ்வில் எதையாவது உருப்படியானதாகத் தேடுங்கள் என்று விளையாட்டு வீராங்கனையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் மனைவியுமான சானியா மிர்சா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆசியாவைப் பொறுத்தவரையில் மற்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு இல்லாத ரசிகர்கள் பட்டாளம் கிரிக்கெட் விளையாட்டிற்கு உள்ளனர். அப்படி இருக்கையில் மற்ற நாடுகளுடன் விளையாடியது போலவே பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன. இதை ஒரு கவுரவப் பிரச்னையாக பார்த்து வீண் சண்டை சச்சரவுகளை வளர்ப்பதில் யாருக்கும் லாபமில்லை.

விளையாட்டு என்பது ஒரு பொழுதுபோக்கு வெற்றியோ தோல்வியோ சமமாக எடுத்துக் கொண்டால் யாருக்கும் பாதகம் இருக்காது. கிரிக்கெட்டில் வெல்வதன் மூலம் எந்த நாட்டின் கோட்டையையும் பிடித்து விட முடியாது. தேசப்பற்றிற்கும் இரு நாட்டு உறவுகளுக்கும் குந்தகம் விளைவிக்கக்காமல் கிரிக்கெட் விளையாட்டை ரசிப்போம்.

கட்டுரையாளர் : கஜலட்சுமி

33+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags