18 அடி; 37.23 கிலோ: உலகின் மிகப் பெரிய பால்பாயிண்ட் பேனாவை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்!

5.5 மீட்டர் நீளம் கொண்ட உலகின் மிகப் பெரிய பேனாவை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் தெலுங்கானாவைச் சேர்ந்த ஆச்சார்யா.
0 CLAPS
0

'கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானது’ என்பது பழமொழி. அந்தளவிற்கு கனமானது பேனா முனை. அதில், இருந்து வரும் வார்த்தைகளின் வலிமையைக் குறிப்பதற்காக இப்படி ஒரு பழமொழி உருவாக்கப்பட்டது.

சரி, பேனா முனை கனமாக இருந்தால் ஓகே. பேனாவே கனமாக இருந்தால்? ஆம், பிரம்மாண்ட பேனா ஒன்றைச் செய்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஆச்சாரியா மகுருனி ஸ்ரீநிவாஸா. வித்தியாசமாக எதையாவது செய்து சாதனை படைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் மிக்கவரான இவர், தனது குழுவினருடன் சேர்ந்து கடந்த 2011ம் ஆண்டு மிகப் பெரிய அளவிலான பால் பாயிண்ட் பேனா ஒன்றை உருவாக்கினார்.

இந்த பிரம்மாண்ட பேனாவை கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி ஹைதராபாத்தில் அளவிட்டது கின்னஸ் நிர்வாகம். அதன் தொடர்ச்சியாக, பார்ப்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் அந்தப் பேனாவுக்கு தற்போது கின்னஸ் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதுதொடர்பான வீடியோவை கின்னஸ் அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஸ்ரீநிவாஸா மற்றும் அவரது குழுவினர் பேனாவை சுமந்து செல்கின்றனர். கூடவே, இந்திய புராணக் கதைகளில் கூறப்படும் பிரம்மாண்டத்தின் அடிப்படையில் ஸ்ரீநிவாஸா குழுவினர் இந்தப் பேனாவை உருவாக்கியுள்ளதாக கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படும் இந்த பேனா 5.5 மீட்டர் நீளம் அல்லது 18 அடி நீளம் கொண்டதாகும். சுமார் 37.23 கிலோ அளவில் இந்த பேனா உருவாக்கப்பட்டுள்ளது. முழுவதும் பித்தளையால் இந்த பேனாவின் வெளிப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. எழுதும்போது, மை வெளிவரும் விதத்தில் சிறிய உலோக உருளை ஒன்றும் நுனியில் பொருத்தப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பு 1.45 மீட்டர் நீளத்துடன் இருந்த பேனாதான் உலகின் மிகப் பெரிய பேனா என்ற சாதனையைப் பெற்றிருந்தது. தற்போது அந்த சாதனையை ஸ்ரீனிவாஸா உருவாக்கிய பேனா முறியடித்து உள்ளது.

“சிறிய வயதில் என்னுடைய அம்மா எனக்கு எழுதுவதற்காக விதவிதமான பேனாக்களை வாங்கிக் கொடுக்கும்போது, நானும் ஒருகாலத்தில் மிகப்பெரிய பேனாவை உருவாக்க வேண்டும் என நினைப்பேன். தற்போது அந்த கனவு நினைவாகியுள்ளது. ஆடல் கலையில் உள்ள 9 அம்சங்களையும், இசைக்கருவிகளின் தோற்றத்தையும் இந்த பேனாவின் வெளிப்புறத்தில் செதுக்கியுள்ளேன்,” என தனது கின்னஸ் சாதனை பேனா குறித்து கூறியுள்ளார் ஸ்ரீனிவாஸா.

பார்ப்பதற்கு பிரம்மாண்டமான தோற்றத்திற்காக மட்டும்தான் இந்தப் பேனாவை உருவாக்கியுள்ளார்களா என்றால், அதுதான் இல்லை. மற்ற சாதாரண பேனாக்களைப் போலவே இதை வைத்தும் எழுத முடியும்.

என்ன ஒரு வித்தியாசம், சாதாரண பேனாக்களை சுலபமாகக் கையில் எடுத்து குழந்தைகூட எழுதிவிட முடியும். ஆனால் இந்தப் பேனா அப்படியில்லை. தனியொரு நபரால் இந்தப் பேனாவை வைத்து எழுதிவிட முடியாது. சுமார் 5, 6 பேர் கொண்ட குழுவாகத்தான் இந்தப் பேனாவைத் தூக்கி எழுத முடியும்.

விதிமுறைகளின்படி, இந்த பேனாவின் முனையில் இருந்து, எழுதும்போது மை வெளியே வருகிறது என்பதை நிரூபிக்கும் வகையிலும் வீடியோவை வெளியிட்டுள்ளது கின்னஸ் அமைப்பு. அதில், ஸ்ரீனிவாஸா மற்றும் அவரது குழுவினர், ஏதோ பீரங்கியை சுமப்பதைப் போல பேனாவைத் தோளில் சுமந்து தூக்கி வருகின்றனர். பின்னர், பேனாவை நான்கைந்து பேர் தூக்கிப் பிடித்துக் கொள்ள அதன் நுனியை பிடித்து ஸ்ரீனிவாஸா ஓவியம் ஒன்றை வரைந்து காட்டுகிறார்.

இந்த இன்ஸ்டாகிராம் பதிவுக்கு 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். பார்ப்பதற்கே பிரமிப்பாக உள்ள இந்த பேனாவைப் பற்றி, நெட்டிசன்களும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

“நிச்சயம் இந்தப் பேனாவை ஹல்க் மட்டுமே உபயோகிக்க முடியும்”, “நான் முதலில் இதனை ராக்கெட் என நினைத்தேன்...” என ஜாலியாக இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதோடு, “இந்தப் பெரிய பேனாவை உருவாக்க எவ்வளவு கடின உழைப்பைக் கொடுத்திருப்பீர்கள் என நினைத்துப் பார்க்கவே ஆச்சர்யமாக இருக்கிறது,” என கின்னஸ் சாதனை படைத்த இந்தியரான ஸ்ரீனிவாஸாவுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Latest

Updates from around the world