ஐ.டி. துறையில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய சிஇஓ யார் தெரியுமா?
HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விஜயகுமார் கடந்த ஆண்டு 123.13 கோடி ரூபாய் ($16.52 மில்லியன்) அளவிலான தொகையைச் சம்பளமாகப் பெற்றுள்ளார்.
HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விஜயகுமார் கடந்த ஆண்டு 123.13 கோடி ரூபாய் ($16.52 மில்லியன்) அளவிலான தொகையைச் சம்பளமாகப் பெற்றுள்ளார்.
இந்தியாவில் கொரோனா காலக்கட்டத்தில் பல்வேறு துறைகள் சரிவை சந்தித்தாலும், வொர்க் ப்ரம் ஹோம் முறை மூலமாக தகவல் தொழில்நுட்பத் துறை சரிவில் இருந்து தன்னைத் தானே காத்துக்கொண்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாக வளர்ச்சி அடைந்துள்ள ஐ.டி.துறையில், முன்னணி நிறுவனங்கள் தங்களது தலைமை அதிகாரிகளுக்கு வழங்கும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மார்ச் 31ம் தேதியுடன் 2021 - 2022ம் ஆண்டுக்கான நிதி ஆண்டு நிறைவடைவதால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கைகள் மூலமாக இது தெரியவந்துள்ளது.
HCL விஜயகுமார் சம்பளம் எவ்வளவு?
இந்திய தகவல் தொழில்நுட்ப துறையிலேயே மிகப்பெரிய நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் (HCL Technologies) கடந்த ஆண்டு அதன் தலைமை செயல் அதிகாரி சி.விஜயகுமாருக்கு ரூ. 123.13 கோடி ($16.52 மில்லியன்) சம்பளமாக வழங்கியதாக நிறுவனம் வார இறுதியில் வெளியிட்ட ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம், நாட்டின் சாப்ட்வேர் நிறுவனங்களில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி என்ற பெருமையை விஜயகுமார் பெற்றுள்ளார். விஜயகுமாரின் வருமானத்தில் நான்கில் மூன்று பங்கு இன்சென்டிவ் பலன்களை உள்ளடக்கியது என ஹெச்சிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹெச்சிஎல் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஆண்டறிக்கையில் அந்நிறுவனத்தின் சிஇஓவான சி.விஜயகுமார் HCL America Inc. நிறுவனத்திடமிருந்து 16.52 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஊதியமாக பெறுகிறார் எனக்குறிப்பிட்டுள்ளது.
அதன் படி, ஆண்டு அடிப்படைச் சம்பளமாக $2 மில்லியனும், வேரியபிள் பே $2 மில்லியன் டாலரும் பெறுகிறார். கூடுதல் சலுகைகள் மற்றும் பிற நன்மைகளுக்காக $0.02 மில்லியன் வழங்கப்படுகிறது. 12.50 மில்லியன் டாலரை நீண்ட கால இன்சென்டிவ் ஆகப் பெறுகிறார். ஆக மொத்தம் மார்ச் 31ம் ஆண்டுடன் நிறைவடையும் நிதியாண்டு கணக்கு படி, $16.52 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பளமாக பெறுவது தெரியவந்துள்ளது. இந்த தொகையானது இந்திய மதிப்பில் ரூ. 123.13 கோடி ஆகும்.
“2021-22 நிதியாண்டில், மைல்கற்களின் சாதனைக்காக இரண்டு ஆண்டுகளின் இறுதியில் செலுத்தப்பட்ட LTI (நீண்ட கால ஊக்கத்தொகை) USD 12.5 மில்லியன் பெறப்பட்டதைத் தவிர, அவரது ஊதியத்தில் எந்த மாற்றமும் இல்லை. இதன்படி, 2019-20 நிதியாண்டிற்கு USD 6.25 மில்லியன் மற்றும் FY 2020 க்கு USD 6.25 மில்லியன், அதாவது மார்ச் 31, 2021 அன்று முடிவடைந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலே உள்ள LTI எனப்படும் இன்சென்டிவ் மட்டுமே கூடுதலாகும்,” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நீண்ட கால ஊக்கத்தொகையை இணைக்காவிட்டால், விஜயகுமாரின் சம்பளம் 4.13 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே ஆகும்.
Wipro சிஇஓ தியரி டெலாபோர்ட்:
மார்ச் 30 உடன் நிறைவடைந்த நிதியாண்டின் படி, விப்ரோ லிமிடெட்டின் CEO தியரி டெலாபோர்ட் 10.51 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது, 79.8 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று வருகிறார். கொரோனா தொற்று லாக்டவுன் கட்டுப்பாடுகள் உச்சத்தில் இருந்த ஜூலை 2020 இல் தியரி டெலாபோர்ட் விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ-வாகச் சேர்ந்தார்.
Infosys சிஇஓ சம்பளம் என்ன?
மறுபுறம், இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக்கின் 2021-22 ஆம் ஆண்டுக்கான சம்பள 43 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 16 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டிய இன்போசிஸ் நிறுவனம் தனது சிஇஓவிற்கு ஆண்டுக்கு 10.2 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 71 கோடியை சம்பளமாக வழங்குகிறது.
மும்பையை தளமாகக் கொண்ட டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அதன் தலைமை நிர்வாகி ராஜேஷ் கோபிநாதனுக்கு $3.3 மில்லியனை சம்பளமாக வழங்குகிறது. இந்நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருவாய் $25.7 பில்லியனாக உயர்ந்துள்ளது.