‘டோல்கேட்களில் தானியங்கி செயல்முறை கொண்டு வரப்படும்’ - நிதின் கட்கரி!

By YS TEAM TAMIL
September 15, 2022, Updated on : Thu Sep 15 2022 05:01:33 GMT+0000
‘டோல்கேட்களில் தானியங்கி செயல்முறை கொண்டு வரப்படும்’ -  நிதின் கட்கரி!
கனரக வாகனங்கள் செல்வதற்காக மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளை உருவாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கனரக வாகனங்கள் செல்வதற்காக மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளை உருவாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


இந்திய - அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பின் சார்பில் டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான நிதின் கட்கரி நெடுஞ்சாலைகளை மின்மயமாக்குதல், சுங்கச்சாவடிகளில் தானியங்கி கட்டண வசூல் முறையை அமல்படுத்துதல் போன்ற அதிநவீன திட்டங்கள் குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மின்மயமாக மாறும் நெடுஞ்சாலைகள்:

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கச்சா எண்ணெய் விலையில் நிலவும் நிலையற்ற தன்மை, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, காற்று மாசு போன்ற பிரச்சனைகளை தவிர்க்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.

Nitin gadkari

இந்தியாவைப் பொறுத்தவரை கார், பைக், ஸ்கூட்டர், இ-சைக்கிள் என தனிநபர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் வாங்கி வருகின்றனர். இருப்பினும், இந்தியாவில் நகரங்களுக்கு செல்வதற்கு மின்சார ரயில் போக்குவரத்து பயன்படுத்தப்படுகிறது. லாரி, டிரக், பேருந்து போன்ற கனரக வாகனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மூலமாக மட்டுமே இயக்கப்படுகின்றன.


ஆனால், வெளிநாடுகளில் மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலைகள் மூலமாக பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே நடைமுறையைப் பின்பற்றி இந்தியாவிலும் நெடுஞ்சாலைகளை மின்மயமாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.


இந்திய - அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி,

“மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட போக்குவரத்திற்காக சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் சார்ந்த சார்ஜிங் வழிமுறைகளை அரசாங்கம் வலுவாக ஊக்குவித்து வருகிறது. மின்சார நெடுஞ்சாலைகளை உருவாக்கவும் பணியாற்றி வருகிறோம், இது சூரிய சக்தியால் இயக்கப்படும், மேலும், இது கனரக டிரக்குகள் மற்றும் பேருந்துகளை இயக்கும் போது சார்ஜ் செய்வதற்கு வசதியாக இருக்கும்," எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு:

அமெரிக்காவும் இந்தியாவும் வலுவான இருதரப்பு உறவுகளைக் கொண்ட உலகின் முக்கிய ஜனநாயக நாடுகள் எனக்குறிப்பிட்ட மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களில் முதலீடு செய்ய அமெரிக்காவிலிருந்து முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

“இந்தியாவும், அமெரிக்காவும் தங்களது வளர்ச்சிக்கு பரஸ்பரம் உதவ வேண்டும். சமூக, பொருளாதார மற்றும் மூலோபாய முன்னணியில் இரு நாடுகளும் எப்போதும் நம்பிக்கை, மரியாதை மற்றும் ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. அடுத்த 25 ஆண்டுகளுக்கான புதிய திட்டங்கள் நமது இரு நாட்டிற்கும் இடையிலான வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்,” எனத் தெரிவித்துள்ளார்.
Nitin gadkari

2025ஆம் ஆண்டுக்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற பிரதமர் நரேந்திர மோடி தொலைநோக்குப் பார்வையை நிர்ணயித்துள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், இன்று இந்தியா பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாகவும், உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளதாகவும் கூறினார்.


தேசிய உட்கட்டமைப்பிற்காக மத்திய அரசு 1.4 டிரில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாகவும், 2019 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் இந்த தொகையில் இருந்து 19 சதவீதத்தை சாலை மேம்பாட்டிற்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“சுமார் 60 பில்லியன் டாலர் முதலீட்டில் (5 லட்சம் கோடி) நாடு முழுவதும் 10,000 கிமீ நீளமுள்ள 27 கிரீன்ஃபீல்டு விரைவுச் சாலைகளை அமைக்க உள்ளோம். இந்த வழித்தடங்களால் முக்கிய பொருளாதார மையங்களுக்கு இடையேயான பயண தூரம் 14 சதவீதம் குறையும், போக்குவரத்து செலவு 2.5 சதவீதம் குறைக்கப்படும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 110 கோடி லிட்டர் எரிபொருளைச் சேமிப்பதுடன், கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை 250 கோடி கிலோ அளவிற்கு குறைக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.

இனி டோல்கேட் கிடையாது:

சுங்கக்கட்டணச் சாவடிகளில் ஊழியர்களை வைத்து கட்டணம் வசூலிக்கும் முறைக்கு பதிலாக, தானியங்கி செயல்முறையை கொண்டு வருவது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தீவிர ஆலோசனையில் இருப்பதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

"சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், வாகனங்களை நிறுத்தாமல், தானியங்கி முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் வகையில், தானியங்கி நம்பர் பிளேட் ரெகக்னிஷன் சிஸ்டத்தின் (தானியங்கி நம்பர் பிளேட் ரீடர் கேமராக்கள்) ஒரு முன்னோடித் திட்டத்தை நடத்தி வருகிறது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், நாங்கள் இரண்டு இலக்குகளை அடைய விரும்புகிறோம். சுங்கச்சாவடிகளில் போக்குவரத்தின் ஓட்டம் மற்றும் மக்கள் அதிக சுங்கக்கட்டணம் செலுத்துவதை குறைப்பது ஆகும்,” எனத் தெரிவித்துள்ளார்.
Nitin gadkari

2018 - 2019ல் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பு நேரம், எட்டு நிமிடங்களாக இருந்த நிலையில், ஃபாஸ்டேக் (FASTags) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில் வாகனங்களுக்கான சராசரி காத்திருப்பு நேரம் இப்போது 47 வினாடிகளாகக் குறைந்துள்ளது. இதனை மேலும் நவீனப்படுத்தும் விதமாக சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் நெம்பர் பிளேட்டில் உள்ள பதிவு எண்ணைக் கொண்டு, அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே கட்டணத்தை வசூலிக்கும் முறை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.


அதேபோல், செயற்கைகோள் உதவியுடன் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாகன உரிமையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து கட்டணத்தை பிடித்தம் செய்யும் தானியங்கி முறை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நிதின் கட்கரி கூறுகையில்,

“செயற்கைக்கோளைப் பயன்படுத்தும் போது FASTag க்கு பதிலாக GPSஐ அறிமுகப்படுத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அதேபோல் நம்பர் பிளேட் மூலமாக தானியங்கி முறையில் டோல் கட்டணம் வசூலிக்கும் மற்றொரு தொழில்நுட்பம் குறித்தும் ஆலோசித்து வருகிறோம். தொழில்நுட்பத்தை தேர்வு செய்வோம். அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கவில்லை என்றாலும், என் பார்வையில் நம்பர் பிளேட் தொழில்நுட்பத்தில் டோல் பிளாசா இருக்காது மற்றும் அதிநவீன கணினிமயமாக்கப்பட்ட டிஜிட்டல் சிஸ்டம் இருக்கும் நீண்ட வரிசை மற்றும் காத்திருப்பு நேரத்தை குறைக்க முடியும்,” எனத் தெரிவித்துள்ளார்.

சாலை பாதுகாப்பை வலுப்படுத்த 2024 ஆம் ஆண்டுக்குள் தேசிய நெடுஞ்சாலையில் 15,000 கிமீ தொலைவில் உளவுத்துறை போக்குவரத்து அமைப்பை (ITS) செயல்படுத்த அமைச்சகம் இலக்கு வைத்துள்ளது.

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற