ஆதரவற்றோருக்கு இலவச உணவு; இங்கிலாந்து அரசால் கெளரவிக்கப்பட்ட அம்ரித்பால் சிங் மன்!

இங்கிலாந்து அரசின் புத்தாண்டு விருதுகளுக்கான பட்டியலில் இடம் பிடித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் எலிசபெத் ராணி கையால் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
1 CLAP
0

இங்கிலாந்து அரசின் புத்தாண்டு விருதுகளுக்கான பட்டியலில் இடம் பிடித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் எலிசபெத் ராணி கையால் கெளரவிக்கப்பட உள்ளார்.

கொரோனா தொற்று தீயாய் பரவிய சமயத்தில் உலகின் வல்லரசு முதல் வளர்ந்து வரும் நாடுகள் வரை பலவும் கடும் போராட்டங்களை சந்தித்தன. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தொற்றால் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

கொரோனா முதல் மற்றும் 2வது அலையின் போது கடும் பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பிரிட்டன் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. லாக்டவுன் கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்த சமயத்தில் லண்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழந்தும், வீடு இல்லாமலும் தவிக்க நேர்ந்தது.

இப்படிப்பட்ட கொடூரமான தொற்று நோய் காலத்தில், லண்டன் தெருக்களில் உணவின்றி தவித்தவர்களுக்கு உணவளித்த நபரின் பெயர் தான் அம்ரித்பால் சிங் மன். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் தான் இங்கிலாந்து ராணி கையால் கெளரவிக்கப்பட உள்ளார்.

யார் இந்த அம்ரித்பால் சிங் மன்?

இங்கிலாந்தில் முதல் பஞ்சாபி உணவகத்தை 1946ம் ஆண்டு அம்ரித் பால் சிங் மன் உடைய கொள்ளு தாத்தா நிறுவினர். வடக்கு லண்டனில் கொவென்ட் கார்டன் பகுதியில் அமைந்துள்ள அந்த பழமையான உணவகத்தை தான் அம்ரித்பால் சிங் மன் நிர்வகித்து வருகிறார்.

பிரபல உணவகத்தின் உரிமையாளர், வழக்கறிஞர் என பலமுகம் இருந்தாலும் லண்டனைப் பொறுத்தவரை அம்ரித்பால் சிங் மன், நல்ல சமூக சேவகராக பலராலும் அறியப்பட்டவர். பிரிட்டீஷ் பொதுமக்களுக்கு இதுவரை ஒரு மில்லியன் பவுண்ட் மதிப்பிலான உணவை பல்வேறு சமூக நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மூலமாக இலவசமாக வழங்கியுள்ளார்.

குறிப்பாக மார்ச் 2020ம் ஆண்டு கொரோனா முழு ஊரடங்கு தொடங்கியதில் இருந்து லண்டன் நகரில் உணவின்றி வாடிய 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அம்ரித்பால் உணவு வழங்கியுள்ளார். இப்படியான தொண்டு மற்றும் தன்னலமற்ற சேவைக்காக இங்கிலாந்து அரசு அம்ரித்பால் சிங் மனை கெளரவித்துள்ளது.

சேவைக்காக இங்கிலாந்து அரசு கொடுத்த கெளரவம்:

ஆண்டு தோறும் இங்கிலாந்து அரசு நியூ இயர் ஹானர்ஸ் எனப்படும், மரியாதைக்குரிய நபர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ள 2022ம் ஆண்டுக்கான நியூ இயர் ஹானர்ஸ் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அம்ரித்பால் சிங் மன் பெயரும் இடம் பெற்றுள்ளது.

கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கி ஆதரவுக்கரம் நீட்டியதற்காக இவரது சேவையைப் பாராட்டி இங்கிலாந்து அரசாங்கம் OBE அல்லது ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் பேரரசின் அதிகாரியாக கௌரவித்துள்ளது.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அம்ரித்பால் சிங் மன்,

‘அம்ரித்பால் சிங் மன், நம்பவே முடியவில்லை!’ உங்களுடைய அனைத்து வாழ்த்துச் செய்திகளுக்கும் நன்றி. இது எனக்கு முன்னர் இந்த சேவையை செய்த பலரையும் பார்த்து தான் எனக்கும் ஊரடங்கு காலத்தில் உணவு வழங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மற்றவர்களுடன் இணைந்துதான் நானும் என்னால் என்ன முடியுமோ அந்த உதவியை செய்தேன்,’ என பதிவிட்டுள்ளார்.