சிறியளவில் தொடங்கி 4,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் இந்திய அரிசி பிராண்ட்!

ரகுநாத் அரோரா மக்களுக்கு தரமான அரிசியைக் கொடுக்க விரும்பு சிறியளவில் தொடங்கிய வணிக முயற்சி LT Foods என்கிற நிறுவனமாக உருவாகி Dawaat என்கிற பாஸ்மதி அரிசி பிராண்டாக வளர்ச்சியடைந்து 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
24 CLAPS
0

ரகுநாத் அரோரா அம்ரிஸ்டர் பகுதியில் உள்ள பிகிவிந்த் கிராமத்தைச் சேர்ந்தவர். மக்களுக்கு தரமான அரிசியைக் கொடுக்கவேண்டும் என்கிற எண்ணம் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்குத் தோன்றியது.

1965ம் ஆண்டு அரிசி வர்த்தக நிறுவனம் ஒன்றை சிறியளவில் தொடங்கினார். இது பின்னர் 1977-ம் ஆண்டில் Lalchand Tirathram Rice Mills (LT Foods) என்று பார்ட்னர்ஷிப் நிறுவனமாக மாறியது.

உள்ளூரில் விளையும் பாஸ்மதி அரிசியை அம்ரிஸ்டருக்கு அப்பால் கொண்டு சேர்க்கவேண்டும். கடுமையாக உழைக்கும் விவசாயிகளின் விளைச்சல்களுக்கு நியாயமான விலை நிர்ணயிக்கப்படவேண்டும். இதில் எந்தவித சமரசமும் இருக்கக்கூடாது. இதுவே இவரது விருப்பமாக இருந்தது.

அரிசி தரமாக இருப்பதை உறுதிசெய்தார். இன்று LT Foods நிறுவனம் Daawat Basmati அரிசி பிராண்டுடன் சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளது.

“என் அப்பா வணிகத்தைத் தொடங்கினார். என் சகோதரர் விஜய் குமார் அரோரா வணிகத்தை உலகளவில் கொண்டு சேர்த்தார். தரமான உற்பத்தியைக் கொடுக்கவேண்டும். மாறி வரும் சந்தை தேவைகளுக்கு ஏற்ப செயல்படவேண்டும். இவற்றிற்கு என் அப்பா முக்கியத்துவம் அளித்தார். இதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்,” என்கிறார் இரண்டாவது தலைமுறை தொழில்முனைவர் அஸ்வானி அரோரா. இவர் தற்போது LT Foods நிர்வாக இயக்குநர்.

ரகுநாத் அரோரா

India Gate, Kohinoor என பிரபல பிராண்டுகளுடன் சந்தையில் கடும் போட்டி நிலவினாலும் Daawat இந்தியாவில் 20 சதவீத சந்தை அளவைக் கைப்பற்றியுள்ளது.

LT Foods தற்சமயம் 60 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் 2021 நிதியாண்டில் 4,686 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக அஸ்வானி தெரிவிக்கிறார்.

சிறியளவில் தொடங்கப்பட்ட முயற்சி

1950-1977 காலகட்டத்தில் LT Foods எந்தவித பிராண்டிங் இல்லாமல் பஞ்சாப் சுற்றுவட்டாரப் பகுதியில் செயல்பட்டது. 1978-ம் ஆண்டு ரகுநாத்தின் மூத்த மகன் விஜய் வணிகத்தில் சேர்ந்தார். அதன் பிறகு செயல்பாடுகள் விரிவடைந்து அமெரிக்காவிற்கு பிரீமியம் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது.

“பாஸ்மதி அரிசி இந்தியாவிலேயே அதிகம் விளைகிறது. பல காலமாகவே இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. என் அப்பாவும் சகோதரரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார்கள். இப்படித்தான் ஏற்றுமதியைத் தொடங்கினோம். தற்போது எங்கள் அரிசி அமெரிக்காவில் 50 சதவீத சந்தையைக் கைப்பற்றியுள்ளது,” என்கிறார் அஸ்வானி.

இந்தியாவில் பல அமைப்பு சாரா நிறுவனங்கள் தரமான தயாரிப்புகளை வழங்குவதாக வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதை விஜய் கவனித்தார். 1984ம் ஆண்டு உள்நாட்டு அரிசி தேவையைப் பூர்த்தி செய்ய அப்பா-மகன் இருவரும் சேர்ந்து ஹரியானாவின் சோனேபட் பகுதியில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டனர். பிராண்ட் செய்து பேக்கேஜ் செய்து விற்பனை செய்ய முடிவெடுத்தனர். இப்படி உருவானதுதான் Dawaat.

அதே ஆண்டு அஸ்வானியும் வணிகத்தில் இணைந்துகொண்டார். மூவரும் சேர்ந்து நவீன இயந்திரங்கள் கொண்டு அரிசி தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.

LT Foods தொடங்கப்பட்டதில் இருந்து விவசாயிகளுடன் இணைந்து விவசாயிகளுக்காகவே பணியாற்றி வருகிறது. இந்த பிராண்ட் வளர்ச்சியடைகளில் இந்த நிறுவனத்துடன் இணைந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தற்சமயம் LT Foods இந்தியா முழுவதும் 1,00,000 விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றுகிறது. இந்தியா மற்றும் அமெரிக்காவில் 7 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் 3 பேக்கேஜிங் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்நிறுவனத்தின் தலைமையகம் ஹரியானாவின் குருகிராமில் அமைந்துள்ளது.

ஆர்கானிக் அரிசி

இந்தியாவில் ஆர்கானிக் தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. அந்நிய நாட்டு சந்தைகளில் இந்தத் தேவை பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்தது. இதனால் 2012-ம் ஆண்டிலேயே LT Foods இந்தப் பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது.

”ஆர்கானிக் அரிசிக்கான தேவை வெளிநாடுகளில் எழுந்தபோதே நாங்கள் இதன் முக்கியத்துவத்தையும் தேவைகளையும்  விவசாயிகளுக்குப் புரியவைத்தோம். விவசாயிகளுக்கு சேவையளிப்பதற்காகவே வேளாண் பிரிவை உருவாக்கினோம்,” என்கிறார் அஸ்வானி.

மூன்றாண்டுகளுக்கு முன்பு LT Foods நிறுவனம் இந்திய சந்தையில் ஆர்கானிக் அரிசி வகைகளுக்கான தேவையை மதிப்பிட Ecolife அறிமுகப்படுத்தியது.

”ஆர்கானிக் தயாரிப்புகளுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு. சமீபத்திய காலங்களில் இந்தியாவில் மக்களிடையே  உடல்நலனில் அதிக அக்கறை காட்டும் போக்கு காணப்படுகிறது. ஆனால் வெளிநாடுகளில் இதற்கான தேவை முன்பிருந்தே இருந்து வருகிறது. மாறி வரும் தேவைகளுக்கு ஏற்ப புதுமை படைப்பது அவசியமாகிறது,” என்று அஸ்வானி குறிப்பிடுகிறார்.

கடந்த 70 ஆண்டுகளில் Daawat, Royal, Royal `Ready to Heat’, Dawaat Cuppa Rice, Dawaat Saute Sauces, Devaaya என பல பிரிவுகளில் பல வகையான பிராண்டுகளுடன் விரிவடைந்துள்ளது.

சவால்கள் மற்றும் வருங்கால திட்டங்கள்

“கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதும் நுகர்வோர் தரப்பில் தேவை அதிகம் இருந்தபோதும் விநியோகச் சங்கிலி தடைபட்டதால் சவாலான சூழலை சந்திக்கவேண்டியிருந்தது,” என்று அஸ்வானி நினைவுகூர்ந்தார்.

கொரோனா சமயத்தில் ஊழியர்கள் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டது. இந்நிறுவனம் தானியங்கல் செயல்முறையில் முதலீடு செய்தது. எத்தனையோ நிறுவனங்கள் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் LT Foods செயல்பாடுகள் தடைபடாமல் இருக்க இந்த முன்னெடுப்பு உதவியுள்ளது.

நுகர்வோரின் மாறி வரும் தேவைகளுக்கு ஏற்ப சேவையளிப்பது வாய்ப்பு மட்டுமல்ல சவாலும்கூட என்கிறார் அஸ்வானி. புதுமைகளை புகுத்தி இதை எதிர்கொள்ளமுடியும் என்கிறார்.

LT Foods வரும் நாட்களில் Ready-to-eat வகைகளை அதிகம் அறிமுகப்படுத்தவும் மற்ற உணவுப் பொருட்களில் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளது.

ஆங்கில கட்டுரையாளர்: பாலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா