Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

ஒலிம்பிக் போட்டிகளில் ஜொலிக்கும் இந்திய ‘தங்கமங்கைகள்’

கடந்த ஒலிம்பிக் போட்டியைப் போலவே ந்தாண்டும் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா இடம் பிடிக்க இந்திய வீராங்கனைகளின் பங்களிப்பே அதிகளவில் உள்ளது. , தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி சாதித்துக் காட்டி வருகின்றனர் நம் வீராங்கனைகள்.

ஒலிம்பிக் போட்டிகளில் ஜொலிக்கும் இந்திய ‘தங்கமங்கைகள்’

Friday August 06, 2021 , 8 min Read

உலக விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது மட்டுமல்ல, அதில் கலந்து கொள்வதே மிகப் பெரிய கௌரவமாகக் கருதப்படுகிறது. ஆனாலும், பதக்கப் பட்டியலில் அதிக பதக்கங்களைக் குவிக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடினமான பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். தாங்கள் பதக்கம் வெல்வதன் மூலம் சர்வதேச அளவில் தங்களது நாட்டிற்கு கௌரவம் தேடித் தருகிறார்கள் அவர்கள்.


இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் முதன் முறையாக அதிகபட்சமாக 127 நட்சத்திரங்கள் (67 வீரர், 52 வீராங்கனைகள்) 18 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் சேர்த்து மொத்தம் 228 பேர் கொண்ட இந்திய குழு டோக்கியோ சென்றுள்ளது. இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் இம்முறை தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற ஒரே இலக்குடன் களமிறங்கிப் போராடி வருகின்றனர். பலர் பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.


கடந்த ஒலிம்பிக் போட்டியைப் போலவே இந்தாண்டும் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா இடம் பிடிக்க இந்திய வீராங்கனைகளின் பங்களிப்பே அதிகளவில் உள்ளது. மக்கள் தொகை அதிகளவில் உள்ள இந்தியாவில் விளையாட்டுத் துறையில் ஆண்களுக்கு கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளும், பெண்களுக்கு அவ்வளவு எளிதாகக் கிடைத்து விடுவதில்லை. ஆனாலும், தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி சாதித்துக் காட்டி வருகின்றனர் நம் வீராங்கனைகள்.

olympian

20 ஆண்டுகளுக்கு முன்பு 2000 சிட்னி ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா அனுப்பிய வீரர்களின் எண்ணிக்கை மொத்தம் 72. ஆனால் அந்தப் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் கர்ணம் மல்லேஸ்வரி வென்ற வெண்கல பதக்கம் மட்டுமே இந்தியா வென்ற ஒரே பதக்கம்.


ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமை இதன் மூலம் கர்ணம் மல்லேஸ்வரிக்கு கிடைத்தது.

Karnam

2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் 117 வீரர்கள் இந்தியா சார்பாக பங்கேற்றனர். இதில் 54 பேர் பெண்கள். இவர்கள் இரண்டு பதக்கங்களை நாட்டுக்கு வென்று தந்தனர்.


இந்தியா அதிகப் பதக்கங்களை வென்றது 2012 லண்டன் ஒலிம்பிக்கில்தான். அந்தப் போட்டியில் சுஷில்குமார் மல்யுத்தத்திலும், விஜயகுமார் துப்பாக்கிச் சுடுதலிலும் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றனர். பேட்மிண்டனில் சாய்னா நேவால், குத்துச்சண்டையில் மேரிகோம், மல்யுத்தத்தில் யோகஸ்வர் தத், துப்பாக்கிச் சுடுதலில் ககன் நாரங் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.


2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பிவி சிந்து மற்றும் சாக்‌ஷி மாலிக் ஆகியோரால் மட்டுமே இந்தியா பதக்கப் பட்டியலில் இடம் பிடித்தது. 2000 மற்றும் 2016 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பதக்கப் பட்டியலில் இடம் பிடிக்க பெண்கள் மட்டுமே காரணமாக இருந்தனர்.

மீராபாய் சானு

இந்தாண்டும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கப் பட்டியலில் இடம் பிடிக்க துவக்கமாக பதக்கம் பெற்றுத் தந்தவர் 26 வயதான பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு. 49 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட மீராபாய் சானு, 202 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.


மணிப்பூர் மாநிலத்தில் உள்ள நோங்பாக் காக்சிங் என்ற கிராமத்தைச் சேர்ந்தவரான மீராபாய், வறுமையான சூழலில் இருந்து வந்து தன் திறமையால் வென்றவர். 2004ம் ஆண்டு ஒலிம்பிக்கில் குஞ்சாணி தேவி பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டதைப் பார்த்து, மீராபாய்க்கும் பளுதூக்குதல் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆனால் முறையான பயிற்சி பெற அவருக்கு வறுமை ஒரு பெரிய தடையாக இருந்தது. ஆனாலும் தனது கனவுகளுக்காக அவர் கடுமையாக உழைத்தார்.  


2013ல் நடந்த போட்டியில் ஜுனியர் பிரிவில் நாட்டின் சிறந்த வெயிட் லிப்டர் என்ற பட்டத்தை வென்ற மீராபாய், 2014ல் நடந்த காமன் வெல்த் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றார். 2016ல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற மீராபாய்க்கு 48 கிலோ எடைப்பிரிவில் ஆறாவது இடமே கிடைத்தது. ஆனாலும் நம்பிக்கையைத் தளர விடாமல் தொடர்ந்து போராடி இம்முறை இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.

Meera

சிறுவயது முதலே சரியான ஊட்டச்சத்து மிக்க உணவுகளைக்கூட பெற முடியாத சூழலிலும், தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு தற்போது இந்தியாவிற்கு சர்வதேச அளவில் பெருமை சேர்த்துள்ளார் மீராபாய்.

பி வி சிந்து

டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதன் மூலம் தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளார் பி.வி.சிந்து. டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை அவர் வென்றுள்ளார்.

Sindhu

விஜயவாடாவில் பிறந்தவர் பி வி சிந்து. அவரது தந்தை பி வி ரமணா அர்ஜூனா விருது வென்ற முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரர் ஆவார். சிந்துவின் தாயார் பி.விஜயாவும் கைப்பந்து வீராங்கனை தான். சில ஆண்டுகள் தனது குடும்பத்தினருடன் சென்னை தியாகராய நகரில் வசித்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலேயே முடித்த விஜயா தமிழ்நாடு கைப்பந்து அணிக்காக விளையாடி இருக்கிறார்.


தற்போது சிந்துவின் குடும்பம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வருகிறது. தனது எட்டரை வயதில் பேட்மிண்டன் விளையாடத் தொடங்கிய சிந்து, உலக சாம்பியன்ஷிப்பில் 5 பதக்கமும் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) ஒலிம்பிக்கில் 2 பதக்கமும் வென்று இந்திய பேட்மின்டனை உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.

“இந்த ஆட்டம் எனக்கு உணர்வுபூர்வமாக அமைந்தது. உணர்ச்சிப் பெருக்குடன் விளையாடி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். நாட்டுக்காக பதக்கம் வென்றதை நினைத்து பெருமிதம் அடைகிறேன்.”

நெருக்கடியும், எதிர்பார்ப்புகளும் மிக அதிகம். எனவே இங்கு பொறுமை காத்து முழு திறமையை வெளிப்படுத்துவது எனக்கு முக்கியமானதாக இருந்தது. தனிநபர் பிரிவில் இரண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையாக இருப்பது, இன்னும் நான் நிறைய சாதனைகள் படைப்பதற்கும், கடினமாக உழைப்பதற்கும் உந்துசக்தியாக இருக்கும்’ என பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் பிவி சிந்து.


இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் என்ற பெருமையும் பி.வி.சிந்துவிற்கு உண்டு. 2016 ரியோ ஒலிம்பிக்கில் 21 வயதில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

லவ்லினா போர்கோஹெயின்

இம்முறை மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடைப் பிரிவில் 23 வயதான இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெயின் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 69 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டத்தில் துருக்கி வீராங்கனை புசநாஸ் சர்மேநெலியிடம் 5-0 என்ற கணக்கில் லவ்லினா தோல்வி அடைந்தார்.


குத்துச்சண்டைப் பிரிவில் கடைசியாக 2012-ம் ஆண்டு மேரி கோம் பதக்கம் வென்றார். அதன்பின் 9 ஆண்டுகளுக்குப் பின் தற்போது லவ்லினா பதக்கம் வென்றுள்ளார். அதற்கு முன் 2008-ம் ஆண்டு விஜயேந்தர் சிங் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லவ்லினா

23 வயதான லவ்லினா போர்கோஹெயின் அசாமில் உள்ள பரோமுகியா குக்கிராமத்தைச் சேர்ந்தவர். ஆரம்பம் முதலே குத்துச்சண்டை விளையாடியவர் அல்ல லவ்லினா. தாய்லாந்தில் விளையாடப்படும் முபாய் தாய் எனும் குத்துச்சண்டை மற்றும் உதைத்தல் போன்றவற்றை உள்ளடக்கிய விளையாட்டில் தேர்ந்து அதன்பின் குத்துச்சண்டைக்கு அவர் மாறினார்.


கடந்த 2018, 2019ஆம் ஆண்டு மகளிர் உலகக் குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் இந்திய வீராங்கனை லவ்லினா. 2017, 2021 ஆம் ஆண்டில் நடந்த ஆசிய குத்துச்சண்டைப் போட்டியிலும் லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.


லவ்லினா பதக்கம் வென்றதையடுத்து அவரது கிராமத்துக்கு தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது மாநில அரசு. சுமார் 3.5 கிலோ மீட்டர் தூரம் சேறும் சகதியுமாக இருந்த சாலையை சீரமைக்கும் பணி இரவு பகலாக அரங்கேறி வருகிறது. தேசத்துக்கு மட்டுமல்லே, தனது சொந்த கிராமத்துக்கும் விடியலை கொண்டு வந்திருகிறார் லவ்லினா.

மேரிகோம்

இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு நிச்சயம் ஒரு பதக்கம் பெற்றுத் தருவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் 38 வயதான குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம்.


உலக குத்துச்சண்டை சாம்பியன், ஒலிம்பிக் சாம்பியன், நாடாளுமன்ற உறுப்பினர், குத்துச்சண்டை அகாடமி உரிமையாளர், தாய் மற்றும் மனைவி என பல்வேறு கதாபாத்திரங்களை திறம்படச் செய்து வரும் மேரிகோம், ஏற்கனவே ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

Mary

2001 ஆம் ஆண்டில் முதல் உலக சாம்பியன்ஷிப்பை வென்றார், அதன் பின்னர் 2019 வரை, உலக சாம்பியன்ஷிப்பில் மொத்தம் எட்டு பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்ப்பிக் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்று குத்துச்சண்டையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையைப் பெற்றார்.


மணிப்பூரில் பழங்குடி இனத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவரான மேரிகோம், வீட்டு வேலைகள் மற்றும் வயல் வேலைகளை செய்து கொண்டே, வீட்டிற்குத் தெரியாமல் குத்துச்சண்டை பயிற்சி பெற்றார். குத்துச்சண்டையில் காயம் ஏற்பட்டால் மேரிகோமிற்கு திருமணம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும் என அவரது பெற்றோர் பயந்தனர். ஆனாலும் தனது இலக்கில் தெளிவாகவும், பிடிவாதமாகவும் இருந்தார்.


அதன் பலனாக 2001 முதல் மூன்று முறை உலக சாம்பியன்ஷிப்பை வென்றார் மேரிகோம். இதற்கிடையில், அவருக்குத் திருமணம் நடந்தது. இரட்டையர்கள் பிறந்தனர். தாயான பிறகும் பல உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களையும், ஒலிம்பிக் பதக்கங்களையும் வென்று வெற்றிக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்தார்.


இந்துஸ்தான் டைம்ஸில் வெளியான, தனது மகன்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், தனது 17 ஆவது வயதில் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது துறையில் பயிற்சி பெறுவதற்கு மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் பல சவால்களைச் சந்தித்து, அவற்றை கடந்து வந்திருக்கிறார் என்பதற்கு இதுவே ஒரு சாட்சி.


2012-ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில்தான் பெண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டிகள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் பங்கேற்கத் தகுதிபெற்ற ஒரே இந்தியப் பெண்ணான மேரி கோம், தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே 51 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார். எட்டு முறை உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று, ஆறு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப்பில் எட்டு முறை பதக்கம் வென்ற ஒரே குத்துச்சண்டைப் போட்டியாளர் மேரிகோம்தான்.


2016-ல் அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மேரி கோமை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தார். மேரிகோமின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தியில் கடந்த 2014ம் ஆண்டு ‘மேரி கோம்’ என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது.


தற்போது டோக்யோ ஒலிம்பிக்கில் அவர் பதக்கங்கள் ஏதும் பெறாமல், கொலம்பியா வீராங்கனை உடனான போட்டியில் தோல்வி கண்டபோதும், “என்னால் முடியும் போது, உங்களால் ஏன் முடியாது?" என்கிற மேரிகோமின் வார்த்தைகள் எப்போதுமே விளையாட்டு வீரர்களுக்கு உத்வேக மருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. எதிர்காலத்தில் இந்தியர்கள் பலரும் குத்துச்சண்டையில் ஒலிம்பிக் தங்கங்களைக் குவிப்பதற்காகவே இலவசமாக அவர் குத்துச்சண்டை பயிற்சியும் அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாக்‌ஷி மாலிக்

2016 ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்று, ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தியவர் சாக்‌ஷி மாலிக்.

Sakshi

ஆனால் இம்முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு சாக்‌ஷி மாலிக்கிற்கு கிடைக்கவில்லை. ரியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு அவர் கலந்து கொண்ட போட்டிகளில் அவர் அதிகம் வெற்றிகளைப் பெறாமல் பின்தங்கியதால், டோக்கியோ ஒலிம்பிக் செல்லும் வாய்ப்பை அவர் இழந்தார்.

சாய்னா நேவால்

சாக்‌ஷி போலவே ஏற்கனவே ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றும், இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தவர் பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால். கொரோனா பரவல் காரணமாக மூன்று பேட்மிண்டன் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வாக நிலைக்கு சாய்னா தள்ளப்பட்டார்.


இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் இதுவரை 24 சர்வதேசப் போட்டிகளை வென்றுள்ளார். 2012ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ள அவர், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

saina

இம்முறை எப்படியும் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வென்றே தீருவது என தீவிரப் பயிற்சியில் இருந்தார் சாய்னா. ஆனால் கொரோனா பரவல் காரணமாக மூன்று போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டு, அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

 

மேற்கூறியவர்கள் மட்டுமின்றி, டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கனவோடு களமிறங்கியவர்கள் ஏராளம். அவர்களில் ஹரியானாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை சோனம் மாலிக், தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனைகள் ரேவதி, சுபா மற்றும் தனலட்சுமி,  வாள் சண்டை வீராங்கனை பவானி தேவி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.


ஹரியானாவின் சோனேபட்டை சேர்ந்தவரான 19 வயது சோனம் மாலிக், தனது 12 வயதில் மல்யுத்தத்தில் களமிறங்கினார். 2017ல் வலது தோள்பட்டை நரம்பு தொடர்பான பிரச்னையால் அவரது வலது கை செயலிழந்தது. தந்தையின் குறைந்த வருமானம் காரணமாக ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்ட சோனம், 6 மாதத்தில் அப்பிரச்சினையில் இருந்து மீண்டார். 2018 ஆசிய கேடட் பிரிவில் வெண்கலம் வென்றார். அடுத்து 'கேடட்' பிரிவில் இரு முறை உலக சாம்பியன் ஆனார்.


2020ல் சீனியர் அரங்கில் கால்பதித்த சோனம் மாலிக், தேசிய பயிற்சி முகாமில் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்சி மாலிக்கை பல முறை வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட சோனம் மாலிக், 62 கிலோ மகளிர் மல்யுத்தப் போட்டியில் மங்கோலியாவைச் சேர்ந்த போலோர்டுயாவுடன் மோதினார். போட்டி முடிவடைவதற்கு அரை நிமிடம் முன்பு வரை முன்னிலையில் இருந்தார் சோனம். ஆனால் கடைசி நேரத்தில் இரு புல்ளிகளை எடுத்து சோனத்தை வீழ்த்தினார் போலோர்டுயா. இதனால் ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறினார் சோனம்.


பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒலிம்பிக் சென்ற தமிழக தடகள வீராங்கனைகளான ரேவதியும், சுபாவும் கலந்து கொண்ட இந்திய அணை 4*400 மீ கலப்பு தொடர் ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் கடைசி இடத்தைப் பிடித்ததால் தோல்வியடைந்தது.


சிறுவயதில் பெற்றோரை இழந்து, மதுரையில் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தவர் ரேவதி. செங்கல் சூளையில் வேலை பார்த்து ரேவதியை வளர்த்துள்ளார் அவரது பாட்டி. வெற்றுக் கால்களில் ஓடத்துவங்கிய இவர், இன்று டோக்கியோ ஒலிம்பிக்கில் ஓடி மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

பவானி தேவி

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் வாள்வீச்சுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி பங்கேற்றார். இரண்டாவது சுற்று வரை முன்னேறிய அவர், பிரான்ஸ் வீராங்கனையிடம் 7-15 என்ற புள்ளிகளில் தோல்வியைத் தழுவினார்.

பவானி தேவி

சென்னையைச் சேர்ந்தவரான பவானி தேவி, பள்ளி நாட்களில் வேறு வழியில்லாமல் வாள் சண்டையை தேர்வு செய்துள்ளார். செலவு அதிகம் என்பதால் துவக்கத்தில் மூங்கிலால் ஆன குச்சிகளை கொண்டு பயிற்சியை மேற்கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் தனது நகைகளை அடகு வைத்து மகளின் பயிற்சிக்கு உதவினார் பவானி தேவியின் அம்மா.


தற்போது ஒலிம்பிக் வாள்சண்டையில் பதக்கம் வெல்லாத போதும், அப்போட்டியில் பங்கேற்கும் முதல் இந்தியர் என வரலாறு படைத்துள்ளார் பவானிதேவி.

பி டி உஷா

36 ஆண்டுகளுக்கு முன்னரே ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டவர் பி.டி. உஷா. 1984ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த அந்த ஒலிம்பிக் போட்டியின் 400 மீட்டர் தடை ஓட்டப்போட்டியில் பி.டி.உஷா நான்காவது இடத்தையே பிடித்தார். ஆனாலும் வெற்றியை எட்டிப் பிடிக்க அவர் போராடிய தருணங்கள் வரலாற்றில் இடம் பிடித்தது. இன்றாளவும் பல தடகள வீராங்கனைகளுக்கு ஊக்குவிப்பாகவும் உள்ளது.


1951 முதல் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்திய விளையாட்டு வீராங்கனைகள் 694 சர்வதேச பதக்கங்களை வாங்கி குவித்துள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அதில் 256 வெண்கலம், 238 வெள்ளி மற்றும் 200 தங்கப்பதக்கங்களும் அடக்கம். குறிப்பாக, கடந்த 2018ஆம் ஆண்டு மட்டும் இந்திய விளையாட்டு வீராங்கனைகள் 174 சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளனர்.


தற்போது பெண் பயிற்சியாளர்கள் அதிகளவில் இருப்பதும், பெண் வீராங்கனைகள் அதிகம் உருவாவதற்கு உதவுவதாக கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.