ஜெஃப் பெசோஸ்-ன் வரலாற்று பயணத்துக்கு மூளையாக இருந்த இந்திய பெண்: யார் இந்த சஞ்சல்?

மெக்கானிக்கல் பிரிவில் சாதிக்கும் இந்திய பெண்!
18 CLAPS
0

உலகப் பணக்காரர் ஜெஃப் பெசோஸ் இன்னும் சில மணிநேரங்களில் தனது வாழ்நாள் கனவை நிறைவேற்ற போகிறார். அவரின் 'ப்ளூ ஆர்ஜின்' விமான நிறுவனம் இன்னும் சில மணிநேரங்களில் தனது முதல் விண்வெளி சுற்றுலாப் பயணத்தை நிகழ்த்த இருக்கிறது. இந்த வரலாற்றுமிக்க தருணத்தில், ஜெஃப் பெசோஸ் தனது சகோதரர் மற்றும் இருவருடன் விண்வெளி செல்லவிருக்கிறார்.

நியூ ஷெப்பர்ட் ராக்கெட் அவர்களை சுமந்து செல்லவிருக்கிறது. ஜெஃப் பெசோஸின் இந்த சாதனையில் இந்தியர்கள் பெருமைப்படும் ஒரு விஷயம் உள்ளது. இந்தியர்கள் யாரும் ஜெஃப் பெசோஸ் உடன் பயணிக்கவில்லை.

ஆனால் ஜெஃப் பெசோஸின் பயணிக்க இருக்கும் 'நியூ ஷெப்பர்ட்' ராக்கெட்டை உருவாக்கிய பொறியாளர்கள் குழுவில் மகாராஷ்டிராவின் கல்யாண் பகுதியைச் சேர்ந்த 30 வயதான சஞ்சல் கவாண்டே என்ற பெண்ணும் இடம்பெற்றுள்ளார் . சிஸ்டம்ஸ் இன்ஜினியரான இந்த சஞ்சல் கவாண்டே மும்பை பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டம் பெற்றவர்.

பின்னர் அமெரிக்கா சென்றவர், மிச்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். மாஸ்டர் டிகிரி முடித்தபின் கப்பல் எஞ்சின் தயாரிக்கும் பிரன்சுவிக் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மெர்குரி மரைன் பிரிவில் மூன்று ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.

வடிவமைப்பு பகுப்பாய்வு பயிற்சியாளராக, அங்கு பணியாற்றிய பின்னர், டொயோட்டா ரேசிங் டெவலப்மென்ட்டில் வடிவமைப்பு பொறியாளராக சேர்ந்தார். பைலட் உரிமம் வைத்திருக்கும் சஞ்சல் கவாண்டே, நாசாவில் விண்வெளி பொறியியல் வேலைக்கு விண்ணப்பித்தார், ஆனால் குடியுரிமை பிரச்சினையால் நாசா வேலை அவருக்குக் கிடைக்கவில்லை. இதற்கிடையே, இவரின் குடும்பம் இன்னும் மும்பையின் கல்யாண் கோல்செவாடி பகுதியில் வசித்து வருகின்றனர்.

இவரின் தந்தை, அசோக் கவாண்டே நகராட்சி நிறுவன ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தான், சஞ்சல் விமானப் படிப்பை தேர்வு செய்ய ஊக்கமாக இருந்துள்ளார். மகளின் கனவு தொடர்பாக பேசியிருக்கும் அசோக்,

“அவளின் கனவு எப்போதும் ஒரு விண்கலத்தை உருவாக்க வேண்டும் என்பதே. அதனால்தான் மிச்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெறும்போது விண்வெளியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தார்," என்றுள்ளார்.

அவரின் தந்தை கூறியது போல, சஞ்சல்க்கு சிறுவயது கனவாக விண்வெளி பற்றி இருந்துள்ளது. இதையடுத்து தனது கனவை நோக்கிய பயணத்துக்கு உழைத்து தற்போது அதில் வெற்றிகண்டுள்ளார்.

“எனது குழந்தை பருவ கனவு நனவாகும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். டீம் ப்ளூ ஆரிஜினின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்," என்று சஞ்சல் நெகிழ்ச்சி பொங்க பேசியிருக்கிறார்.

Latest

Updates from around the world