இந்தியாவில் உள்ள சில இடங்களில் இந்தியர்களுக்கே அனுமதி இல்லை தெரியுமா?

அப்படி அது என்னென்ன இடங்கள்? எங்கே இருக்கிறது தெரிந்து கொள்ளுங்கள்...

10th Mar 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

மிகவும் சிக்கலான நேரத்தில் நம் தேசம் உள்ளதே. இது என்னடா புதுக்கதையாக உள்ளது? என பதறிய படி நீங்கள் படிக்க துவங்கினால்...


மன்னிக்கவும். 


தலைப்பு இந்த கட்டுரைக்கு ஏற்றபடிதான் வைத்துள்ளேன். சாதாரணமாக இணையத்தில் கட்டுரைகளை நீங்கள் படிக்க வேண்டும் என வைக்கப்படும் தலைப்புகள் போன்றது அல்ல இது. முழுவதும் படியுங்கள் புரியும். 

indians banned

இந்தியாவில் சில இடங்களில் வெளிநாட்டினருக்கு மட்டுமே அனுமதி என கேள்விப்பட்டு அப்படி என்ன இடங்கள் அவை என தேடத்துவங்கினேன்.  அப்படிக் கிடைத்த இடங்களின் பட்டியலில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்ன வென்றால், அந்த இடங்களை நடத்துபவர்கள் இந்தியர்கள் தான். இருந்தாலும், இந்திய பிரஜைகளுக்கு அங்கு அனுமதி இல்லை. அந்த பட்டியலை தருகிறோம். 

ரெட் லாலிபாப் ஹாஸ்டல்- சென்னை : 

சிங்காரச் சென்னைல இருக்கற இந்த இடத்தோட நாம துவங்குவோம். மெரினால இருந்து எகிறிக் குதித்தால் வரும் மந்தவெளியில் உள்ளது இந்த இடம். வெளிநாட்டினர் முக்கியமாக, முதல் முறை இந்தியா வருபவர்கள் மற்றும் பேக்பாக்கர்ஸ் தங்கும் இடமாக இதனை அமைத்துள்ளனர். இந்தியர்கள் இங்கே அனுமதி இல்லை என்று கேள்விப்பட்டபொழுது உண்மையா என்ற சந்தேகம் எழ அதற்கு பதில் அவர்கள் வலைத்தளத்தில் இருந்தது. தெளிவாக பாஸ்போர்ட் வைத்தே அனுமதி எனக் கூறியுள்ளனர்.  

Red lollipop

ஆனால் வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்கள் மட்டும் இங்கே அனுமதிக்கப்படுகின்றனர். என்ன இருந்தாலும் நம்ம உள்ளூர்காரங்களுக்கு தடை எனும் போது கொஞ்சம் ஆச்சரியமா தான் இருக்கு.

யூனோ இன் - பெங்களூரு

அடுத்ததாக சென்னைக்கு மிக அருகாமையில் (ஜோக்கு பாஸ்) பெங்களூருவிற்கு செல்வோம். ஜப்பானியர்களால், ஜப்பானியர்கள் மட்டுமே தங்க அமைக்கப் பட்ட இடம் இந்த ‘யூனோ  இன்’. இங்கேயும் இந்தியர்களை உள்ளே விடுவதில்லை.


ஆனால் அதிகப்படியாக பெங்களூரு வாழ் மக்களிடம் இருந்து இந்த விஷயம் குறித்து ஆட்சேபனைக் கிளம்ப, பெங்களூரு மாநகராட்சி இந்த விஷயத்தில் தலையிட்டு இந்த ஸ்தாபனத்தை மூடியது.  

Uno In

ப்ரீ கசோல் கஃபே - ஹிமாச்சல் பிரதேஷ்

அடுத்ததாக நாம் செல்லும் இடம் இருப்பது ஹிமாச்சல் பிரதேசத்தில். அதிகமாக இமைய மலையை காணவரும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க துவங்கப்பட்டது தான் இந்த ‘FreeKasol Cafe' 'ப்ரீ கசோல் கஃபே'. முக்கியமாக இந்த கசோல் என்னும் இடம் தான் அருகில் உள்ள மலானா மற்றும் கீர்கங்கா போன்ற மலை மேல் உள்ள இடங்களை அடைய முக்கிய அடிவாரப்பகுதியாக உள்ளது. மேலும் இந்த இடத்தை 'இந்தியாவின் மினி இஸ்ரேல்'  என்றும் அழைக்கின்றனர். காரணம் இங்குள்ள இஸ்ரேலியர்கள் எண்ணிக்கை.  

FreeKasol
இரண்டு வருட கட்டாயா ராணுவ சேவைக்குப் பிறகு இந்த இடத்திற்கு வந்து இளைப்பாறி அடுத்து என்ன செய்யலாம் என்று முடிவு செய்வது பல இஸ்ரேலியர்களுக்கு வழக்கம். இதனை வீட்டில் இருந்து தொலைவில் உள்ள மற்றொரு வீடு என்றே அவர்கள் கருதுகின்றனர். (இதனை பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். காரணம் இஸ்ரேல் ராணுவச் சேவை மிகவும் கடினம்).

அப்படி இருக்க, இந்த ப்ரீ கசோல் கஃபே எனும் உணவு விடுதி இஸ்ரேலியர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்குவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்து அது பல முன்னணி பத்திரிக்கைகளில் வந்தது. 2015ல் இந்திய பெண் ஒருவர் இந்த கபேவுக்கு சென்றபோது அதன் நிர்வாகம் அவருக்கு உணவு அளிக்க மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அப்படி இல்லை என்கிறது இதன் நிர்வாகம். எதுவானாலும் கசோல் நாம் காணவேண்டிய ஒரு பகுதி. சந்தேகமே இல்லை.

Kasol

ரஷ்யன் காலனி - கூடங்குளம்

தமிழகத்தில் லெனின் மற்றும் ஸ்டாலின் போன்ற பெயர்கள் மிகவும் அதிகமாக காணப்படும். அது போன்றே ரஷ்யாவில் ‘இந்திரா’ என்ற பெயரும். 1970-களில் இந்திய பிரதமர் நினைவாக அப்பொழுது இந்தியா-ரஷ்யா நட்புக் காரணமாக இந்தப் பெயர் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 

Photo for Descriptive purpose

மேலும் கூடங்குளத்தில் உள்ள அணு உலை பாகங்கள் தயாரானது ரஷ்யாவில் உள்ள வால்கோடான்ஸ்க் என்ற நகரத்தில் தான். இவ்வளவு விஷயங்கள் இருந்தாலும், அணு உலையில் பணிபுரியும் ரஷ்யர்களுக்கு என ஒரு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு இந்தியர்கள் எவரும் செல்ல அனுமதி இல்லை என்றும் கூறுகின்றனர். 

‘நோ இண்டியன் பீச்’: புதுச்சேரி மற்றும் கோவா கடற்கறை

இந்த இரண்டு இடங்களுக்குச் சென்றிருந்தால், நிச்சயம் ஒரு வருடத்திற்கு எத்தனை அயல்நாட்டினர் அங்கு வந்து செல்கின்றனர் என உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அப்படி இருக்க அங்குள்ள சில கடற்கரைப் பகுதிகளில் அந்நிய நாட்டினருக்கு மட்டுமே அனுமதி கொடுப்பதும் நடக்கின்றது. காரணம் கடற்கரை பொறுத்தவரை அயல் நாட்டினர் பண்பு வேறு நம் நாட்டினர் பண்பு வேறு என்கின்றனர். 

Goa Prism

‘நோ இண்டியன் பீச்’ என்று சொல்லப்படும் சில கடற்கரைப் பகுதிகளில் இந்தியர்களுக்கு தடை என்பது அதிகாரப்பூர்வமற்றது என்றாலும் அங்கு இந்தியர்களை காண்பது அரிது என்கின்றனர். அஞ்சுனா பீச் என்ற கோவாவின் ஒரு பகுதி முற்றிலும் வெளிநாட்டவர்கள் கூடும் பீச் பகுதியாகும். கோவாவில் மட்டுமல்ல நம்ம பாண்டிச்சேரியிலும் இப்படி தனிப்பட்ட ஃப்ரென்ச் பீச் பகுதிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

பிராட்லாண்ட்ஸ் - திருவல்லிக்கேணி 

சென்னையில் துவங்கிய இந்த கட்டுரையை மீண்டும் சென்னையில் வந்ததே முடிப்பது தான் சரி. வாழ்க்கையே ஒரு வட்டம் தானே, நம் கட்டுரை மட்டும் என்ன விதிவிலக்கா? 


திருவல்லிக்கேணியில், உள்ளிருந்து பார்த்தால் இடியும் நிலையிலும், வெளியில் இருந்து பார்த்தால், ஹிப்பி கலாச்சாரத்தை மனதில் வைத்து கட்டிய கட்டிடம் போலவும் இருக்கும் ‘பிராட்லாண்ட்ஸ்’ (முன்னாள் ஹைலாண்ட்ஸ்) விடுதி தான் அந்த இடம். 

வாசலிலேயே ‘வெல்கம், நமஸ்தே, பிரே ஸ்டே இன் திஸ் லாட்ஜ், பட் ஒன்லி இஃப் யு பொஸஸ் பாரின் பாஸ்போர்ட்’  என தெளிவான வரவேற்புரை உள்ளது. 

எதற்காக இந்த பாகுபாடு என வினவினால், இங்கு தங்கும் அயல்நாட்டினர் பல நாட்கள் தங்குகின்றனர். அவர்களுக்கு வருத்தம் வராத வண்ணம், அவர்கள் முகம் சுளிக்காத வண்ணம் நாங்கள் எங்கள் விருந்தாளிகளை தேர்வு செய்கிறோம், என பதில் வருகிறது.  

BroadLands Chennai

கோவா மற்றும் புதுச்சேரியில் வணிகக் காரணங்களுக்காக அயல்நாட்டினருக்கு மட்டும் இடம் கொடுக்கும் பழக்கம் உள்ளது. அதே சமயம் சென்னையில் இது போன்று இருப்பது ஆச்சர்யமே. இந்தியாவை, இந்தியக் கலாச்சாரத்தை தேடி வரும் வெளிநாட்டவர்கள், இந்தியர்களைச் சகித்து கொள்வது அவ்வளவு கடினமா? 


கட்டுரை தொகுப்பு : கெளதம் தவமணி

How has the coronavirus outbreak disrupted your life? And how are you dealing with it? Write to us or send us a video with subject line 'Coronavirus Disruption' to editorial@yourstory.com

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India