‘இந்தியாவின் முதல் கிராமம்’ - எங்கு உள்ளது? அங்கு என்ன இருக்கிறது?
இந்தியா - சீனா எல்லை பகுதியில் அமைந்துள்ள கிராமத்திற்கு இந்தியாவின் முதல் கிராம என பெயர் சூட்டப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ பெயர் பலகையும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்தியா - சீனா எல்லை பகுதியில் அமைந்துள்ள கிராமத்திற்கு 'இந்தியாவின் முதல் கிராமம்’ எனப் பெயர் சூட்டப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ பெயர் பலகையும் பொருத்தப்பட்டுள்ளது.
வட இந்திய மாநிலமான உத்தரகாண்ட் மாநிலத்தின் மானா கிராமத்தின் நுழைவாயிலில், 'இந்தியாவின் முதல் கிராமம்' என்ற வாசகப் பலகையை மத்திய அரசு வைத்துள்ளது. இது சாமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் அருகே அமைந்துள்ள சுற்றுலாத் தலமாகும். இந்த இடங்களுக்கு அடிக்கடி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் 2022ம் ஆண்டு எல்லையோரத்தில் அமைந்துள்ள கிராமங்கள் இனி நாட்டின் முதல் கிராமங்கள் என அழைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின் படி முதல் முறையாக மானா கிராமம் அமைந்துள்ளது.
சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு:
நீலகண்டா சிகரம்: நீலகண்ட சிகரம் 'கர்வால் ராணி' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிகரத்திலிருந்து பத்ரிநாத் மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளின் அழகை கண்டு மகிழலாம். பிரம்மகமல் போன்ற மலர்கள் பூத்து குலுக்கும் எழில் மிகு இடம்.
தப்ட் குந்த்: மானா கிராமத்தில் உள்ள இந்த பிரபலமான சுற்றுலாத் தலம் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த இடம் அக்னியின் இருப்பிடமாகவும் கருதப்படுகிறது. அதன் நீர் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் பல தோல் நோய்களை குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதனால் சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட விரும்பும் பலர் இங்கு வருகிறார்கள்.
மாதா மூர்த்தி கோவில்: அலகனந்தா நதிக்கரையில் உள்ள பழமையான கோவில் மாதா மூர்த்தி கோவில். மகாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் நரநாராயணனின் தாயாருக்காக இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவை காண ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
வசுதாரா நீர்வீழ்ச்சி: வசுதாராவின் இந்த அழகிய நீர்வீழ்ச்சி மிகவும் கவர்ச்சிகரமான இடமாகும். அருவியில் இருந்து விழும் நீர்த்துளிகள் முத்துக்கள் போல காட்சியளிக்கிறது. நீங்கள் மானா கிராமத்திற்குச் சென்றால், இந்த இடம் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இது தவிர, வியாசூடி குகை, கணேஷ் குகை, பீம் குண்ட் போன்ற பல ஆன்மீக ஸ்தலங்களுக்கும் அமைந்துள்ளன.
மானா கிராமத்தின் சிறப்புகள்:
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள அரசின் 'அதிர்வுமிக்க கிராமம்' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
19 மாவட்டங்கள், நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 46 எல்லைத் தொகுதிகளில் உள்ள கிராமங்களை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் சுற்றுலா வலைத்தளத்தின்படி, மானா கடல் மட்டத்திலிருந்து 3219 மீட்டர் உயரத்தில் உள்ளது. சரஸ்வதி நதிக்கரையில் உள்ளது. மானா கிராமம் போடியாஸ் (மங்கோலிய பழங்குடியினர்) வசிக்கும் இடமாகும்.
மானா கிராமத்திற்குச் செல்ல சிறந்த நேரம் மே முதல் நவம்பர் தொடக்கம் ஆகும். அதன் பிறகு, ஏப்ரல் வரை கடுமையான பனிப்பொழிவு காரணமாக இப்பகுதிக்கு செல்ல முடியாது.
கடந்த ஆண்டு அக்டோபரில் அந்தக் கிராமத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் எல்லைக் கிராமங்கள்தான் அதன் முதல் கிராமங்கள் என்றும், அவை வழக்கமாக அழைக்கப்படும் கடைசி கிராமங்கள் அல்ல என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
‘இந்தியாவின் முதல் ஸ்மார்ட் கிராமம்’ - 2 ஆண்டுகளில் தலைகீழாய் மாறியது எப்படி?