’கூகுள் பே’ செயலியில் ரெயில் டிக்கெட் முன்பதிவு வசதி அறிமுகம்!
ரெயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வதை கூகுள் இப்போது மேலும் எளிதாக்கி இருக்கிறது. பண பரிவர்த்தனை செயலியான 'கூகுள் பே' மூலம் ரெயில் டிக்கெட்களை பதிவு செய்யும் வசதியை கூகுள் அறிமுகம் செய்திருக்கிறது. இந்திய ரெயில்வேயின் முன்பதிவு வசதியுடன் (ஐ.ஆர்.சி.டி.சி) இணைந்து கூகுள் இந்த சேவையை அளிக்கிறது.
கூகுள் நிறுவனம், கூகுள் பே மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதியை வழங்கி வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான யு.பி.ஐ மேடையில் செயல்படும் இந்த வசதி முதலில் டேஜ் எனும் பெயரில் அறிமுகமானது.
தற்போது 'கூகுள் பே' 'Google Pay' எனும் பெயரில் செயல்படும் இந்த செயலி மூலம் கூகுள் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவை தவிர, டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட வசதிகளையும் வழங்கி வருகிறது. ஏற்கனவே இந்த செயலி மூலம் பஸ் டிக்கெட் முன்பதிவு மற்றும் கால்டாக்சி முன்பதிவு வசதி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், ரெயில் டிக்கெட் முன்பதிவு வசதி அறிமுகம் ஆகியுள்ளது.
இந்திய ரெயில்வேயின் முன்பதிவு வசதியான ஐ.ஆர்.சி.டிசியுடன் இணைந்து கூகுள் இந்த வசதியை அளிக்கிறது. இதன் மூலம் கூகுள் பே செயலியில் இருந்தே நேரடியாக ரெயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்.
மேலும் இந்த செயலியில் இருந்தே ரெயில்களை தேடலாம், பயண நேரத்தை அறிந்தும் கொள்ளலாம். இருக்கைகள் நிலையையும் அறிந்து கொள்ளலாம். பயண நேரத்தை கணக்கிடுவதோடு, பயண மார்கத்திற்கான வாய்ப்புகளையும் தெரிந்து கொள்ளலாம். வெவ்வேறு வாய்ப்புகளையும் ஒப்பிட்டு பார்க்கலாம். டிக்கெட் முன்பதிவு செய்வது மற்றும் ரத்து செய்வதையும் இந்த செயலியில் இருந்தே மேற்கொள்ளலாம்.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் செயலி இரண்டிலும் இந்த வசதியை அணுகலாம். இந்த வசதியை பயன்படுத்த கூகுள் பே செயலியில், வர்த்தகம் பகுதியில் சென்று ரெயில்கள் வசதியை தேர்வு செய்து அதில் டிக்கெட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு, ரெயில்களை தேடி, இருக்கை நிலையை அறிந்து கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
ரெயில் விவரங்களை தேர்வு செய்து பிறகு பயனாளிகள் தங்கள் ஐ.ஆர்.சி.டி.சி கணக்கு விவரத்தை சமர்பித்து சேவையை தொடரலாம். கூடுதல் செலவு இல்லாமல் இந்த சேவையை பயன்படுத்தலாம் என கூகுள் தெரிவித்துள்ளது.
இந்திய பயனாளிகளுக்கு தொடர்ந்து பயனுள்ள அம்சங்களை அறிமுகம் செய்து வருவதாகவும் அதன் தொடர்ச்சியாக தற்போது ரெயில் டிக்கெட் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்படுவதாகவும் கூகுள் வலைப்பதிவு தெரிவிக்கிறது.
இணையம் மூலம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ரெயில் டிக்கெட் முன்பதிவு வசதி அதிகம் நாடப்படும் வசதியாக இருக்கும் நிலையில், கூகுள் பேவின் இந்த சேவை ரெயில் டிக்கெட் முன்பதிவை ஸ்மார்ட்போனில் இருந்தே மேற்கொள்வதை மேலும் எளிதாக்கியுள்ளது.
இந்த வசதியை பயன்படுத்த கூகுள் பே செயலியை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
இதே போல கூகுள் போட்டோஸ் செயலியில் படங்களை மேலும் விரைவாக பேக்கப் செய்ய எக்ஸ்பிரஸ் பேக்கப் வசதியையும் கூகுள் இந்திய பயனாளிகளுக்காக அறிமுகம் செய்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு: https://india.googleblog.com/2019/03/introducing-train-ticket-booking-on.html