'முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு': 49 திட்டங்கள்; ரூ.28,508 கோடி முதலீடு; 83,432 பேருக்கு வேலைவாய்ப்பு!

ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
17 CLAPS
0

சென்னை ஐடிசி கிராண்ட் சோளா ஹோட்டலில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் "முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு" என்ற விழா நடத்தப்பட்டது. அந்நிய முதலீடுகளை தமிழகத்தில் ஈர்க்கும் வகையில் இந்த விழாவை தமிழக அரசு நடத்தியது. விழாவில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில்,

ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன்மூலம் சுமார் 55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. கேப்பிட்டல் லாண்ட், அதானி, ஜே.எஸ்.டபிள்யூ உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொண்டன.

இதேபோல், இதே நிகழ்ச்சியின் மூலமாக,

ரூ.4,250 கோடி மதிப்பில், 21,630 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 9 தொழில் திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, ரூ.7,117 கோடி மதிப்பிலான 6,798 நபர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் 5 திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கிவைத்தார். மொத்தம் இந்த 49 திட்டங்களின் மூலம் ரூ.28,508 கோடி முதலீட்டில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 83,432 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் தொழில் தொடங்கவுள்ளன. அந்த விவரங்களும் இன்றைய விழாவில் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னதாக விழாவில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஒற்றை சாளர இணையதளம் 2.0 தொடங்கப்பட்டது. தற்போதுள்ள முதலீட்டாளர்களுக்கும், புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவிடும் வகையில், வணிகம் புரிதலுக்குத் தேவையான இந்த இணையத்தில் சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம், அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் சங்கம் (ATEA) இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

Digital Accelerator திட்டம் மூலம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்றும்,

"தமிழக அரசு இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த மானியத்திற்காக 75 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விண்ணப்பித்த நிலையில் இதில் ஐந்து நிறுவனங்களை தேர்வு செய்து அவற்றிற்கும் இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் மானியம் வழங்கினார்."

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்: Core Stack, Atsuya Technologies, Pacifyr, Swire Pay மற்றும் Plethy ஆகியவற்றுக்கு 40 லட்சம் முதல் 1 கோடி வரை தமிழக அரசு மானியம் அளித்துள்ளது.

உயர்தர உற்பத்தித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் உள்ள தொழிலகங்களுக்கான விமானம் மற்றும் விமான இயந்திர பாக உற்பத்தியை மேம்படுத்துவதற்காக, General Electric நிறுவனம், ஒரு திறன்மிகு மையம் அமைக்க, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த விழாவில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளர் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வெளியிட்டபின் இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,

“பண்பாட்டின் முகவரியாக இருக்கும் தமிழ்நாடு, தற்போது முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாற தமிழக அரசு உழைத்து வருகிறது. கொரோனா காலத்தை, கொரோனாவை வென்ற காலமாக தமிழக அரசு மாற்றியிருக்கிறது. தொழிலை வர்த்தகமாகக் கருதாமல் சேவையாக எண்ணி முதலீட்டாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு கைகொடுக்கும் வகையில், தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். தெற்காசியாவில் தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே எனது தலைமையிலான அரசின் இலக்கு," என்று பேசியிருக்கிறார்.

Latest

Updates from around the world