உலகை பசுமையான இடமாக மாற்றும் ஐஆர்எஸ் அதிகாரி!

By YS TEAM TAMIL|22nd Feb 2021
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கொண்டு வெர்டிக்கல் கார்டன் அமைப்பது, மரங்களுக்கான மருத்துவமனை என பல்வேறு முயற்சிகள் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாத்து வருகிறார் `இந்தியாவின் பசுமை மனிதர்’ என்றழைக்கப்படும் ரோகித் மெஹ்ரா.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

தோல்வியை சந்தித்த அனைவருமே துவண்டுவிடுவதில்லை. தடைக்கற்களை படிக்கட்டுகளாக மாற்றி சிகரம் தொட்டவர்கள் ஏராளம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ரோகித் மெஹ்ரா.


பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வியைத் தழுவியிருந்தாலும் தொடர்ந்து கடினமாக உழைத்து 2004-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.  ஐஆர்எஸ் அதிகாரி ஆனார்.


இவர், 'இந்தியாவின் பசுமை மனிதர்’ என்றழைக்கப்படுகிறார். சுற்றுச்சூழலுக்கு உகந்த சமூகத்தை உருவாக்கவேண்டும் என்பதே இவரது நோக்கம். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்த பலருக்கு இவர் உத்வேகம் அளித்துள்ளார்.

1

சிவில் பணியாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்ததைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தத் தீர்மானித்தார்.

“சமூகத்தில் மாற்றத்தை கொண்டு சேர்க்க விரும்புகிறேன். எங்காவது தவறு நடப்பது தெரிந்தால் உடனே அங்குத் தேவையான மாற்றங்களைக் கொண்டு சேர்க்கவேண்டும். இதுவே எனது விருப்பம்,” என்கிறார் ரோகித்.

சிறு வயதில் ரோகித் செடி வளர்க்க அவரது தாத்தா ஊக்குவித்துள்ளார். ஆனால் அந்த சமயத்தில் இவருக்கு ஆர்வம் ஏற்படவில்லை.


2006-ம் ஆண்டு ஒரு நாள் ரோகித்தின் மகனுக்கு பள்ளி விடுமுறை விடப்பட்டது. காற்று மாசுபாடு இதற்குக் காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அப்போது இவர்கள் வசித்த லூதியானா பகுதியில் காற்று மாசு மோசமாக இருந்தது.


தன் குழந்தை சுவாசிக்க சுத்தமான காற்றைக்கூட தன்னால் கொடுக்கமுடியவில்லையே என்கிற வருத்தம் ரோகித்திற்கு ஏற்பட்டது.

’இதற்குத் தீர்வுகாண உடனடியாகக் களமிறங்கினேன்,” என்கிறார் ரோகித்.
2

ஐந்து வெவ்வேறு திட்டங்களைக் கையிலெடுத்தார். மனைவி கீதாஞ்சலி மற்றும் குழந்தைகளை வளர்ச்சிப் பணிகளில் இணைத்துக்கொண்டார். லூதியானா, அம்ரிஸ்டர், பரோடா, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பல நகரங்களை பசுமையாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டார்.

இவரது முயற்சிகள் தொடங்கப்பட்டு நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்டன. பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வெர்டிக்கல் கார்டன் அமைப்பது, குப்பை கொட்டப்படும் பகுதிகளில் பசுமை காடு அமைப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு ‘இந்தியாவின் பசுமை மனிதர்’ என்கிற பெயரையும் வென்றுள்ளார்.

ரோகித்தின் முயற்சிக்கு அவரது மனைவியும் குழந்தைகளும் உதவுகிறார்கள். இவரது நோக்கத்தை உணர்ந்த சில நல்லுங்களும் ஆதரவளிக்கின்றனர். இவர் ஒவ்வொரு இடத்திற்கு போகும்போது அங்குள்ளவர்களை தன்னுடைய பசுமை முயற்சியில் இணைத்துக்கொண்டு ஒரு வட்டத்தை உருவாக்கிவிடுகிறார்.

வெர்டிக்கல் கார்டன் – அழகு மற்றும் பாதுகாப்பு

ரோகித் மேற்கொண்ட முதல் திட்டமானது சுத்தமான காற்று, பிளாஸ்டிக் இல்லாத சுற்றுச்சூழல் ஆகிய இருவேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.

“நாங்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை செடி நடுவதற்கு பயன்படுத்தினோம். நாட்டின் பல பகுதிகளில் கிட்டத்தட்ட 500 வெர்டிக்கல் கார்டன் அமைத்துள்ளோம்,” என்கிறார் ரோகித்.

லூதியானாவின் ரிஷி நகரில் உள்ள வருமான வரித்துறை வளாகத்தில் இவர் அமைத்துள்ள வெர்டிக்கல் கார்டன் நாட்டின் மிகப்பெரிய கார்டன் என லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தத் தோட்டத்தில் 17,000 பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

3
"பள்ளி மாணவர்கள், ஸ்கிராப் டீலர்கள் போன்றோரிடமும் மற்ற இடங்களிலிருந்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பெறப்படுகின்றன. ஒரு மாணவர் குறைந்தது 2 பாட்டில்களாவது கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். எனவே 300 மாணவர்களிடம் சேகரித்தால் 600 பாட்டில்கள் கிடைக்கும்,” என்றார்.

அம்ரிஸ்டர் தங்க கோவில், ரயில் நிலையங்கள், காவல் நிலையங்கள், நீதிமன்ற வளாகங்கள், சில ஐஐடி வளாகங்கள் போன்ற இடங்களிலும் வெர்டிக்கல் கார்டன் அமைத்துள்ளார். இவை அனைத்துமே மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு உருவாக்கப்பட்டவை.


ரோகித் பஞ்சாப் மட்டுமல்லாது டெல்லி, குருகிராம், சூரத், வடோடரா, ஜம்மு, மும்பை, கொல்கத்தா, ஒடிசாவின் சில பகுதிகள் என பல்வேறு பகுதிகளில் கார்டன் அமைத்துள்ளார். இவை அனைத்துமே இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. சமூக நலனில் பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டே ரோகித் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

விதைப்பந்துகள்

செடி வளர்வதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த விதைப்பந்துகளை ரோகித் அறிமுகப்படுத்தினார். காலியாக உள்ள இடங்களில் இந்த விதைகள் தூவப்படுகின்றன.

4
“சுங்கச்சாவடிகளில் இலவசமாக விதைப்பந்துகள் விநியோகிக்கிறோம். மக்கள் அவற்றைப் பயன்படுத்தி செடி வளர்க்க ஊக்குவிக்கிறோம்,” என்றார் ரோகித்.

சமூக வலைதளங்கள்

சமூக வலைதளங்களில் ரோகித்திற்கு ஏராளமான தொடர்புகள் இருந்தன. தினமும் அதிகளவில் ’குட்மார்னிங்’ மெசேஜ் வந்துகொண்டிருக்கும். இவற்றை டெலீட் செய்தபோதுதான் அவருக்கு ஒரு யோசனை வந்துள்ளது.

“எனக்கு குட்மார்னிங் மெசேஜ் அனுப்பும் ஒவ்வொருவரிடமும் ஐந்து மரங்கள் நடச் சொன்னேன். அவற்றை புகைப்படம் எடுத்து அனுப்பச் சொன்னேன். எனக்கு மெசேஜ் அனுப்பிய 130 பேரில் 92 பேர் செடி நட்டார்கள்,” என்றார்.

ஒவ்வொருமுறை ஒரு நபர் புகைப்படம் அனுப்பும்போது அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுகிறேன். இதைக் கண்டு பலர் செடிகள் நட்டு புகைப்படம் எடுத்துப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்கள்.


இதுவரை ஆயிரம் பேர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ரோகித் தெரிவிக்கிறார். இவர்களில் 76 வயது முதியவர் ஒருவரும் இணைந்திருக்கிறார்.

காடு வளர்ப்பு

ரோகித்தும் அவரது குழுவினரும் குப்பைகள் கொட்டப்படும் பகுதிகளை சுத்தப்படுத்தி ’விருக்‌ஷாயுர்வேதா’ என்கிற முறையின் மூலம் பசுமையான காடுகளாக மாற்றத் தீர்மானித்தார்கள். இதன்படி ரசாயனங்கள் ஏதும் பயன்படுத்தாமல் செடிகளுக்கு வரும் நோய்களைக் கட்டுப்படுத்தி செடிகளை வளர்க்கவேண்டும். பயன்பாட்டில் இல்லாத காலி மனைகளைவும் காடுகளாக மாற்றியுள்ளார்.

5
“இந்த முயற்சி தொடங்கப்பட்ட ஓராண்டிற்குள் மரங்கள் 17 அடி உயரம் வரை வளர்ந்தன. இது ‘நேஷனல் கிரீன் டிரிபியூனல்’ போன்ற நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிறுவனம் மற்றொரு திட்டத்தில் என்னை இணைத்துக் கொண்டது. நாங்கள் புத்தா நுல்லா நீரோடையை பசுமைக் காடாக மாற்றி வருகிறார்,” என்றார் ரோகித். நான்காண்டு காலத்தில் இவ்வாறு 83 காடுகளை இவர் உருவாக்கியுள்ளார்.

செடிகளுக்கான மருத்துவமனை

ரோகித் சமீபத்தில் மரங்கள் மற்றும் செடிகளுக்கான மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் திறந்துள்ளார். தாவரங்களுக்கு ஏற்படும் நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்காகவும் தீர்வுகளுக்காகவும் தாவரவியலாளர், புவியியலாளர், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் என 25 தன்னார்வலர்களுடன் ரோகித் பணியாற்றுகிறார்.

முதல் மூன்று நாட்களிலேயே இக்குழுவிற்கு 325 அழைப்புகள் வந்துள்ளன.

ஒரு ரிக்‌ஷாவை மருத்துவமனையாக மாற்றியுள்ளார். தாவரங்களுக்கான அனைத்து மருந்துகளும் இங்கு கிடைக்கின்றன.

“மரங்களில் உள்ள ஆணிகளை அகற்றுவது, மரங்களை பாதுகாக்கும் வேலி, கூடுதல் வளர்ச்சி, மரங்களை அகற்றி வேறொரு இடத்தில் நடும் சேவைகள் என கிட்டத்தட்ட 33 வகையான சேவைகளை வழங்குகிறோம்,” என்றார்.

தற்சமயம் இந்த சேவைகள் அம்ரிஸ்டரில் மட்டுமே உள்ள நிலையில் ரோகித் மற்ற நகரங்களிலும் விரிவடைய திட்டமிட்டுள்ளார்.

6

மற்றவர்களை ஊக்குவிக்கிறார்

ரோகித் தனது முயற்சிகளுக்காக இதுவரை நிதி ஏதும் திரட்டவில்லை. அதேசமயம் மக்கள் செடிகளை நன்கொடை அளிக்க ஊக்குவிக்கிறார். பெருந்தொற்று சமயத்தில் பலரை தனது முயற்சியில் இணைத்துக்கொண்டுள்ளார் ரோகித். விதை பந்துகள் தயாரிக்கும் முறை குறித்தும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவது குறித்தும் ஆன்லைனில் வகுப்பெடுத்துள்ளார்.


பசுமையான முயற்சி மட்டுமல்லாது ரோகித் குழந்தை வளர்ப்பு குறித்து ‘சூப்பர் சைல்ட்’ என்கிற புத்தகத்தை எழுதியுள்ளார். மற்றுமொரு புத்தகத்தை எழுதி வருகிறார்.


2021-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதும் குறைந்தபட்சம் 1,000 காடுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

"மரங்களே நம்முடைய முன்னோர்கள். நம்முடைய வாழ்க்கை இவற்றை சார்ந்துள்ளது. இதை மக்களுக்கு புரியவைக்க விரும்புகிறேன். தூய்மையான, பசுமையான, சிறந்த உலகில் நம் குழந்தைகள் வாழவேண்டும் என்று நாம் விரும்பினால் இவற்றை பாதுகாக்கவேண்டியது நம் கடமை,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் மேத்யூ | தமிழில்: ஸ்ரீவித்யா

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற