‘கடவுளின் பெயரால் மாநிலங்களவையில் ஒலித்த தமிழ் குரல்’ - எம்.பி.யாக பதவியேற்ற இசைஞானி!

இசைஞானி இளையராஜா மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.
0 CLAPS
0

இசைஞானி இளையராஜா மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் 233 பேர் மாநிலங்களவை பிரதித்துவம் மூலமாகவும், 12 பேர் நியமன எம்.பி.க்களாகவும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நபர்கள் பொதுவாக இலக்கியம், விளையாட்டு, கலை, சமூக சேவைகளில் சிறப்பாக செயலாற்றி வருபவர்களாக இருப்பார்கள்.

இதனடிப்படையிலேயே இசையுலகில் கொடி கட்டி பறந்து வரும் இசைஞானி இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பியாக நியமிக்கப்பட்டார்.

தமிழில் பதவியேற்ற இளையராஜா:

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, 79 வயதாகும் இசையமைப்பாளர் இளையராஜா, கேரளாவைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனை பி.டி.உஷா, கர்நாடகாவைச் சேர்ந்த தர்மசாலா கோயில் அறங்காவலர் வீரேந்திர ஹெக்டே, ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தெலுங்குப்பட கதையாசிரியரும் இயக்குநருமான விஜயேந்திர பிரசாத் ஆகியோரை மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்திருந்தார்.

இவர்கள் அனைவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளான ஜூலை 18ம் தேதி அன்று பதவியேற்றுக்கொண்டனர்.

ஆனால், இளையராஜா அப்போது வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றால் அன்றைய தினம் நடந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகம் திரும்பிய இளையராஜா, இன்று மாநிலங்களவை நியமன எம்.பி.யாக இசைஞானி இளையராஜா பதவியேற்றுக்கொண்டார்.

இளையராஜா தமிழில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது பாராட்டுக்களை குவித்து வருகிறது.

“மாநிலங்களவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜா எனும் நான். சட்டத்தால் நிறுவப்பட்ட இந்திய சட்டத்தின் மீது உண்மையான பற்று ஆர்வமும், பற்று உறுதியும் கொண்டிருப்பேன் எனவும், இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றி நிற்பேன் என்றும், நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுக்கூறுகிறேன்,” என தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

சர்ச்சையும்... பதவியும்...

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு 'அம்பேத்கர் அன்ட் மோதி' என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய முன்னுரை பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இளையராஜா பாஜகவில் இணைய உள்ளதாகவும், அதனாலேயே பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியுள்ளதாகவும் பலரும் விமர்சித்தனர். பிரதமர் மோடியை, சட்ட மேதை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியதற்காக இளையராஜாவுக்கு எம்.பி. பதவி கிடைக்கும் என்றும், ஏன்? பாஜகவின் குடியரசுத்தலைவர் வேட்பாளராக கூட இளையராஜா களமிறக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக இளையராஜாவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் சோசியல் மீடியாவில் விவாதங்கள் வெடித்தன.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். இதற்கு பலரும் எதிராக கருத்து தெரிவித்து வந்த போதும், பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இசையுலகின் ராஜாவான ‘இளையராஜா’:

1976ல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இளையராஜா, இதுவரை 1000 இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பின்னணி இசையமைத்துள்ளார். இந்தியாவின் பிரபல இசையமைப்பாளரான இளையராஜா சிறந்த இசை இயக்கத்திற்காக மூன்று முறையும், சிறந்த பின்னணி இசைக்காக இரண்டு முறையும் தேசிய விருது பெற்றுள்ளார்.

1985ம் ஆண்டு வெளியான ‘சாகர சங்கமம்’ மற்றும் 1989ம் ஆண்டு வெளியான ‘ருத்ர வீணை’ ஆகிய தெலுங்கு படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார். 1987ம் ஆண்டு ‘சிந்து பைரவி’ படத்திற்காகவும், 2016ம் ஆண்டு ‘தாரை தப்பட்டை’ படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்காவும் தேசிய விருது வழங்கப்பட்டது. 2009ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பழஸிராஜா’ படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

2018ம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில், இசைத்துறையில் அவரது படைப்பு மற்றும் சோதனை படைப்புகளுக்காக, பயிற்சி பெற்ற கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த இந்திய அங்கீகாரமான சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார். டிரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக், லண்டன், தொலைதூர கற்றல் முறையில் கிளாசிக்கல் கிதாரில் தங்கப் பதக்கம் வென்றவர்.

Latest

Updates from around the world