வீண்பழி, தேசத் துரோகம், கைது, சட்டப்போராட்டம்: நிஜ ‘Rocketry’ நாயகன் ‘நம்பி நாராயணன்’ மீண்டது எப்படி?

இந்தியாவை விண்வெளி துறையில் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆசையோடு இஸ்ரோவில் சேர்ந்து, வீண்பழி, வழக்கு, கைது எனப்பல சர்ச்சைகளில் சிக்கியவர் விஞ்ஞானி நம்பி நாராயணன். காலத்தோடு போராடி தன் பக்க நியாயங்களை நிரூபித்து நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வலம் வருபவர் இந்த ராக்கெட்ரி நாயகன்.
0 CLAPS
0

நம்பி நாராயணன்!

இந்தப் பெயரை நீங்கள் அடிக்கடி ஊடகங்களில் கேள்விப் பட்டிருக்கலாம். முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியான இவர், இந்திய விண்வெளி ரகசியங்களை வெளிநாட்டிற்கு விற்றதாகக் கைது செய்யப்பட்டு, பின் அது சந்தேகத்தின் அடிப்படையிலான வழக்கு என விடுதலை செய்யப்பட்டவர் என்பதுதான் ஊடகங்களில் இவரது பெயர் அடிக்கடி அடிபடக் காரணமாக இருந்த ஒன்று. இப்போது இவரது வாழ்க்கையை திரைப்படமாக எடுத்திருக்கிறார் நடிகர் மாதவன்.

‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ (Rocketery - The Nambi Effect) என்ற பெயரில் நடிகர் மாதவன் தயாரித்து இயக்கி நடித்துள்ள இப்படம் வரும் ஜூலை 1ம் தேதியன்று திரைக்கு வரவுள்ளது.

விஞ்ஞானி, வழக்கு, கைது, விடுதலை, விருது என உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, உணர்வுகளின் கலவையாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழா உட்பட அமெரிக்கா, அமீரகத்திலும் திரையிடப்பட்டுள்ளது. மாதவனுடன் கவுரவத் தோற்றத்தில் ஷாருக்கான், சூர்யா போன்றவர்களும் இதில் நடித்துள்ளனர்.

நடிகர் மாதவன் எழுதி முதன்முறை இயக்குனராக பணியாற்றி நடித்துள்ள இப்பட்டம் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் டப்பிங் பதிப்புகளிலும் வெளியாகவுள்ளது.

புத்தகத்தில் கதையாக படிப்பதைவிட, திரைப்படமாக எடுக்கப்படும்போது இத்தகையோரின் வாழ்க்கை இன்னமும் மக்களிடம் சுலபமாக சென்று சேர்ந்து விடும். அதிலும், பல சர்ச்சைகளில் சிக்கி, பின் அதிலிருந்து மீண்ட நம்பி நாராயணனைப் பற்றி நாம் அறியாத பல புதிய தகவல்கள் இந்தப் படத்தில் இருக்கும் என்பது மாதவனின் பேட்டிகளில் இருந்து தெரிகிறது.

80 வயதான இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வியத்தகு வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகப் பார்ப்பதற்கு முன் அவரைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்...

யார் இந்த நம்பி நாராயணன்?

1941ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பு, பிரிட்டிஷ் இந்தியாவில், நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த திருக்குறுங்குடியில் நம்பி நாராயணன் பிறந்தார். தமிழ் குடும்பத்தில் பிறந்த அவர், தனது பூர்விகம் நெல்லை என பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

நாகர்கோவிலில் பள்ளிப் படிப்பை முடித்த நம்பி நாராயணன், மதுரையில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பும், திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் பட்ட மேற்படிப்பும் முடித்தவர்.

ஏற்கனவே விண்வெளி திட்டங்களின் மீது அதிக ஆர்வம் கொண்ட நம்பிக்கு, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் ஃபெல்லோஷிப் கிடைத்தது நல்வாய்ப்பாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து ஆல்பர்ட் ஐன்ஸ்டின் பாடம் நடத்திய உலக புகழ்பெற்ற அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் ராக்கெட் புரோபல்ஷன் (Propulsion) தொடர்பாக தனது ஆராய்ச்சி சார்ந்த படிப்பை முடித்தார். அதன் தொடர்ச்சியாக அமெரிக்க சிறப்பு குடியுரிமையோடு, அமெரிக்காவிலேயே வேலை செய்யும் வாய்ப்பும் அவரை தேடி வந்தது.

ஆனால், இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் விக்ரம் சாராபாயை தனது குருவாக கருதிய நம்பி நாராயணன், இந்தியாவிற்காக வேலை பார்ப்பதையே அதிகம் விரும்பினார்.

எனவே, இந்தியா வந்ததும் 1966ம் ஆண்டு இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். அங்கு திரவ எரிபொருள் ராக்கெட் தொழில் நுட்பத்தை அவர் அறிமுகம் செய்தார்.

இஸ்ரோவின் தலைவர் சதீஷ் தவான், யு.ஆர்.ராவ் ஆகியோரின் ஆதரவுடன், 600 கிலோ அழுத்தம் கொண்ட முதல் திரவ உந்து வாகனத்தை 1970களில் வெற்றிகரமாக உருவாக்கினார்.

அதன் தொடர்ச்சியாக, பிஎஸ்எல்வி-யின் இரண்டாம் மற்றும் நான்காம் நிலைகளின் திட்ட இயக்குநர், கிரையோஜெனிக் திட்ட இயக்குநர், பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி-யின் அசோசியேட் திட்ட இயக்குநர், திரவ எரிபொருள் புரோபல்ஷன் துணை திட்ட இயக்குநர் என சுமார் 20 ஆண்டு காலத்திற்கும் மேலாக இஸ்ரோவில் பல்வேறு பொறுப்புகளின் கீழ் பணியாற்றினார்.

இன்றைய இஸ்ரோவின் அடித்தளத்தை அமைத்தவர்களில் ஒருவராக கருதப்படுபவர் நம்பி நாராயணன். அவர் இஸ்ரோ பணியில் சேர்ந்த போது, சுமார் 25 விஞ்ஞானிகள் மட்டும்தான் இருந்துள்ளனர். அதில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் ஒருவர்.

இஸ்ரோவில் அப்துல் கலாம் திடப்பொருட்களை எரிபொருளாக கொ‌ண்டு ராக்கெட் செலுத்துவது குறித்து ஆய்வு செய்த போது, நம்பி நாராயணன் திரவ எரிபொருட்கள் பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி குற்றச்சாட்டு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களுக்காக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்த நம்பி நாராயணன் மீது, 1994ல் அதிரடியாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு, 1994ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி கேரள போலீசாரால் நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார்.

மாலத்தீவு உளவுப் பிரிவைச் சேர்ந்த மரியம் ரஷீதா, பவுஸியா உசேன் மூலம் இந்திய ராக்கெட் தொழில் நுட்பங்களை ரஷ்யா மற்றும் பாகிஸ்தானுக்கு விற்றதாகவும், உளவு பார்த்ததாகவும் நம்பி நாராயணன் உட்பட மூன்று விஞ்ஞானிகள் அப்போது கைது செய்யப்பட்டு, சுமார் 50 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்டது. அவர்களது விசாரணையின் முடிவில், 1996ம் ஆண்டு மே மாதம் “நம்பி நாராயணன் மீதான குற்றசாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை; வழக்கை முடிக்கலாம்,” என பரிந்துரைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 1998ம் ஆண்டு இது வெறும் சந்தேகத்தின் பேரிலான வழக்கு எனக் கூறி, இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து இந்த வழக்கிலிருந்து நம்பி நாராயணன் விடுவிக்கப்பட்டார்.

“விண்வெளியில் இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் இலக்கோடுதான் இஸ்ரோவில் பணிக்குச் சேர்ந்தேன். ஆனால், வழக்கில் சிக்க வைத்து, என்னை மேலே வர முடியாத நிலைக்கு ஆளாக்கினர். நான் எந்த தவறும் செய்யாத போது ஏற்படும் நல்லது, கெட்டதை ‘விதி' என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த 'விதி'யை மாற்ற, இன்னொரு 'விதி' தேவைப்பட்டது. விதியின் விளைவு தான் இப்போதைய தீர்ப்பு. இது சட்ட விதி!”

”இலக்கிலிருந்து வழிமாறிப் போகும்போது, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என எண்ணுபவன் அல்ல நான். அதில் எனக்கான இலக்கை நோக்கி ஓடினேன். வேறு யாரும் 24 ஆண்டுகள், மனம் தளராது போராடுவார்களா என்பது சந்தேகமே!” என தனது சட்ட போராட்ட வெற்றி பற்றி கூறியுள்ளார் நம்பி நாராயணன்.

மீண்டும் இஸ்ரோவில் அவர் பணியில் சேர்ந்த போதும், சிறிய பணிகள் மட்டுமே அவருக்கு ஒதுக்கப்பட்டது. 2001ம் ஆண்டு அவர் ஓய்வு பெறும் வரை பெரிய பொறுப்புகள் ஏதும் அவருக்குத் தரப்படவில்லை.

தான் குற்றமற்றவர் என நிரூபணமானதால், இந்த வழக்கால் தான் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சந்தித்த பாதிப்புகளுக்கும், அவமானங்களுக்கும் எதிராக மனித உரிமை ஆணையம் மூலம் 1999ம் ஆண்டு கேரள அரசிடம் இழப்பீடு கோரினார் நம்பி நாராயணன்.

இந்த வழக்கில் அவர் வெற்றியும் பெற்றார். 2001ம் ஆண்டு நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குமாறு கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டதன் பேரில் 10 லட்சம் அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்த இழப்பீட்டு தொகையை மேலும் உயர்த்தி வழங்க உத்தரவிடக்கோரி, திருவனந்தபுரம் சார்பு நீதி மன்றத்தில் நம்பி நாராயணன் மனு தாக்கல் செய்தார். எனவே, 2020ல் நம்பி நாராயணனுக்கு 1 கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்டஈடாக கேரள அரசு வழங்கியது.

“விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிப் பணிகள் எனது வாழ்வில் ஒரு பகுதி என்றால், எனக்கு நடந்த அநீதிக்கு எதிராக நான் நடத்திய சட்டப் போராட்டம் என் வாழ்வின் மற்றொரு பகுதி...” என இந்த சட்டப் போராட்டங்கள் குறித்து நம்பி நாராயணனே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நம்பி நாராயணின் மனக் காயங்களுக்கு மருந்தாக 2019ம் ஆண்டு அமைந்தது. இந்த ஆண்டில்தான், அவருக்கு கூடுதலாக ரூ.1.30 கோடி இழப்பீடு வழங்க கேரள அரசு முடிவு செய்தது. மேலும் அதே ஆண்டு அவருக்கு பத்மபூஷன் விருதும் வழங்கி இந்திய அரசு கவுரவித்தது.

“வெளிநாடுகளுக்கு ரகசிய தகவல் அளித்ததாக என் மீது குற்றம்சாட்டப்பட்டதால், எனது பெயர் நாடு முழுவதும் தவறான முறையில் பிரபலம் அடைந்தது. தற்போது, இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் எனது பங்களிப்புக்கு இறுதியாக அங்கீகாரம் கிடைத்துள்ளது. எனக்குக் கிடைக்கப்பெற்ற பத்மபூஷன் விருதினை எனது பணிக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன்,” என அப்போது விருது குறித்து நம்பி நாராயணன் கூறியிருந்தார்.

‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்தில் நம்பி நாராயணன் எப்படி தன் மீது சுமத்தப்பட்ட பழியில் இருந்து மீண்டு வந்தார், சட்டப்படி தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார் என்பது பற்றிய காட்சிகள் உணர்வுப்பூர்வமாக இருக்கும் என்பதாலேயே, இப்போதே அப்படம் பற்றிய எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது.

இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், “விக்ரம் வேதா படம் முடிந்ததும், இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் எடுக்க கூறி எனது நண்பர் பரிந்துரைத்தார். பாகிஸ்தான் ராணுவத்திற்கு தேசிய ரகசியத்தை தெரிவித்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட அந்த விஞ்ஞானி, சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார்.

“அவர் நாகர்கோவிலில் பிறந்த தமிழர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது என்பதும், நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் மகத்தானது என்பதும், பொதுமக்களின் பார்வையில் படாமல் இருப்பதும் ஏமாற்றமாக இருந்தது. அதனால்தான் நான் 'ராக்கெட்ரி' தயாரிக்க முடிவு செய்தேன்,” என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக வாழ்ந்து மறைந்த அல்லது தற்போது வாழும் தலைவர்களின், சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. மக்களிடையே அவற்றிற்கு கிடைக்கும் வரவேற்பு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோகமாக இருப்பதே அதற்கு முக்கியக் காரணம். அந்த வெற்றிப்பட வரிசையில் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ம் இணையும் என நம்பலாம்.

Latest

Updates from around the world