ஜெய்பீம், தடுப்பூசி, நீரஜ் சோப்ரா: 2021 கூகுள் தேடலில் டாப் டிரென்டிங் என்னென்ன?
2021ம் ஆண்டில் கூகுள் தளத்தில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களை கூகுள் இந்தியா அறிவித்துள்ளது. கிரிக்கெட் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தாலும் தடுப்பூசி, நீரஜ் சோப்ரா, ஜெய்பீம் டாப் டிரென்டிங்கை தனது வசமாக்கியுள்ளன.
இந்தியாவில் 2021ம் ஆண்டில் அதிக அளவில் கூகுளில் தேடப்பட்டவற்றின் ‘Year in Search’ முடிவுகளை கூகுள் இந்தியா அறிவித்துள்ளது. இந்த Year in search ஒரு ஆண்டில் செய்திகள், விளையாட்டு, பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றில் மிக டிரென்டிங்கானவை எவை என்பவற்றை பட்டியலிடுகின்றன
இந்த ஆண்டுக்கான கூகுள் தேடல் பட்டியல் வழக்கமான போக்குகளோடு, சில சுவாரஸ்யமான புதிய அம்சங்களையும் கொண்டுள்ளது. கிரிக்கெட், ஐபிஎல், கோவிட் ஆகிய பதங்கள் தேடலில் இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் நிலையில், திரைப்படப் பிரிவில் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த சூர்யாவின் ஜெய்பீம் தொடர்பான தேடல் முதலிடம் பெற்றுள்ளது.
இணையத்தில் தகவல்களைத் தேட பெரும்பாலானோர் கூகுள் தேடியந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர். கூகுள் தனது தேடியந்திரத்தில் அதிகம் தேடப்படும் பதங்களை ஆய்வு செய்து அவற்றின் பட்டியலை ஆண்டு இறுதியில் வெளியிட்டு வருகிறது.
எப்பவுமே ராஜா
வழக்கம் போல இந்த ஆண்டும் தேடல் பட்டியலில் சிகரம் வைத்துக் கொண்டு ராஜாவாக இருக்கிறது கிரிக்கெட். Indian Premier League மற்றும் ICC T20 World Cup தேடல்களில் டாப் இடத்தை தக்க வைத்திருக்கிறது. கால்பந்து விளையாட்டிற்கான ஆர்வம் முன்னேறி இருக்கிறது என்பதனை Euro Cup, and Copa America தேடல் பட்டியலில் இடம்பிடித்திருப்பதை வைத்து அறிய முடிகிறது.
இந்த ஆண்டின் மற்றொரு குறிப்பிடும் படியான நிகழ்வு ‘Tokyo Olympics’ல் இந்திய விளையாட்டு வீரர்களின் அசத்தலான செயல்திறன். ஆன்லைன் கேம்களில் பிரபலமான Free Fire மட்டுமே ஒட்டுமொத்த டிரென்டிங்கில் இடம்பிடித்திருக்கிறது, இது ராயல் போர்ச்சண்டை விளையாட்டை பிரதிபலிப்பதால் அதிக புகழை பெற்றுத் தேடலிலும் டாப்பாக இருந்திருக்கிறது.
கோவிட் பற்றிய தேடல்கள் என்னென்ன?
பெருந்தொற்று பரவல் காரணமாக கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய தேடல்கள் அதிக டிரெண்டிங்கில் இருந்திருக்கிறது. தடுப்பூசிகளின் இருப்பு, தடுப்பூசிகளைத் தேர்வு செய்தல் என்று பல வகையான தகவல்களை COWIN, Covid Vaccine என்று மக்கள் தேடியுள்ளனர். ‘Near me’ Covid Vaccine, Covid tests, Covid hospital உள்ளிட்டவை டாப் தேடல்களாக இருந்திருக்கிறது.
அதே போன்று oxygen cylinders and CT scans போன்றவையும் பெருந்தொற்றின் பிரதிபலிப்பால் அதிகமாக தேடப்பட்டிருக்கிறது. இதனுடன் உணவு டெலிவரி, உணவு பார்சல் வசதியுடைய ரெஸ்டாரண்ட் போன்றவையும் கூட பொதுமுடக்க காலத்தில் தேடப்பட்டிருக்கிறது.
பிரபலங்கள் தேடலில் நீரஜ் டாப்
பிரபலங்கள் பற்றிய தேடல் பட்டியலில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வரலாற்று சாதனையை நிகழ்த்தி சுதந்திர இந்தியாவிற்கு தடகளப் போட்டியில் முதல் முறை தங்கப்பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ரா முதல் இடத்தில் இருக்கிறார். அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்திருப்பவர் போதைப்பொருள் வழக்கில் சிறை சென்ற பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்.
டெஸ்லா நிறுவனர் மற்றும் சமூக ஊடகத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் எலக் மஸ்க்கும் பிரபலங்கள் வரிசையில் அதிகம் தேடப்பட்டிருக்கிறார். இவர்கள் மட்டுமின்றி நடிகர் விக்கி கௌசல், நடிகை ஷெனாஸ் கில் மற்றும் ராஜ் குந்த்ரா பற்றிய விவரங்களையும் தேடிப்படித்துள்ளனர் மக்கள்.
ஜெய்பீம்
2021ம் ஆண்டின் ஆரோக்கியமான திரைப்படம் என்று அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது தமிழ் பிளாக்கபஸ்டர் படமான ஜெய்பீம், திரைப்படங்கள் வரிசையில் இப்படம் அதிகம் தேடப்பட்டு டாப் இடத்தில் இருக்கிறது. இருளர் வாழ்க்கையை பேசும் த.செ.ஞானவேலு இயக்கிய நடிகர் சூர்யா நடித்துள்ள ’ஜெய்பீம்’ திரைப்படம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த இந்தத் திரைப்படம் ஏற்கனவே ஐஎம்டிபி இணையதளத்தில் படங்கள் பட்டியலில் முதலிடம் பெற்ற நிலையில் தற்போது கூகுள் தேடல் பட்டியலிலும் முதலிடம் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாலிவுட் பிளாக்பஸ்டர் படமான Shershaah இரண்டாவது இடத்திலும், இந்திப் படங்களான Radhe 3வது இடத்திலும், பெல் பாட்டம் 4வது இடத்திலும், ஹாலிவும் படமான Eternals 5வது இடத்திலும், நடிகர் விஜய் நடித்த ’மாஸ்டர்’ படம் 6வது இடத்திலும், சூர்யவன்சி 7 வது இடத்திலும், Godzilla Vs Kong 8வது இடத்திலும், த்ரிஷ்யம் 2 9வது இடத்திலும், Bhuj : The Pride of India 10வது இடத்தையும் தேடுதல் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
தேடலில் கஷாயம் செய்முறை
Recipes பிரிவில் Enoki Mushrooms டாப் டிரெண்டிங். மோதகம் மற்றும் குக்கீஸ் வீட்டு ஸ்பெஷல்களான மெத்தி மட்டர் மலாய், பாலக் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வீட்டு வைத்தியங்களான கஷாயம் உள்ளிட்டவையும் செய்முறைகளில் டாப் இடத்தை பெற்றுள்ளன.
சுவாரஸ்யமான 'எப்படி, என்ன' தேடல்கள்
கோவிட் - 19 பற்றிய செய்திகள் ஸ்பாட் லைட்டாக தொடர்ந்து இருந்தாலும், உலக நிகழ்வுகளிலும் மக்கள் ஆர்வம் காட்டி இருக்கின்றனர். டோக்கியோ ஒலிம்பிக்ஸ், கருப்பு பூஞ்சை, ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு வங்கத் தேர்தல்கள் உள்ளிட்ட தலைப்புகளில் தேடிப் படித்துள்ளனர்.
இந்த ஆண்டின் 'எப்படி' தேடல் பட்டியலில் கோவிட் தடுப்பூசிக்கு எப்படி பதிவு செய்வது, தடுப்பூசி சான்றிதழை எப்படி பதிவிறக்கம் செய்வது, ஆக்சிஜன் அளவை எப்படி அதிகரிப்பது ஆகியவை டாப் மூன்று தேடல்களாகும். ‘என்ன’ பிரிவில் கறுப்பு பூஞ்சை என்றால் என்ன, தாலிபன் என்றால் என்ன,ரெம்டெசிவிர் என்றால் என்ன உள்ளிட்டவை தேடப்பட்டிருக்கின்றன.