தடைகளைத் தாண்டி கார்ப்பெட் ஏற்றுமதி உலகில் கோலோச்சும் அப்பா-மகன்!

1978-ம் ஆண்டு நந்த் கிஷோர் சௌத்ரி நிறுவிய ஜெய்ப்பூர் ரக்ஸ் நிறுவனம் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 40,000 நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களுடன் இணைந்து பணியாற்றுகிறது.
2 CLAPS
0

ராஜஸ்தானில் இருக்கிறது சுரு என்கிற சிறிய கிராமம். நந்த் கிஷோர் சௌத்ரி என்பவரின் அப்பா இங்கு ஷூ கடை வைத்திருந்தார். நந்த் கிஷோர் 1975-ம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்ததும் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்த சமயத்தில் தொழில் நஷ்டத்தில் இருந்தது.

நந்த் கிஷோருக்கு தொழில்முனைவில் ஆர்வம் இருந்தது. வங்கியில் வேலை கிடைத்தபோதும் அதில் சேரவில்லை. இந்தியாவில் 1970-80 ஆண்டுகளில் கார்ப்பெட் துறை சிறப்பாக வளர்சியடைந்து கொண்டிருந்தது. நந்த் கிஷோரின் நண்பர் இந்தத் துறையில் செயல்படுவது குறித்து யோசனை கூறியுள்ளார். அவருக்கும் இந்த யோசனை பிடித்திருந்தது.

1978-ம் ஆண்டு நந்த் கிஷோர் தனது அப்பாவிடம் 5,000 ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு ஜெய்ப்பூர் ரக்ஸ் (Jaipur Rugs) தொடங்கினார். அப்போதிருந்து இந்நிறுவனம் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகிறது.

இரண்டாம் தலைமுறை தொழில்முனைவரான நந்த் கிஷோரின் மகன் யோகேஷ் சௌத்ரி அப்பாவின் வணிக முயற்சி குறித்தும் இத்தனை ஆண்டுகளாக நிறுவனத்தை ந்டத்தி வந்தது குறித்தும் எஸ்எம்பிஸ்டோரி இடம் பகிர்ந்துகொண்டார். யோகேஷ் சௌத்ரி ஜெய்ப்பூர் ரக்ஸ் குழுமத்தின் இயக்குநராக உள்ளார்.

ஆரம்பகட்ட பயணம்

நந்த் கிஷோர் பாரம்பரிய மார்வாரி குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பத்தில் சாதி ரீயான பாகுபாடுகள் அதிகம். மற்றொரு புறம் ராஜஸ்தானைச் சேர்ந்த நெசவாளர்கள் தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவர்களாக பார்க்கப்படுபவர்கள். நந்த் கிஷோர் இவர்களுடன் இணைந்தே பணியாற்றவேண்டிய சூழல் இருந்தது.

“என் அப்பா தீண்டத்தகாத பிரிவினருடன் இணைந்து வேலை செய்ததால் அவரை ஒதுக்கிவைத்தார்கள்,” என்கிறார் யோகேஷ்.

குஜராத்தில் திறன்மிக்க ஊழியர்கள் அதிகம் கிடைப்பார்கள். நெசவாளர்கள், கைவினைஞர்கள் போன்றோருடன் நேரடியாகத் தொடர்புகொள்ள முடியும். இதனால் இடைத்தரகர்கள் தலையீடு தவிர்க்கப்படும். இதுபோன்ற சாதகமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு 1990-ம் ஆண்டு யோகேஷின் அப்பா குஜராத்திற்கு மாற்றலாக முடிவு செய்தார்.

இதனால் இரு தரப்பினருக்கும் பலன் கிடைத்தது. நெசவாளர்களின் வருவாய் அதிகரித்தது.

“கைவினைஞர்களின் வருவாய் அதிகரித்ததும் அவர்கள் மேலும் கடினமாக வேலை செய்யத் தொடங்கினார்கள்,” என்கிறார் யோகேஷ்.

2006-ம் ஆண்டு யோகேஷ் மாசசூசெட்ஸ் பாஸ்டன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். ஒரு மாத விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்தார். அந்த சமயத்தில் கொள்ளை சம்பவம் ஒன்று நடந்தது. அத்துடன் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் பலர் வெளியேறினார்கள். யோகேஷ் கல்லூரிப் படிப்பை நிறுத்திகொண்டு வணிகத்தில் முழுநேரமாக சேரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

2008-2009 காலகட்டத்தில் கடுமையான நிதி நெருக்கடியை இந்நிறுவனம் சந்தித்துள்ளது. எத்தனையோ சாவல்களைக் கடந்து இன்று இந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.

இன்று ஜெய்ப்பூர் ரக்ஸ் நிறுவனத்தில் இந்தியாவின் 600-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 40,000-க்கும் அதிகமான நெசவாளர்களும் கைவினைஞர்களும் பணியாற்றுகிறார்கள். ஆரம்பத்தில் இரண்டு நெசவுத் தறிகளுடன் செயல்பட்ட நிலையில் தற்போது 7,000 தறிகள் இயங்கி வருகின்றன. 2020 நிதியாண்டில் இந்நிறுவனம் 142 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

ஜெய்ப்பூர் ரக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் கைவினைஞர்களுக்கு கார்ப்பெட்டின் சதுர அடியை அடிப்படையாகக் கொண்டு ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு கைவினைஞரின் மாத வருமானம் கிட்டத்தட்ட 8,000-12,000 ரூபாய்.

வணிக மாதிரி

கைகளால் குஞ்சம் கட்டப்படும் கார்ப்பெட்டுகள் (Hand-tufted), கைகளால் முடிச்சு போடப்படும் கார்ப்பெட்டுகள் (Hand-knotted) என இரு வகைகளையும் ஜெய்ப்பூர் ரக்ஸ் வழங்குகிறது.

இந்நிறுவனம் டிஜிட்டல் ரீதியாக செயல்படுகிறது. டிசைன் மற்றும் பிரிண்டிங் செய்ய CAD பயன்படுத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு Tana Bana என்கிற செயலியையும் ஜெய்ப்பூர் ரக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

“நெசவாளர்கள் வேலையை முடிக்கும் விகிதம், மூலப்பொருட்களின் இருப்பு போன்றவற்றைக் கண்காணிக்க இந்தச் செயலி உதவுகிறது. நிகழ்நேர அடிப்படையில் அலர்ட்களை செயலி அனுப்புகிறது. இதனால் மனிதத்தலையீடின்றி ஆரம்பகட்டத்திலேயே பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடிகிறது,” என்கிறார் யோகேஷ்.

பி2பி வணிகத்தில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் சமீபத்தில் சொந்தமாக வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிறுவனம் டெல்லி, பம்பாய், ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகளில் ஸ்டோர்களைக் கொண்டுள்ளது. இதன் கார்ப்பெட்டுகள் 5,000 ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை

இந்திய கம்பளங்களின் கைவினைத்திறன் உலகப் புகழ் பெற்றது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கம்பளங்களில் 90 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதை ஒப்புக்கொள்ளும் விதமாக நிறுவனத்தின் 85 சதவீத வருவாய் ஏற்றுமதி மூலம் கிடைப்பதாக யோகேஷ் குறிப்பிடுகிறார். அமெரிக்கா, ஜப்பான், மத்திய கிழக்கு, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, பிரேசில் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

இந்நிறுவனம் சில்லறை வர்த்தகத்தில் கவனம் செலுத்த உள்ளதால் இந்த போக்கு இனி வரும் நாட்களில் மாறும் என்கிறார் யோகேஷ்.

கோவிட்-19

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் ஜெய்ப்பூர் ரக்ஸ் நிறுவனத்தைப் பொருத்தவரை நெசவாளர்களும் கைவினைஞர்களும் முன்பிருந்தே தொலை தூரத்தில் இருந்து பணியாற்றுகிறார்கள் என்பதால் பெரியளவில் சிக்கல்கள் ஏற்படவில்லை.

ஐரோப்பிய நாடுகளில் தேவை குறைந்தபோதும் அமெரிக்க சந்தையில் 20 சதவீதம் வரை தேவை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் பெங்களூரு மற்றும் ஜெய்ப்பூரில் ஸ்டோர்கள் திறக்க திட்டமிட்டிருப்பதாகவும் இந்திய சந்தையில் மேலும் சிறப்பாக செயல்பட திட்டமிட்டிருப்பதாகவும் யோகேஷ் தெரிவித்தார்.

ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கௌஷல் | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world